ஒரு நிமிஷங்க!
நான் உயிர் பேசுகிறேன்.
ஆம் உயிரே தான்!
இன்று எல்லா நாளிதழ்களிலும்
உயிரற்ற என் உடலின் புகைப்படம்
முதல் பக்கத்தில்!
வானொலியில், தொலைக்காட்சியில்,
என்னைப்பற்றிய செய்தியே
தலைப்புச் செய்தியானது.
எல்லோரும்
என்னைப் பற்றியே பேசுகிறார்கள்.
மத்திய அமைச்சர் முதல்
பிரதம மந்திரி வரை
எனக்காக இரங்கல்
செய்தி அனுப்பியுள்ளனர் .
நேற்று வரை
சாதாரண
போராளி நான்;
இன்று இந்தியா
முழுவதும் தெரிகிறேன்.
காரணம்?
நேற்று நான்
படுகொலை செய்யப்பட்டுள்ளேன்.
நியாயத்திற்காக போராடி போராடி
பல சுயநலவாதிகளுக்கு பகையாளியானேன்.
தொடர்ந்து எனக்கு
கொலை மிரட்டல்கள்!
என் உயிருக்கு
பாதுகாப்பு கேட்டேன்.
நியாயத்திற்காக போராடிய நான்
என் உயிருக்கு
பாதுகாப்பு கேட்டும் போராடினேன்.
நியாயமும் கிடைக்கவில்லை.
என் உயிருக்கு பாதுகாப்பும்
கிடைக்கவில்லை.
இன்று!
உயிர் போனபின்
நாடு முழுவதும்,
எனக்காக
சாலை மறியல்கள்
ஊர்வலங்கள்
கொலையை கண்டித்து போராட்டங்கள்.
பத்திரிகைகள்
என் பக்க நியாயத்தை
வரிந்துகட்டி கொண்டு
எழுதியுள்ளன.
அதனால் என்கோரிக்கைகள்
நிறைவேறும் இனி!
என் உயிர் போன நிலையில்!
நியாயம் கேட்டதற்கு விலை?
என் உயிர்!
உயிரற்ற உடலால்.
உடலற்ற உயிரால்
இனி என்ன செய்ய முடியும்?
சிரிக்கிறேன்!!

கவிஞர் இரா.கலைச்செல்வி
சென்னை
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!