காலை மணி ஒன்பது. ஹாலில் ஒருவர் மட்டுமே படுக்கக்கூடிய உயரம் குறைவான மரக்கட்டிலொன்றில் பழைய காட்டன் புடவையொன்றைப் பிரித்துப் போட்டு அதன் மீது கண்கள் மூடிப் படுத்திருந்தார் கோமதி மாமி.
தலைக்கு ரெக்ஸின் செயற்கைத் தோலால் தைக்கப்பட்ட பஞ்சு அடைக்கப்பட்ட தலையணை.
இரவில் படுக்கும் பெட், தலையணை, பாய் இவற்றைப் பகல் வேளையில் பயன்படுத்தும் பழக்கமில்லாத ஆசாரம் பார்க்கும் குடும்பம்.
“கோமு! கோமதீ!” கணவர் பத்பநாபன் அழைக்கும் குரல் கேட்டுக் கண்களைத் திறந்தார் மாமி.
“ம்..”
“கோமு! ஒருவா காபினா தரட்டுமா? விடிகால நாலு மணிக்கே குடிச்சது”
“வேண்டாம். நாக்கெல்லாம் கசப்பா இருக்கு”
“டீ.. டீ.. போட்டுத் தரவா”
கணவரைப் பார்த்தால் பாவமாய் இருந்தது மாமிக்கு. எப்பிடி இருந்தவர் இப்பிடி ஆயிட்டார்.
குச்சிகுச்சியாய்க் கால்கள், கைகள். இரண்டு கால்களும் முழங்காலுக்குக் கீழ் பின்னோக்கி வளைந்து, மார்புக்கூடு பின்னி, விலா எலும்புகள் தெரியுமளவு இளைத்து முகத்தசைகள் தொங்கி, கண்கள் பஞ்சடைந்து இரு கண்களுக்கு கீழ் ஐபேக்ஸ் தோன்றி நிற்க கிட்டத்தட்ட மொட்டைத்தலை என்று சொல்லுமளவுக்கு பளபளக்கும் தலையில் பிச்சலம் பிச்சலமாய் ஃபேன் காற்றில் ஊசலாடும் நரைத்துப் போயிருந்த ஓரிரு முடிகள்.
பற்களே இல்லாத பர்ஸ் வாய் என்று எண்பத்திரெண்டு வயது முதுமை அவரை ஆவேசத்தோடுப் பற்றியிருந்தது.
எண்பதின் வயதுகளில் இருக்கும் எல்லோருமே இப்படி வற்றிப் போய் இருப்பதில்லை. சிலபேர் இப்படித்தான். அந்த சிலபேரில் பத்பநாபனும் ஒருவர்.
இருமுழங்கால் முட்டி வலியும் வீக்கமும் கான்ஸ்டிபேஷனும் அவ்வப்போது மூச்சுவிடுதலில் சிரமமும் ரத்த அழுத்தமும் லேசான ஷுகர் ப்ராப்ளமும் நடையில் தள்ளாட்டமும் திடீர்க் காது மந்த பிரச்சனையும் அவரைப் பாடாய்ப்படுத்திதான் வருகின்றன.
ஆனாலும் ஆசாரசீலர். காலை, சந்தி, மதியமாத்யானிகம், சாயரட்சை, சந்தியாவந்தனம் தினப்படி பூசைகள், ஸ்சோஸ்திரங்கள், விஸ்ணு சகஸ்ரநாமம், ருத்ரம், சமகம், புருஷ சூக்தம், லலிதா சகஸ்ர நாமம் இன்னும் பலப்பல அன்றாடம் செய்யத் தவறுவதே இல்லை.
நாள், நட்சத்திரம், ராகுகாலம், எமகண்டம், குளிகை, திதி, அமாவாசை, கிருத்திகை என்று பஞ்சாங்கம் பார்ப்பதே வேலை. இத்தனைக்கும் அரசு ஊழியராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
லஞ்சம் வாங்காத சத்தியசீலர் என்பதால் பிழைக்கத் தெரியாதவன் என்ற பட்டத்தோடு பணி ஓய்வு பெற்றவர். ஓய்வூதியம் பெறுபவர்.
இப்படிச் சிற்சில சிறப்புகள் இருந்தாலும் மகா முன்கோபி. ஆனால் இப்போது வயதாகிப்போய் ரத்தம் சுண்டி உடல் வற்றிப் போனதும் முன்போல் முன்கோபம் முன்னால் வந்து நிற்பதில்லை.
இப்போதெல்லாம் பிறர் கையை எதிர்பார்க்க வேண்டியுள்ளதே! கோபப்பட்டால் யார் உதவ வருவார்கள்?
எழுபது வயது வரை ஆரோக்கியமாகத்தான் இருந்தார். பத்துப் பனிரெண்டு வருஷமாகத்தான் உடல் சீர்கெட்டுப் போய் விட்டது. வீட்டுக்குள்ளேயே முடங்கி விட்டார்.
பத்மநாபனுக்கு முடியாமல் போனதும் மாமிதான் எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டார். மாமிக்கும் முடியத்தான் இல்லை.
எழுபத்தைந்து வயது எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுச் செய்வதற்கு இடம் கொடுக்கவில்லை. திண்டாடித்தான் போனார்.
“பேசாம எல்லா வசதியும் இருக்கறாப்ல இருக்குற முதியோர் இல்லதுலன்னா நாம ரெண்டு பேரும் போய்ச் சேந்துடுவமா?”
சிலசமயம் ரொம்ப முடியாமல் போய்விடும் மாமிக்கு. அப்போதெல்லாம் கணவரிடம் கேட்பார்.
“அப்பிடி ஏதாவது முதியோர் இல்லம் இருக்கான்னு கூகுள்ள தேடின்னா பாரேன் கோமதி! போய் அதுல சேந்துடுவம்”
“ம்.. பாத்துட்டேன்”
“ம்.. பாத்துட்டியா? சொல்லவேல்ல”
“ப்ச்.. ஒருத்தருக்கு மாசம் முப்பத்தஞ்சாயிரம் கட்டனுமாம். அட்வான்ஸ் ரெண்டு லட்சமாம்”
“ஐயோடி! அப்ப மாசம் ரெண்டு பேருக்கு எழுபதாயிரமா?
முன்பணம் ரெண்டுபேருக்கு நாலுலட்சமாவது அப்பிடி இப்பிடீன்னு பீராஞ்சு கட்டிடலாம்.
மாசம் எழுவதாயிரம். ம்கூம் நெனச்சுக்கூடப் பாக்க முடியாது கோமதி.
எனக்கு பென்ஷனென்ன அவ்வளவு தொக கட்றாப்லயா வருது?”
“ஏனாம், புள்ளேட்ட சொன்னா கட்ட மாட்டானா? வெளிநாட்டுல இருந்துண்டு புள்ளையும் நாட்டுப் பொண்ணும் வேணதெல்லாம் சம்பாதிக்கில. கேட்டா குடுக்கமாட்டேன்னு சொல்ல மாட்டான் நம்ம புள்ள. நம்ம நாட்டுப் பொண்ணும் குடுக்காதேன்னு தடுக்கற பொண்ணுல்ல. நல்ல பொண்ணு.”
“அதா வேண்டாங்கறது. புள்ள குடுக்கனும்னு நெனைக்காத கோமதி. எங்கயோ கண்காணாத தேசத்துக்குப் போயி சம்பாதிகுதுங்க. எதிர்காலத்துக்கு அவா சேமிச்சு வெச்சாதானே நல்லது. ரெண்டு கொழந்தேளாச்சு.
நாம என்ன அவாளுக்கு சொத்துபத்து சேத்தா வெச்சுருக்கோம். ஏதொ புள்ளய பி.இ.,வர படிக்க வெச்சோம். அதுங்க தங்களோட கைகொண்டு கர்ணம் போடுதுங்க. நாம அவாள அதக்குடு இதக்குடுன்னு தொந்தரவு பண்ணக்கூடாது”
“சரி சரி போறும் போறும். புள்ள குடுக்க மாட்டானான்னு சொன்னா போறும் கதாகாலஷேபம் பண்ண ஆரம்பிச்சுடுவேளே!”
“இல்ல கோமதி சொல்றேன்”
“ஏன் நீங்க ஒங்க அப்பா அம்மாவ கடசிவர வெச்சுக் காப்பாத்தல!”
“எங்கப்பா அம்மா கத வேற. அவா தம்பிடி வருமானம் இல்லாதவா. நா அப்பிடியா பென்ஷன் வாங்கறேன்ல”
“ப்ச்! நீங்க எதாவது சொல்லுவேள். நம்ம ரெண்டு பேருக்குமே வயசாயிடுத்து. அடிக்கடி மாத்தி மாத்தி ஒடம்பு படுத்தறது. மாசம் பத்து தடவ ஒங்கள அழச்சுண்டு டாக்டர்ட்ட போவேண்டிருக்கு.
டாக்டரண்டயா கூட்டம் கூட்டம் மாமாங்க கூட்டம். மணிக்கணக்குல காத்துண்ருந்து பாத்துட்டு வரதுக்குள்ள ஆவட்ட சோவட்ட இட்டுப் போடறது. முடியவே மாட்டேங்கறது.
ஆத்துக்கு வந்தா ஒக்காத்தி வெச்சு சாப்பாடுபோட யாரு இருக்கா? நானே சமச்சு வெச்சுட்டுப் போணும். நானே வந்து எடுத்துப் போட்டுண்டு சாப்படனும். முடியல முடியல.”
“இதே புள்ள, நாட்டுப் பொண்ணு கூட இருந்தா. நா இப்பிடி ஆம்பளைக்கு ஆம்பளையா பொம்மனாட்டிக்குப் பொம்னாட்டியா வயசான காலத்துல தவிக்க வேண்டாமானோ?”
“அடி போடி பைத்தியக்காரி”
“என்ன இப்பிடி பைத்தியக்காரிங்கறேள்? நாம செத்தா கொள்ளி வெக்கக் கூட புள்ள வரவேண்டாம். பாவம் அவன், வெளிநாட்டுலேந்து லட்சக்கணக்குல ரூவாயக் கொட்டி ஃப்ளைட்டுக்கு டிக்கெட் எடுத்துண்டு ரெண்டு நாள் பிரயாணம் பண்ணி வரணுமான்னு சொல்லுவேள் போலருக்கே?”
சிரிப்பார் பத்மநாபன்.
இந்த பேச்சுவார்த்தை அடிக்கடி நடக்கும்.
அதுவும் போனமாதம் பத்மநாபனுக்கு யூரினரி இன்ஃபெக்ஷன் ஆகி கடும் ஜுரம் வந்து மருத்துவமனையில் சேர்த்து ஸ்கேன் பண்ணிப் பார்த்தபோது யூரினரி இன்ஃபெக்ஷனோடு புரோஸ்டேட் வீக்கம் இருப்பதாகவும் ஆபரேஷன் செய்யும் நிலையில் அவர் உடல் நிலை வலுவாக இல்லையென்று மருத்துவர்கள் சொல்லி ஐந்து நாட்கள் மருத்துவமனையில் வைத்திருந்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.
அந்த ஐந்து நாட்களும் மருத்துவமனையில் மாமி ஒண்டியாய்த் தவித்த தவிப்பு.
மருத்துவமனையில் அக்கம்பக்கத்து பெட்காரர்களைக் கவனித்துக் கொள்ளும்
பிள்ளைகள், உறவினர்கள்.
மாமியிடம் “ஏம்மாமி! ஒங்குளுக்கு புள்ளைங்க இருக்காங்களா? ஒறவுக்காரவுங்க? யாருமில்ல? இப்பிடி வயசான காலத்துல ஒண்டியாக் கெடந்து அல்லாடுறீங்க”
கேட்பவர்களுக்கு விரக்தியை மறைத்துக் கொண்டு லேசாய் சிரித்து மழுப்பினார் மாமி.
உடல் நிலை லேசாய் சரியாகி நடக்க ஆரம்பித்தார் பத்மநாபன். ஆனாலும் தெம்பு இல்லை.
இப்போ மாமி படுத்துவிட்டார். கடந்த பதினைந்து நாட்களுக்கு முன் கணுக்காலுக்கு மேலாக ஆரம்பித்து பாத விரல்கள் வரை இரண்டு கால்களும் ஆமைக் குட்டிகளைப்போல வீங்கிப் போயின.
வீங்கிய இடத்தில் எந்த இடத்தை விரலால் அழுத்தினாலும் அந்த இடம் பள்ளமானது. இருவரும் பயந்து போனார்கள்.
எந்த வீட்டு வைத்தியமும் பயனளிக்கவில்லை.
மருத்துவமனை.
இதயம் இசிஜி எடுக்கப்பட்டு கல்லீரல், கணையம், கிட்னி ஸ்கேன் செய்யப்பட்டு பலவித ப்ளட் டெஸ்ட் செய்யப்பட்டு கடைசியாய் மருத்துவர் மாமியின் கால்கள் வீக்கத்திற்கு ‘பிட்டிங் எடிமா’ என்று பெயர் சொன்னார்.
பலமருந்துகள் கலக்கப்பட்ட டிரிப்ஸ், இன்ஜெக்ஷன்ஸ், மாத்திரைகள் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுக்கப்பட்டன. எலாஸ்டிக் பட்டைகள் இரண்டு கால்களிலும் லேசான அழுத்தம் கொடுத்துச் சுற்றப்பட்டன.
தோ மாமி உயரம் குறைவான மரக்கட்டிலில் பழைய காட்டன் புடவை விரிக்கப்பட்டு ரெக்சின் தலையணையில் தலைவைத்துப் படுத்திருந்தார்.
மனம் முழுதும் கவலையால் தவித்துக் கொண்டிருந்தது.
‘அம்மா லலிதாம்பிகே! காமாக்ஷி! மகமாயி தாயே! பவானியம்மா! என் உயிருக்கு எந்த ஆபத்தும் வந்துடக் கூடாதும்மா. நா சுமங்கலியா சாகணும்னுலாம் வேண்டிக்கல அந்த ஆசையும் எனக்கில்ல.
இவர் காலமான பிறகுதாம்மா நா சாகணும். கணவனுக்கு முன்னாடி தான் சுமங்கலியா சாகணும்னு நெனைக்கிற பொம்பளைங்கள நான் சுயநலவாதியா நெனைக்கிறேன்.
ஆம்பளைங்க ஒடம்பால வலுவானவா ஆனா மனசால பலவீனமானவா. ஒடம்பு பலத்த வெச்சு ஆஹா ஓஹோன்னு ஆட்டம் காட்டுவா. பெண்கள தனக்குக் கீழாய் நெனைப்பா.
பொம்பளைங்க உடலால ஆப்பளைங்கள காட்டிலும் பலவீனமானவா. ஆனா மனத்தால ஆப்பளைங்களக் காட்டிலும் வலுவானவா.
தனக்கு முன்னால் கணவன் இறந்துவிட்டால் பெண்கள் சிறிதுகாலம் மனதால் முடங்கிப் போனாலும் மறுபடியும் இயல்புக்கு வந்து தன்னைத் தேற்றிக் கொண்டு தன் கடமைகளைச் செய்து கொண்டு வாழ்வதற்கு தன்னைத் தயார் செய்து கொண்டு விடுகிறார்கள். எந்த வயதிலும் சரி.
ஆனால் தனக்குமுன் தன் மனைவி இறந்து விட்டால், பெரும்பாலான ஆண்கள் அனைத்தையும் இழந்து விட்டதாகவே உணருகிறார்கள்.
மகனையோ மகளையோ அண்டி வாழும் வாழ்க்கையை ஆண்களால் வாழ முடிவதில்லை. எல்லாவற்றிற்கும் பிறர் கையை எதிர்பார்த்து அட்ஜஸ் செய்துகொண்டு வாழ்வது கடினமாகி விடுகிறது.
மனைவி பார்த்துப் பார்த்து கவனித்துக் கொள்வதுபோல் யார் செய்யக் கூடும். அதுவும் வயதான காலத்தில் மனம் மட்டுமல்லாது உடலும் பலவீனப்பட்டுப் போய்விடும்போது மனைவியை இழந்த ஆண் பரிதவிப்பில்தான் வாழ வேண்டியிருக்கிறது.
அந்த நிலை இவருக்கு வந்துவிடக்கூடாது தாயே! நாம் போயி இவர் இருக்கக்கூடாது தாயே! இவர கரையேத்திட்டுதான் நாம் போகணும். அப்பிடி நாம் போயி இவர் இருந்தா புள்ளையோட போய் வெளிநாட்டுலெல்லாம் இருக்க முடியாது.
அந்தக் குளிரும் பனியும், ராத்திரி பகல்கற கால மாற்றமும் இவுருக்கு ஒத்து வராது. மொதல்ல ஃப்ளைட்டுல காலத்தொங்கப் போட்டுண்டு இருவத்தி ரெண்டு மணிநேரம் பிரயாணம் பண்ண முடியாது.
தினம் தினம் எதாவது உடல்நிலைப் பிரச்சனையோடு தவிக்கும் இவர அவாளால தெனமு ஆஸ்பத்திரிக்கெல்லாம் அழச்சுண்டு போக முடியுமா என்ன? அவாளுக்கு பாரமா ஆயிட மாட்டார்?
புள்ள, நாட்டுப் பொண்ணு ரெண்டு பேரும் வேலைக்குப் போறவா. கொழந்தேள் ரெண்டும் ஸ்கூல் போயிடுங்க. இவர் அங்க ஆத்துல தனியான்னா இருக்கணும்.
அண்ட அசலையும் பழக்கம் பண்ணிக்க மாட்டார். பேப்பர்கூட படிக்கமுடீல, படிச்சா கண்ண வலிக்கறது. டிவியும் செத்த நேரம்கூட பாக்கமுடீலங்கறார். தீடீர்னு ஒடம்பு முடியாம போனா’
எங்கே கணவரைத் தவிக்க விட்டுவிட்டு தான் செத்துவிடுவோமோ என்ற கவலையிலும் கலக்கத்திலும் மாமியின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி கோடாய் இறங்கி தலையணையை நனைத்தது.
சமயலறை மேடைக்கு அருகே சென்று நின்ற பத்பநாபனுக்கு சட்டென எதற்கு சமையல் மேடைக்கு அருகே வந்து நிற்கிறோம் என்பது மறந்து போனது.
தலையில் இருக்கும் இரண்டு முடியைத் தடவித் தடவி யோசித்தார். கால்கள் நடுங்குவதை உணர்ந்தார். வலது கையால் மேடையைப் பிடித்துக் கொண்டார்.கைகளும் உதறின.
முடியாமையால் “ம்.. ம்.. ம்..” என்று தானாகவே முனகல் சப்தம் தொண்டையிலிருந்து எழுந்தது.
“கோமு! நா சமையலுள்ள எதுக்கு வந்தேன் மறந்தே போச்சு. சொல்லேன்” படுத்திருக்கும் மனைவியிடம் நின்ற இடத்திலிருந்தே கேட்டார்.
“டீ போட!” சப்தமாய்ச் சொன்னார் மாமி. இல்லாவிட்டால் காதில் விழாது பத்மநாபனுக்கு.
“ஆமா.. ஆமா.. டீ.. டீ.. டீ போட..”
டீ போடும் வால் பாத்திரத்தில் அரைடம்ளர் தண்ணீர் ஊற்றி நடுங்கும் கையால் லைட்டரால் அடுப்பைப் பற்ற வைத்து பாத்திரத்தை வைத்தார்.
‘எவ்வளவு டீத்தூள் போடுவா தெரீலயே!’ என நினைத்தபடி குத்துமதிப்பாய் ஆளுக்கு ஒரு ஸ்பூனென கணக்குப் பண்ணி ரெண்டு ஸ்பூன் டீத்தூளைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டுவிட்டு ஒன்னரை டம்ளர் பாலை அளந்து ஊற்றினார். டீ கொதிக்கக் காத்திருந்தார்; நிற்க முடியவில்லை.
குப்பென்று வியர்த்தது மாமிக்கு. உள்ளங்கை கசகசத்தது. இடது பக்கத்தில் நெஞ்சு முறுக்கிப் பிழிவதுபோல் இருந்தது. வலி பொறுக்கமுடியாமல் போனது. இடது தோள்பட்டை, முதுகு என்று இறங்கிய வலி கையில் இறங்கி முழங்கைவரைப் படர்ந்தது.
“ம்.. ம்.. ம்..” வலி பொறுக்க முடியாமல் மாமி “காமாக்ஷி!” என்று வாய்விட்டு முனகினார். மூன்றாம் முறை “காமாக்ஷி!” என்று முனகியபோது மாமியின் மூச்சு அடங்கிப் போனது. மாஸிவ் ஹார்ட் அட்டாக். சடன் கார்டியாக் அரெஸ்ட்.
டீ கொதித்தவுடன் தயாராய் வைத்திருந்த இரண்டு டம்ளர்களில் டீ வடிக்கட்டியை டம்ளர் மீது வைத்து பாத்திரத்தின் கைப்பிடியைப் பிடித்து சாய்த்து ஊற்றியபோது கை நடுக்கத்தால் டீ மேடையில் அங்குமிங்கும் சிந்தியது சர்க்கரை போடாத டீ.
ஒரு தட்டில் டீ டம்ளர்களை வைத்து எடுத்துக் கொண்டு தத்தித் தத்தித் தடுமாறி
நடந்து ஹாலுக்கு வந்தார் பத்பநாபன்.
“கோமு! கோமதி! டீ!”
பதில் இல்லை.
“தூங்கிட்டியா? எழுந்துக்கோ! டீயக் குடிச்சிட்டுனா தூங்கு கோமதி!”
பதில் இல்லை.
வலது கையில் டீத் தட்டு இருக்க கொஞ்சமாய்த் தலையைக் குனிந்து இடது
கையால் மனைவியைத் லேசாய்த் தட்டி எழுப்பினார், மனைவி தூங்குவதாய் நினைத்து.
ம்கூம்! பதிலுமில்லை; எழந்து கொள்ளவும் இல்லை.
“கோமூ! கோமதீ!” அழைத்துக் கொண்டே மனைவியின் உடலை இப்படியும் அப்படியும் அசைத்தார்.
மாமியின் தலை தலையணையில் உருண்டு இப்படியும் அப்படியும் ஆடியது.
அடிவயிற்றில் ‘பகீரெ’ன்றது; புரிந்துபோனது பத்மநாபனுக்கு.
அடுத்த நொடி “கோமூ!” கத்தினார் பத்மநாபன். கையிருந்த டீத்தட்டு கீழே விழுந்து டீ எங்கும் சிதற, நின்றவாக்கிலேயே மரம் போல கீழே விழுந்தார் பத்மநாபன்.
அவரின் நெஞ்சாங் கூட்டிலிருந்து உயிர்ப்பறவை மனைவி கோமதியின் உயிர்ப்பறவையைத் தேடி செல்ல, வெகு ஆவேசத்தோடு “ஹக்!” எனும் சப்தத்தை எழுப்பியபடி பிரிந்து பறந்தது.
யாரைவிட்டு யார் செல்லப் போகிறோம். விட்டுச் செல்லப்பட்டவரை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற எந்த பிரச்சனையும் எழாமல் அதோ பறக்கின்றனவே ஆனந்தமாய், அந்தப் பறவைகள்தான் கோமதி மாமியும் பத்பநாபனும்!
அவை ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்தால் உயிர் வாழா அன்றில் பறவைகள்; உயிர்ப் பறவைகள்.
காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்