உயிரினங்களின் வண்ண பார்வை பற்றி அறிவோம்

விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு வண்ண பார்வை உண்டா? அவை மனிதர்களைப் போல நிறங்களை வேறுபடுத்தி அறிகின்றனவா? என்ற கேள்வியை எனது மகள் கேட்டாள்.

அதன் அடிப்படையில் எழுந்த உயிரினங்களின் வண்ண பார்வை கட்டுரை இதோ உங்களுக்காக.


உலகில் உள்ள நகரும் உயிரினங்களில் சில இரண்டு நிறங்களை மட்டும் அறிகின்றன. ஒரு சில மனிதர்களைப் போல் ஏழு விதமான வண்ணங்களை பிரித்தறிக்கின்றன.

வேறு சில மனிதக் கண்களால் பார்க்க முடியாத புறஊதா, அகச்சிவப்பு வண்ணங்களை பிரித்து அறிகின்றன. ஒரு சில உயிரினங்களால் நிறங்களைப் பிரித்து அறிய முடியாமல் நிறக்குருடுகளாக உள்ளன.

சில உயிரிகளால் சூரிய ஒளியில் மட்டும் நன்கு நிறங்களைப் பிரித்தறிய முடிகிறது. எடுத்துக்காட்டாக மனிதனைக் கூறலாம்.

வேறு சில உயிரினங்கள் மங்கிய ஒளி அல்லது இருட்டில் கூட நிறங்களைப் பிரித்தறிகின்றன. எடுத்துக்காட்டாக யானை, பருந்து, அந்துப்பூச்சியைக் கூறலாம்.

 

 

உயிரினங்களின் கண்கள் எவ்வாறு நிறங்களைப் பிரித்து அறிகின்றன?

ஒளிக்கதிரானது கண்களில் உள்ள ரெக்டீனாவில் (விழித்திரை) படும்போது ஃபோட்டோ ரெசிப்டார்கள் (ஒளிச்சேர்க்கையாளர்கள்) எனப்படும் ஒளி உணர்திறன் செல்களால் உள்வாங்கப்படுகின்றன.

ஒளி உணர்திறன் செல்கள் கூம்புகளாகவும், தண்டுகளாகவும் உள்ளன. கண்ணில் கூம்புகளும், தண்டுகளும், மூளையானது ஒளிஅலைகளை வண்ணம், வடிவம் மற்றும் இயக்கம் எனப் பிரித்து அறியும் வண்ணம் மாற்றுகிறது.

கூம்புகள் வண்ணங்களையும், தண்டுகள் ஒளியையும் மூளைக்கு விளக்குகின்றன. பெரும்பாலும் எல்லா விலங்குகளும் தண்டுகளையும், கூம்புகளையும் கொண்டுள்ளன.

அரிதாக சில விலங்குகளில் கூம்புகள் இருப்பதில்லை. அவை நிறக்குருடுகளாக உள்ளன.

மனிதனில் வண்ணங்கள் அறியப்படும் முறை

மனிதக்கண்களில் மூன்று வகையான வண்ண வாங்கிகள் (கூம்புகள்) காணப்படுகின்றன. ஒளியின் நீண்ட, மிதமான, குறுகிய அலைநீளங்களைக் கொண்ட கதிர்கள் சிவப்பு, பச்சை, ஊதா நிறங்களாக இவ்வண்ண வாங்கிகளால் மாற்றப்படுகின்றன.

இம்மூன்று வண்ண வாங்கிகளிலிருந்தும் வரும் சிக்னல்களை ஒப்பிட்டு நம்மால் வானவில்லின் ஏழு நிறங்களையும் காணமுடியும். ஆனால் மனிதனால் நிறங்களை நன்கு பிரித்தறிய அதிக ஒளி தேவை.

மனிதனில் உள்ள வண்ண வாங்கிகள் அரை நிலவொளியைவிட இருளும் போது தனது செயல்பாடுகளை நிறுத்தி விடுகின்றன.

அதாவது இருளில் நமது கண்களில் உள்ள கூம்புகள் வேலை செய்யாது. தண்டுகள் மட்டும் வேலை செய்கின்றன.

ஆதலால் இருளில் நம்மால் வண்ணங்களைப் பிரித்தறிய முடியாமல் எல்லா பொருள்களும் சாம்பல் நிறநிழலாக மட்டுமே தெரிகின்றன.

சில விலங்குகள் மனிதனைவிட வேறு விதமான நிறங்களைப் பிரித்தறியும் தன்மையையும், இருளில் நன்கு பார்வைத் திறனையும் கொண்டுள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

குறைந்த நிறங்களை அறியும் தன்மையும், இருளில் நல்ல பார்வைத்திறனும் உடையவை

பூனைகளும், நாய்களும் தங்களது கண்களில் இரண்டு விதமான வண்ண வாங்கிகளைக் (கூம்புகள்) கொண்டுள்ளன. இவைகளில் சிவப்புநிற வண்ண வாங்கிகள் காணப்படுவதில்லை. எனவே இவற்றால் சில நிறங்களை மட்டுமே பிரித்தறிய இயலும்.

 

 

இவைகளால் பொருட்களை ஊதா மற்றும் மஞ்சள் நிறநிழல்களாக மட்டுமே காண இயலும். உலகில் உள்ள பெரும்பாலான பாலூட்டிகள் இவ்வாறானவையாகவே காணப்படுகின்றன.

பூனைகள் மற்றும் நாய்கள் தங்கள் கண்களில் அதிகளவு தண்டுகளைக் கொண்டுள்ளன. ஆதலால் அவைகள் இருளில் மனிதனைவிட அதிக பார்வைத்திறனைக் கொண்டுள்ளன.

ஆனால் நாய், பூனைகளைவிட மனிதனால் பலவண்ணங்களைப் பிரித்தறிய இயலும்.

பூச்சிகளால் காணக்கூடிய நிறங்கள்

வண்ணத்துப்பூச்சி, தேனீ உள்ளிட்ட பூச்சிகள் நான்கு வகையான வண்ண வாங்கிகளைக் கொண்டுள்ளன. அவைகளால் நிறமாலைமானியால் காணப்படும் புறஊதா நிறங்கள் உள்ளிட்டவைகளைக் காண இயலும்.

 

 

இத்திறமையால் இந்த கூடுதல் வண்ண வாங்கிகளைக் கொண்டுள்ளதால் அவைகளால் பூக்களின் உள்ளே சென்று அவைகளின் உணவுகளான மகரந்தத்தைச் சேகரிக்க இயலும்.

மேலும் இவை இப்பூச்சிகளின் எதிரிகளை அடையாளம் காணவும் உதவுகின்றன.

வெப்பஉணர்திறனைப் பயன்படுத்தி பார்த்தல்

மலைபாம்புகள், ரேடில்ஸ்நேக், பியாஸ் உள்ளிட்ட பிட் வைப்பர் இனத்தைச் சார்ந்த பாம்புகளால் அகச்சிவப்பு நிறங்களைக் காண முடியும்.

 

 

அதாவது அவற்றால் வெப்ப உணர்வின் மூலம் பார்க்க முடியும். இவ்வகைப் பாம்புகளில் மூக்கிற்கும், கண்களுக்கும் இடையில் அமைந்துள்ள சிறப்பு குழியால் நிமிட வெப்பநிலை மாற்றத்தை உணரமுடியும்.

இதனால் அருகில் வருகின்றன பொருட்களின் வெப்பநிலையைக் கொண்டு அவை மிகத்துல்லியமான அகசிவப்பு பார்வைத்திறனை பெறுகின்றன.

இப்பாம்புகளின் இப்பார்வைத்திறத்தால் ஒரு மீட்டர் தூரத்தில் உள்ள இரைகளைக்கூட இவற்றால் கண்டறிய இயலும். மேலும் 0.002 டிகிரி வெப்பநிலை மாற்றத்தையும் இவற்றால் உணர முடியும்.

இருளில் வண்ணங்கள் காணும் உயிரினங்கள்

மனிதனைப்போல் பல்லிகள் இருளில் 350 மடங்கு நிறங்களைப் பிரிந்தறியும் தன்மையைப் பெற்றுள்ளன.

 

 

அவற்றின் கண்களில் தண்டுகள் இருப்பதில்லை. இருளில் பல்லியின் கண்களில் உள்ள கூம்புகள் தண்டுகளாக செயல்படும் பரிணாமத்தைப் பெற்றுள்ளன.

அதேபோல் யானை, பருந்து, அந்துப்பூச்சி இருளில் பூக்களின் வண்ணங்களைப் பிரித்தறியும் தன்மையைப் பெற்றுள்ளன. இவை பகலில் வண்ணத்துப்பூச்சி செயல்படுவதைப் போல் இரவில் செயல்படுகின்றன.

லெமூர் என்ற உயிரினமானது இரவில் குறிப்பிட்ட பச்சை நிறநிழலான தாவரத்தை உண்ணுகின்றது.

 

 

இத்தாவர இலைகள் அதிக புரதச்சத்து கொண்டவை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

அதிக வண்ணங்களைப் பிரித்தறியும் உயிரினம்

உலகின் அதிக வண்ணங்களைப் பிரித்தறியும் உயிரினம் மான்டிஸ் இறால் ஆகும். இதனை வண்ணம் பார்க்கும் ராஜ்ஜியத்தின் ராஜா என்றே குறிப்பிடலாம்.

 

 

இது 16 வகையான வண்ணவாங்கிகளைக் கொண்டுள்ளது. மனிதனைப் போல் பத்து மடங்கு வண்ணங்களைப் பிரித்தறியும் தன்மையைக் கொண்டுள்ளது.

இவற்றால் அகச்சிவப்பு முதல் புறஊதா வரை உள்ள வண்ணங்களையும், துருவமுனைப்புள்ள வண்ணங்களையும் காணமுடியும்.

இவற்றின் கண்கள் தனித்தண்டுகளில் அமைந்து அவை தனித்தனியே உருளும் அமைப்பினைக் கொண்டுள்ளன. இவற்றால் ஒரே சமயத்தில் வெவ்வேறு திசையில் இருக்கும் எதிரிகளையும், இரையையும் அடையாளம் காணமுடியும்.

இயற்கையானது உணவு, இருப்பிடம், இனப்பெருக்கம் ஆகியவற்றிற்காக உயிரிகளுக்கு வண்ண பார்வையை வழங்கியுள்ளது. இயற்கை தந்த பரிசான வண்ண பார்வை மூலம் உலகைக் கண்டு மகிழ்வோம்.

வ.முனீஸ்வரன்

 

விலங்குகளுக்கு பற்கள் விழுமா?

உயிரினங்களில் தாய்மை

தமிழ்நாட்டை தாயகமாகக் கொண்ட பறவைகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.