மஞ்சுசூழ் மலைவளந் தின்றங் குறைந்த
விஞ்சுபுகழ்த் தொன்குடி வெற்பரை யிழித்துப்
புடவிக் கணியொடு பல்லுயிர் செறித்த
அடவி கொன்றார்ப் பரித்தெ ழுந்து
சமவெளி காக்குங் சான்றோர் ஏத்தும்
இமைக்கண் ணாற்றை யிறக்கச் செய்து
கடன்மணற் பரப்பிலும் கண்டுஞ் சாற்றும்
இடக்கரை யறியா ஏதில ராகி
இழிபுகழ்க் கொள்கையை ஏற்றுக் கொண்டு
வழிவழி வாழ்ந்த வானுயர் பெருமையை
யழித்தவ ராகி அருந்தமிழ் சிதைத்துப்
பழித்துத் தூற்றப் பாதையைச் சமைத்த
இற்றைத் தமிழக இழிநிலைக் கான
ஒற்றைத் தலைவலி ஒண்டமிழ் மறவா
திசைகள் நான்கினும் தீயவர் சூழ
விசையின் றிருக்கும் உயிர்வீண் தானே !
பேரினப் பாவலன் (எ) சாமி.சுரேஷ்
ஆவடி, திருவள்ளூர்
கைபேசி: 8667043574