உயிரினங்களின் மீதும் நேசம் படரட்டும்…

மனிதர்களின் அத்துமீறல்கள் இயற்கையின் மீது படரும் போது இயற்கை வெகுண்டெழுவதை சமீப காலங்களில் அதிகம் காண முடிகிறது.

அதன் வரிசையில் கேரள மாநிலம் வயநாட்டில் நடந்த நிலச்சரிவு தனுஷ்கோடியை மீண்டும் நினைவுபடுத்தி இருக்கிறது.

எந்த மாநிலங்களில் சேதங்கள் நடந்தாலும் பாதிக்கப்பட்ட மாநிலத்திற்கு அனைத்தையும் தாண்டி பொருளாதார உதவிகள், உடல் உழைப்புகள் என களத்தில் நிற்பது, மனிதம் இன்றும் நிலைத்திருக்கிறது என்பதற்கான அடையாளங்கள்.

மனித சமூகத்திற்குள் பாதிப்புகள் ஏற்படும்போது அவர்களுக்கு உதவுவதும் உடல், பொருள் உதவிகள் செய்வதும் அவர்களுக்காக பிரார்த்திப்பதும் எதார்த்தம்.

ஆனால் மனிதர்கள் பாதுகாப்பு தேடி செல்லும் போது, விலங்குகள் அவர்களை பாதுகாத்த அதிர்ச்சி நிறைந்த சம்பவம் வயநாடு நிலச்சரிவில் நடந்தேறி இருக்கிறது.

வயது முதிர்ந்த மூதாட்டியும் ஒரு சிறு குழந்தையும் நிலச்சரிவில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள ஓடிய போது, எதிரில் ஒரு யானை நின்றிருந்தது.

என்ன செய்வதென்றே புரியாமல் உச்சகட்ட பயத்தில் யானையிடம் அழுது புலம்பி தங்கள் கஷ்டங்களை பகிர்ந்து இருக்கிறார்கள் அந்த மூதாட்டியும் குழந்தையும்.

அது போல் 2001-ஆம் ஆண்டு குஜராத்தில் ஒரு சம்பவம் நடந்தது

பூகம்பம் வருவதற்கு முன்பாக தனது எஜமானர்களை இரவோடு இரவாக கத்தி, குரைத்து அவர்களை வீட்டிலிருந்து இறக்கியது ஒரு நாய். அவர்கள் அனைவரும் இறங்கியதும் கட்டிடம் இடிந்து நொறுங்கியது.

தனக்கு சோறு கொடுத்த எஜமானர்களை காப்பாற்றி விட்டு அமைதியோடு நின்றிருந்த நாயின் பெருந்தன்மை, அன்றைய காலத்தில் விலங்குகளின் மீதான பார்வையையும் கரிசனத்தையும் அதிகரிக்க செய்திருந்தது.

மனிதர்களை விலங்குகள், உயிரினங்கள் காப்பாற்றும் நிகழ்வுகள் செய்திகள் ஒன்றல்ல; இரண்டல்ல..

இது போன்ற சம்பவங்கள் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன தெரியுமா?

மனித நேயம் வளர்ந்து இருப்பது போல் மிருகத்தின் மீதான நேயமும் அதிகரிக்க வேண்டும் என்பதுதான்.

கொரோனோ, பிளேக், பன்றி காய்ச்சல் போன்ற பெரும் நோய்கள் வந்து மனித உயிர்களை சூறையாடியதன் பின்னணியில், விலங்குகளை பாதுகாக்க தவறிய மனித இனம் உண்டு என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருப்போம்?

சரி! கொரோனா போன்ற பெருந்தொற்றிற்கும் விலங்குகளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

வவ்வால், பன்றி, கோழி, எலி, நாய் குரங்கு போன்ற உயிரினங்களினால்தான் இது போன்ற நோய்கள் பரவுகின்றன.

இந்த நோய்களுக்கும் இதுபோன்ற விலங்குகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதை விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் [Zoonotic Researchers] ஆராய்ச்சியை மேற்கொண்டார்கள்.

50 பேர் இருக்க வேண்டிய ஒரு அறையில் 150 நபர்கள் அமர்ந்தால் என்னவாகும்?

நெருக்கடி, மூச்சுத் திணறல், மனக்கஷ்டம், அசாதாரணமான சூழல், எதார்த்த நிலைக்கு அப்பாற்படல் போன்ற நிலைகள் உருவாகும்.

இந்த உலகம் என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அனைத்து உயிரினங்களுக்கும் தான்.

இதே உலகில் தான் நம்மை சுற்றி நமது கண்களுக்குத் தெரிந்த, கண்களுக்கு தெரியாத உயிரினங்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

மனிதனுடைய பேராசையின் காரணமாக வீடுகள் கட்டும் போது, அல்லது உயிரினங்களின் விலங்குகளின் இடங்களை ஆக்கிரமிக்கும் போது, உயிரினங்கள் வாழ்வதற்கான நெருக்கடியை சந்திக்கின்றன.

அந்த நெருக்கடி அதன் உடல்களில் நொதிக்கின்ற நொதிகளின் மூலம் வெளிவந்து அது நோயாக மாறுகிறது என்ற ஆராய்ச்சி முடிவுகள், கொரோனா காலத்தில் பேசப்பட்டதை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

வீடுகளின் முற்பகுதியில் உயிரினங்களுக்கும் [ஆடு, மாடு, கோழி] நடுப்பகுதியில் மனிதர்களுக்கும் பின்பகுதியில் தண்ணீர் வசதிகளோடு கூடிய சிறப்பு அம்சங்களுடன் கூடிய வீடுகளின் அமைப்பும் அதன் சாரம்சமும் இன்று மாறியிருக்கிறது.

மனிதர்களையும் சக உயிரினமாக பார்க்கும் விலங்குகளின் நேசத்தையும் அதன் நேயத்தையும் நாம் எப்போது உணரப் போகிறோம்?

செய்யத் தவறினால், இந்த பிரபஞ்சத்தில் நமது இருப்பின் நிலை குறைந்து போகும் என்பதில் சந்தேகமில்லை.

முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணை பேராசிரியர், பொருளாதார துறை
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
கைபேசி: +91 9600094408