உயிர் உருகும் தருணம் – சிறுகதை

ஆறுமுகம் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. தன் ஒரே மகன் பரணியை வருமானவரித்துறை அதிகாரியாக உருவாக்கி இருந்தார். அவன் திருமணத்தில்தான் சிக்கல்.

பரணி அகல்யா என்ற பெண்ணைக் காதலிக்கிறான்.

அகல்யா, பரணி வேலை செய்யும் அதே அலுவலகத்தில் சம அந்தஸ்து இளநிலை அதிகாரி. அப்பா இல்லாத பெண். அம்மாதான் உலகம்.

ஆண்–பெண் நட்பு, காதல் இதில் எதிலும் நம்பிக்கை இல்லாதவள். அதனால்தான் போட்டித் தேர்வில் வென்று இந்த இளம் வயதில் அதிகாரியாகி இருக்கிறாள்.

பரணியின் அறிவும் புத்திக் கூர்மையும் மிடுக்கும் அகல்யாவிற்கு பிடித்த விஷயம்தான். ஆனால் அவனுடன் காதல் – கல்யாணம் என்று அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பரணிக்காக பெண்கள் வரிசை கட்டி நிற்கும் பட்சத்தில் அவனுக்கு என் மீது ஏன் காதல் வந்தது என்று வருந்துகிறாள்.

அதே சமயம் அவன் காதலை உதாசீனப்படுத்தவும் முடியவில்லை. இருப்பினும் அகல்யா கண்டிஷன்களை மிக உறுதியாக சொல்லிதான் இந்த காதலை ஏற்று கொண்டாள்.

“இது கல்யாணம் நோக்கி பாயும் காதல் நதியல்ல. நீ எந்த மயக்கத்திலும் இருந்து விடாதே. முகத்தில் துணியை கட்டிக் கொண்டு, முதுகில் புதைந்து கொண்டு பல்சரில் வரும் நிகழ்கால காதலிகள் போல் என்னை நினைத்து விடாதே.

உன்னோடு பைக்கிலோ காரிலோ வரமாட்டேன். ஹோட்டல், பீச், பார்க், வீகென்ட் பார்ட்டி, லாட்ஜ், கெஸ்ட் ஹவுஸ் எதுவும் இல்லை.

நான் இறந்து விட வேண்டும் அல்லது நீ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இந்த இரண்டில் ஒன்று நடக்கும் வரை உன் காற்று கூட என் மீது படக்கூடாது.

அலுலகம் தவிர நீ என்னை சந்திக்க நேர்ந்தால் கூட்டமாக உள்ள பஸ் நிலையத்தில் மட்டுமே சந்திக்க முடியும். இரவு 10 மணி வரை எப்போது வேண்டுமானாலும் என்னை போனில் அழை. எதுவேண்டுமானாலும் பேசலாம். அரசியல், சினிமா, இலக்கியம், உலக உள்ளூர் பொருளாதாரம், ஏன் காதல், காமம் என்று கூட நாம் பேசலாம்.

நீ நிறைய புத்தகங்கள் படிக்கிறாய் என்று கேள்விப்பட்டேன். அது பற்றி பேசு எனக்கும் சொல் .

முக்கியமான ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். என் அப்பாவை பற்றி எதுவும் கேட்காதே. பலர் பலவிதமாக சொல்கிறார்கள்.

என் அப்பா இறந்து விட்டாரா? இல்லை என் அம்மாவை ஏமாற்றி விட்டுப் போய்விட்டாரா? நான் கள்ளக்காதலில் பிறந்தேனா? நல்ல காதலில் பிறந்தேனா? எப்படி பிறந்தேன் என்று எனக்கு சத்தியமாக எதுவும் தெரியாது.

அம்மா என்னிடம் அப்பா பற்றி கேட்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறாள். அவளை இனி நான் எதுவும் கேட்டு சங்கடப்படுத்த விரும்பவில்லை.

அவள் எனக்கு அம்மா இல்லை; என் உயிர், கடவுள், தோழி; என் உலகம், அவள் மரணிக்கும் தருவாயில் முடிந்தால் நானும் உடன் கட்டை ஏறி விடுவேன்.

என்னை பிடிக்கவில்லை யென்றால் நீ எப்போது வேண்டுமானாலும் விலகிக் கொள்ளலாம் – உன் அறிவுக்கும், குணத்திற்கும் நிறைய நல்ல பெண்கள் கிடைப்பார்கள். எனக்கு நீ முதலும் கடைசியுமான ஆண்.” பிசிறில்லாமல் அகல்யா பேசிக்கொண்டே போனாள்.

பரணி மிரண்டு நின்றான். அகல்யா சொன்ன அனைத்தையும் பரணி ஒரு பெருமூச்சுடன் ஏற்றுக் கொண்டான்.

“அகல்யா என்கிற நெருப்பு பெண்” என்று அவன் முனகியது அவளுக்கு கேட்டது.

ஆம். நான் நெருப்புதான். என்னை எரிய விடு. அணைத்து விடாதே” என்று பதில் சொன்னாள்.

சொல்லி இரண்டு வருடம் ஆகிவிட்டது. அகல்யா என்ற நெருப்பை பரணி அணைக்காமல் பாதுகாத்து வருகிறான்.

அகல்யா பரணிக்கு போட்ட காதல் கண்டிஷன்கள். அதை இருவரும் மதித்து கடைப்பிடிக்கும் விஷயம்தான் எல்லோரையும் வியக்க வைத்துள்ளது.

இரண்டு பேர் குடும்பமும் நண்பர்களும் ‘பரணியும் அகல்யாவும் எப்படியாவது திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ வேண்டும்’ என்று நினைக்கிறார்கள்.

ஆனால் பரணி அப்பாவின் ஐ.ஏ.எஸ் மூளை அகல்யாவின் அப்பா பற்றி யோசிக்கிறது. கல்யாணத்தில் வந்து ‘நான்தான் அப்பா’ என்று யாராவது கொடி பிடித்தால் மீடியாவுக்கு தீனியாகிவிடும். அரசு நடவடிக்கை பாயும்.

ஆறுமுகம் பரணியிடம் இந்த சட்ட சிக்கலைச் சொல்லி அகல்யாவிடம் எப்படியாவது விபரம் சேகரிக்க சொன்னார்.

பரணி அகல்யாவிடம் விபரம் சொன்னான். அவளும் இந்த சிக்கலை உணர்ந்தவளாய் ஆமோதித்தாள்.

“எனக்கு தெரிந்த வகையில் அம்மா ஊர் நாகப்பட்டினம். எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டார்.

என் மாமாதான் அவருக்கு பள்ளிக்கூட ஆசிரியை வேலை வாங்கித் தந்தார்கள் என்று அம்மா சொல்வாள். தாத்தா பாட்டி, மாமா எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக இறந்துவிடவே இப்போது எல்லோரும் தூரத்து சொந்தம்தான்.

எனக்கு இது பற்றி அம்மாவிடம் பேச இஷ்டமில்லை. உன் நிலைமையும் உன் அப்பா சொல்வதும் புரிகிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை” என்று கலங்கினாள்.

பரணி அப்பாவிடம் அகல்யா நிலைமையைச் சொன்னான்.

ஆறுமுகம், தன் ஐஏஎஸ் மூளையை தட்டி விட்டார். அகல்யாவிடம் பேசினார்.

“உளவு துறை மூலம் உன் அப்பா பற்றி யாருக்கும் தெரியாமல் விசாரித்து கொள்ளட்டுமா?” என்று அனுமதி கேட்டார் .

“அம்மாவுக்கு எந்த காயமும் படாமல் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் அங்கிள்” என்று தழுதழுத்தாள்.

“கவலைப்படாதே அகல்யா, மிக நேர்த்தியாக இந்த வேலைய செய்கிறேன்” என ஆறுமுகம் உறுதியளித்தார் .

நாகப்பட்டினம் உளவுத் துறை எஸ்.பிக்கு போன் பறந்தது. அகல்யா தாத்தா – பாட்டி நாகப்பட்டினம்-வெளிபாளையம் அட்ரஸ் என தகவல்கள் கொடுத்தாயிற்று.

சென்னை தலைமை செயலக அதிகாரி பைல் என்பதால், நாகப்பட்டினத்தில் தீ பிடித்துக் கொண்டது. தனிப்படை அமைத்தாயிற்று. ஒரே நாளில் கண்டு பிடித்து விடுவார்கள்.

அகல்யாவிற்கு தூக்கம் தொலைந்தது. உறங்கி கொண்டிருக்கும் அம்மாவின் தலை கோதி யோசித்து கொண்டிருந்தாள்.

“அம்மா! என் உயிரே, என் காதலுக்கும் என் கல்யாணத்திற்கும் உன்னை பலி கொடுக்கிறேனோ? உன் தன்மானத்திற்கு ஏதும் இழுக்கு வந்துவிடுமோ?

நீ என்னை எப்படி பெற்றெடுத்தாய்? ஒரு நிலவு போல் ஜொலிக்கிறாய். இந்த வயதிலும் இளமை குன்றாத ஒரு தங்க விக்ரகம் போன்ற உன்னை எப்படி என் அப்பன் விட்டுச்சென்றான். அவன் ஒரு கடைந்தெடுத்த மடையனாக இருப்பான் போலிருக்கிறது.

அகல்யாவிற்கும் அவள் அம்மா மீனாவுக்கும் ஒரு பழக்கம். இருவரும் ஒருவருக்கொருவர் தினமும் முப்பது முத்தங்கள் தந்துவிட வேண்டும். ஒன்று குறைந்தாலும் பிரச்சினைதான்.

இந்த புரிதல், இந்த வாழ்வு சொர்க்கமாக இருக்கிறது. அம்மாவே போதும். நமக்கு ஏன் கல்யாணம்? பரணி என்னை மன்னித்து மறந்து விடு” என்று புலம்பினாள்.

அகல்யா நடுங்க ஆரம்பித்தாள். பரணி அப்பாவுக்கு போன் செய்து ‘விசாரிக்க வேண்டாம் என்று சொல்லி விடலாமா?’ என யோசித்தாள்.

பரணிக்கு ஒரு மெசேஜ் அனுப்பலாம் என்று போனை பார்த்த்தாள்.

“எதுவும் யோசிக்காமல் தூங்கு. நாளை மதியத்திற்குள் உளவுத்துறை அப்பாவுக்கு ரிப்போர்ட் கொடுத்து விடும். அதன் பின்பு நாம் முடிவு எடுக்கலாம். குட் நைட்”. என்று மெசேஜ் போட்டிருந்தான். ஆன்லைனில் இல்லை.

அகல்யாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. ‘நாளை என் வாழ்வில் என்ன திருப்பமோ?’ உறக்கம் பிடிக்காமல் புரண்டு புரண்டு படுத்தாள் .

பதினோரு மணிக்கே ரிப்போர்ட் வந்து விட்டது. ஆறுமுகம் அதிர்ந்து விட்டார், எதிர் பார்க்காத ரிப்போர்ட். மீண்டும் உளவுத்துறை அதிகாரிக்கு போன் செய்து உறுதிபடுத்தி கொண்டார்.

மனைவிக்கு போன் செய்து விபரம் சொன்னார். “யாரையும் கொஞ்ச நேரத்திற்கு உள்ளே விடாதீர்கள்” என்று செக்ரெட்டரிக்கு உத்திரவிட்டார்.

‘இதை எப்படி பரணியிடம் சொல்வது, அகல்யா அவள் அம்மா நிலைமை என்னவாகும்? தாங்குவார்களா?’ யோசித்தபடி இருந்தார்.

அகல்யா பரணியின் கேபினிலியே வந்து அமர்ந்து கொண்டாள்.

பரணியின் போனை வாங்கி கையில் வைத்துக் கொண்டாள்.

“என்ன ரிப்போர்ட் வந்தால் என்ன? அம்மாவிடம் நாம் எதுவும் சொல்ல போவதுமில்லை. அமைதியாக இரு.” என்று பரணி அகல்யாவிடம் சொன்னான்.

ஆறுமுகம் எதுவும் சொல்லாமல் ரிப்போர்ட்டை பரணிக்கு வாட்சப்பில் அனுப்பினார் .

பரணி ரிப்போர்ட்டைப் படித்து விட்டு மொபைலை அகல்யாவிடம் நீட்டினான்.

மூன்று வரிகளில் தான் அந்த ரிப்போர்ட் இருந்தது.

அகல்யாவின் அம்மா மீனாவுக்கு 15 வயதாக இருக்கும்போதே ஒரு வியாதி வந்து கர்ப்பப்பையை எடுத்துவிட்டார்கள்; யாரையும் திருமணம் செய்து கொள்ள இஷ்டமில்லை.

ஒரு குழந்தையை வளர்க்க வேண்டும் என்ற ஆசையில் அகல்யாவை ஒரு அனாதை ஆசிரமத்திலிருந்து சட்டப்படி தத்து எடுத்து வளர்த்து வருகிறாள்.

தான் ஒரு அனாதை என்று அகல்யாவுக்கு தெரியக் கூடாது என்று கடும் பிரயத்தனப்படுகிறாள்.

இதுதான் அந்த ரிப்போர்ட்; யாரும் எதிர் பார்க்காத ரிப்போர்ட்.

ரிப்போர்ட்டை படித்த அகல்யா மயங்கி சரிந்தாள்.

அலுவலகம் கலவரமானது. தண்ணீர் தெளித்து எழுப்பி, காரில் பின் சீட்டில் சாய்த்து அகல்யாவை பரணி வீட்டு வாசலில் கொண்டு போய் விட்டான்.

அம்மாவை பார்த்தவுடன் அகல்யாவுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. கட்டிப்பிடித்துக் கொண்டாள். மீனாவுக்கு எதுவும் புரியவில்லை; பதறினாள்.

“எனக்காக நீ ஏன் இத்தனை சிலுவைகளைச் சுமந்தாய், பரிசுத்தமான உன்னை ஏன் அழுக்காக்கி கொண்டாய்? எத்தனை அவப்பெயர்கள். என்னால் தானே உனக்கு இத்தனை இழி மொழிகள்.” அகல்யா கண்ணீரில் நனைந்தாள்.

மீனாவுக்கு புரிந்துவிட்டது. அவளும் அழ தொடங்கி விட்டாள்.

“என் ஆசைக்குத்தான் உன்னை வளர்த்தேன் அகல்யா, என்னை விட்டு நீ போய்விடக்கூடாது. என் மீதான பாசம் ஒரு இஞ்ச் கூட குறையக் கூடாது என்ற சுய நலத்தால்தான் உன்னிடம் உண்மையைச் சொல்லாமல் மறைத்தேன்.” கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

“உன்னை விட்டு நான் ஒரு போதும் போக மாட்டேன்மா. நீ என் உயிர்” என்று அகல்யா கொடிபோல் மீனாவை சுத்திக் கொண்டாள் .

“நீ தினம் குடுக்கும் முப்பது முத்தங்களில் இனி ஒன்று குறைந்தாலும் என் உயிர் பிரிந்து விடும்” என்று மீனா அகல்யாவை ஏந்திக் கொண்டாள் .

அகல்யா அன்றிரவே பரணி வீட்டுக்கு போனாள். ‘இதுவரை அப்பா மட்டும்தான் யாரென்று தெரியாது, இப்போது என்னை  பெற்ற அம்மாவும் யாரென்று தேட வேண்டும்.  ஆறுமுகம் அங்கிளுக்கு இன்னும் ஓர் சிக்கல்…  எதற்கு அவருக்கு தர்மசங்கடம் தர வேண்டும் நாமாக விலகிவிடலாம் என தீர்மானித்தாள்.  பரணி தான் பாவம். ஒரு நன்றி சொல்லி நாகரிகமாக விடை பெறலாம்’ என்று நினைத்தாள்.

பரணி வீடு நிசப்தமாக இருந்தது.

பரணி அம்மா, “வாம்மா” என்று கையை பிடித்துக் கொண்டாள். பரணி புன்னகைத்து வைத்தான்.

மூவரும் சேர்ந்து ஆறுமுகம் ஐஏஎஸ் அறைக்குப் போனார்கள். அவர் போனில் அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். கையால் சைகை காட்டி அவர் போன் பேசி முடிக்கும் வரை இருக்கையில் அமர சொன்னார்.

பரணி ரொம்ப அயர்வாக தெரிந்தான். அகல்யாவுக்கு பரணி மேல் பெருங்காதல் பெருக்கெடுத்தது.

“கடவுளே! சொன்னதையெல்லாம் கிளிப்பிள்ளை போல் கேட்கும் இந்த பரணி என்ற வளர்ந்த என் செல்ல குழந்தையைக் காப்பாயாக. என்னைவிட நல்ல ஒரு பெண்ணை அவனுக்கு அடையாளம் காட்டு கடவுளே” என்று வேண்டினாள். கண்ணீர் திரண்டு வந்தது.

ஆறுமுகம் போனை வைத்து விட்டு, அகல்யாவை பார்த்து “என்னம்மா அம்மா எப்படி இருக்காங்க? நீ என்ன முடிவு எடுத்த?” என்று கேட்டார்.

அவள் பதில் சொல்ல எத்தனிக்கும் போது செக்ரெட்டரி ஓடி வந்து நாகப்பட்டினம் எஸ்.பி லைனில் இருப்பதாக சொன்னார்.

ஆறுமுகம் ஒரு நிமிடம் அகல்யாவிடம் அனுமதி கேட்டு அந்த அதிகாரியிடம் பேசினார்.

“அய்யா, அகல்யாவோட நிஜ அப்பா அம்மாவை கண்டுபிடிக்க ஐந்து தனிப்படை ஏற்பாடு செய்யலாமா?” என்று நாகப்பட்டினம் எஸ்பி கேட்டார்.

“வேண்டாம் சார், பைலை குளோஸ் பண்ணி விடுங்கள். சட்டப்படி அடோப்ஷன் சரியாத்தான் இருக்கு. உங்களுக்கும் உங்க டீமுக்கும் ரொம்ப நன்றி” என்று சொன்னார் ஆறுமுகம்.

“சார் நீங்க கோவிச்சுக்கலன்னா, இந்த அகல்யா யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்று எஸ்பி கேட்டார்.

வேற யாருமில்லை சார்; அகல்யா என் மருமகள்” என்று சொல்லி போனை வைத்து விட்டு மூவரையும் உற்றுப் பார்த்தார் ஆறுமுகம் ஐஏஎஸ்.

விவரிக்க ஏதுமின்றி, பேச்சற்று எல்லோரும் உயிர் உருகி நின்ற தருணம் அது.

முனைவர் க.வீரமணி
சென்னை
கைபேசி: 9080420849

8 Replies to “உயிர் உருகும் தருணம் – சிறுகதை”

 1. பொன் குடம் உடைந்தாலும் அது பொன் தான்…. அதேபோல் தான் யாராயிருந்தாலும் தாய் தாய் தான்… என்கிற உண்மையை புரிந்து வாழும் அகல்யா என்கிற அக்னி நட்சத்திரம்… இக்கதையில் வரும் இரு தாய்மார்களும் பிள்ளை வளர்த்த விதம் அற்புதம்… ஆட்சியரின் முயற்சியும் முடிவும் அவரின் அறிவும் குணத்தை தாண்டிய உயர்ந்த நாகரீக பண்பு உன்னதம்…

  ஒரு பெண் தாய் வீட்டு அன்பையும் தன் காதலையும் தராசில் சமன் படுத்தி நடக்கும் அகல்யா என இக்கதையின் பாத்திரங்கள் அனைத்தும் சிறந்த குணம் கொண்டதாக உள்ளது என்றாலும் உயர்ந்த உள்ளம் ஆட்சியையே சாரும்…

  கதையின் போக்கு எளிமையாக இருந்தூலும் ஆழமாக பல கருத்துக்கள் உள்ளடக்கி இருந்தது…

  சுயபுரிதலை கொண்டு வாசித்தால் இக்கதையினை சுவைக்கலாம்.. அல்லது ரசிக்கலாம்..

  ஒரு புதிய முயற்சி என்றாலும் பழைய கதைகளின் சாராம்சம் தெரிகிறது…

  விரைவில் முடிந்து விட்டதாக ஓர் உணர்வு…

  பாராட்டுக்கள்… நன்றி ❤️

 2. பல முறை படித்த பின்பும் கண்ணீர் திரண்டு நிற்கிறது…

  பேசும் போது சிரிக்க வைக்கும் நீங்கள், எழுதும் போது அழ வைத்து விட்டுப் போகிறீரகள்!

 3. அழகான கதை
  அபூர்வமான கதை
  ஆக்கப்பூர்வமான கதை
  தெளிவான கதை
  தேக்கம் இல்லாத கதை
  வாட்டம் இல்லாத கதை
  விரசம் இல்லாத கதை
  வியப்பான கதை
  விளக்கமான கதை
  பாசமான கதை
  பகட்டில்லாத கதை
  ஒய்யார கதை
  ஊமையான கதை
  உண்மையான கதை

  எல்லாவற்றுக்கும் மேலாக
  உயிரை உருக்கும் கதை அதுதான் வீரமணி ஐயாவின் கதை

 4. மிகவும் அருமையாக உள்ளது ஐயா.

  இந்த கதையில் உள்ள ஒவ்வொரு நிகழ்வும் கண்முன்னே தெரிகிறது.

  நான் இந்த கதையை படித்தது மூன்று நிமிடங்கள்.

  ஆனால் இந்த கதையின் தாக்கம் எனக்குள் எத்தனை நாட்களோ!

Comments are closed.