தலைவியின் பிரிவுத்துயரை எண்ணித் தலைவன் பாடும் காதலர் தினக் கவிதை.
ஆடை யணித லென்ப தெனக்கிங்
கரவ மணிதற் போலாச்சே
யன்னம் தண்ணீ ரருந்த லெனக்கிங்
கால முண்ணற் போலாச்சே
வாடைக் காற்றின் வருடற் கூட
வன்னி தழுவற் போலாச்சே
வள்ளை யோசைச் செவியை யிடிக்கும்
வான முழவின் நிகராச்சே
ஓடை சூழ்ந்த மனையு மெனக்கிங்
கொளிரும் நெருப்புக் கோளாச்சே
யுலகை நிழற்று மொண்வான் மதியு
முடலை வருத்தும் நோயாச்சே
பேடை யவளின் பிரிவை யெண்ணிப்
பிதற்று மொழியே யெனதாச்சே
பிறைபோற் பார்வல் தந்தா லென்ன
பேதை வுயிரும் பெயர்வாச்சே!
நீடும் வான்போல் நினைவுத் துயரென்
நெஞ்சத் துள்ளே விரிகிறதே
நிழற்காண் விழியில் நிலைத்த வடிவாய்
நீலத் தோகை தெரிகிறதே
காடுஞ் சுடுமோ கள்வன் நின்னின்
கழற்றோய் பாதம் பிரிவினிலே
கழலுங் கண்ணிற் காத லடக்கிக்
காட்டும் பெண்ணி லருகினிலே
நாடுங் கண்ணை நடக்குங் காலை
நானென் செய்வேன் தனிமையிலே
நாண மின்றி நயக்கும் நெஞ்சால்
நலிந்தேன் இற்றைப் பொழுதினிலே
வாடும் பயிரை வளர்க்கும் நீர்போல்
வாட்டந் தணிக்க வருகிலளே
வட்ட மென்று வாழ்வை வகுத்தார்
வரைவென் ஒன்றும் புரிகிலையே
கண்ணின் மணியாய்க் கரந்தே வுறையும்
கவிதைப் பெண்ணே வுனக்கிலையோ
காமச் சூட்டில் கரையு மாக்கை
காட்டும் விளைவும் அறிகிலையோ
பண்ணின் மகிழ்வென் பாட்டின் பொருளென்
பாவை யுன்ற னிருப்பினிலே
பதங்க மாகும் பரவை நுரையே
பாத ரசமே தனிப்பொருளே
எண்ணின் யானே இகழ்ந்தே னென்னை
இறுமாந் திருந்தோ னிவனிலையே
இயக்கந் தொலைந்தேன் எதையுங் கசந்தேன்
இதுபோல் முன்னர் இருந்திலையே
உண்ணின் உறங்கின் உயிர்போய் விடுமோ
உதற லெடுக்கு முடலினிலே
உண்கண் வெளிச்சம் உயிரைப் புரக்கும்
ஓடி வாவென் தனித்தமிழே!

பேரினப் பாவலன்
ஆவடி, திருவள்ளூர்
கைபேசி: 8667043574
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!