உருகிய நீர் – நீருடன் ஓர் உரையாடல் 34

குளிர்சாதனப் பெட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களாகவே நினைத்துக் கொண்டிருந்தேன்.

இன்றைக்கு தான் நேரம் கிடைத்தது. இந்த வேலையை அப்பொழுது தொடங்கினேன்.

முதலில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்த எல்லாப் பொருட்களையும் வெளியே எடுத்து வைத்தேன்.

அப்பொழுது தான் தோன்றியது, ஐஸ்பெட்டியைத் திறக்க வேண்டும் என்று. உடனே முயன்றேன்; முடியவில்லை.

அந்த பெட்டி முழுவதும் பனிக்கட்டிகள் உருவாகி இருந்ததால், பெட்டியின் கதவை திறக்க முடியாமல் போயிற்று.

குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் ஐஸ்பெட்டியை மட்டும் அணைக்கும் பொத்தானை அழுத்தினேன்.

சில மணி நேரத்திற்குள் பனி உருகிவிடும். அதன்பின், அந்த பகுதியையும் சுத்தம் செய்யலாம் என்று முடிவு செய்தேன்.

இதற்கிடையில் குளிர்சாதனப் பெட்டியின் மற்ற பகுதிகளை நன்றாக சுத்தம் செய்தேன். கடைசியாக, மீண்டும் ஐஸ்பெட்டியை திறக்க முயன்றேன். திறந்துவிட்டது.

பெரும்பாலும் பனிக்கட்டிகள் உருகியிருந்தன. பெட்டியின் மேற்பரப்பில் இருந்து மட்டும் நீர் சொட்டிக் கொண்டிருந்தது.

ஒரு துணியை எடுத்து அந்த நீரைத் துடைத்தேன்.

“பொறுங்க… பொறுங்க…” – குரல் கேட்டது.

நீரின் குரல் தான் என்று அறிந்துக் கொண்டேன். உடனே, “ஓ..ஓ.. உருகிய நீரா?” என்றேன்.

“என்னது! உருகிய நீரா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டது நீர்.

“ஆமாம். பனிக்கட்டி உருகிதானே நீ வர்றே. அதான் உருகிய நீரான்னு சொன்னேன்”.

“இதுவரைக்கும் உருகிய நீருன்னு சொல்லி நான் கேள்விபட்டதே இல்லையே!”

“நீ சொல்றது உண்மைதான். ஆனா, உருகிய நீர் என்னும் சொற்கள அறிவியல் உலகத்துல பயன்படுத்துறாங்க.”

“எதுனால சார்?”

“சொல்றேன். பூமியோட துருவப் பகுதிகளிலும், மற்ற பனிபிரதேசங்களிலும், பனிப்பாறைகள் இருக்கு. அதெல்லாம் உருகுவதன் மூலம் வெளியாகும் நீரே ‘உருகிய நீர்’ ஆங்கிலத்துல ‘Melt Water’-ன்னு சொல்றாங்க.”

“புரியுது சார். ஆனா, பனிப்பாறைகள் உருகி வரும் நீர மட்டும் தான் உருகிய நீருன்னு சொல்லுவாங்களா?”

“இல்ல. பனிப்பொழிவால உருவாகும் திரவ நீரையும் உருகிய நீருன்னு சொல்லுவாங்க.”

“ஓ..ஓ..”

“இம்ம்.. பொதுவா, உருகிய நீர் நதியாக பாய்ந்தோடலாம். இல்லைன்னா, பனிபிரதேசங்கள்ல, உருகிய நீர் பனிப்பாறையின் அடிப்பரப்பின் கீழேயே குளமாவோ, ஏரியாகவோ தேங்கி நிற்கலாம். அதேசமயத்துல, அங்கு வானிலை போதுமான அளவு குளிர்ச்சியாக இருக்கும் பட்சத்தில், உருகிய நீர் குளிர்ச்சியடைந்து மீண்டும் பனிக்கட்டியாகவும் மாறலாம்.”

“சரி சார். பனிப் பிரதேசங்கள்ல ஏன் பனிப்பாறைகள் உருகுது?”

“உராய்வும் புவிவெப்ப மாற்றமும் தான் காரணமாம். இன்னொரு செய்தியும் சொல்லனும். சமீப காலத்துல ஏற்பட்டிருக்கும் காலநிலை மாற்றத்தால, பனிப்பொழிவு குறையுதாம். அத்தோட பனிப்பாறைகளின் உருகும் வீதமும் கணிசமா அதிகரிச்சிருக்குதாம், இது உலகிற்கே பெரும் அச்சுறுத்தலா இருக்குதுன்ணு விஞ்ஞானிகள் சொல்றாங்க.”

“அடடே!”

“இன்னொன்றும் சொல்லணும். கோடையில் பனிப்பாறைகள் அதிகமா உருகும். பனிப்பாறைகளின் அடித்தளத்துல தேங்கும் உருகிய நீரானது மசகு எண்ணெய் போல் செயல்படுது. அப்போ, பனிப்பாறை இயக்கம் அதிகமாக இருக்கும். இதனால பனிச்சரிவுகள் ஏற்படுவதோடு, திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட வாய்ப்புகள் இருக்குதாம்.”

“ஓ..ஓ.. அப்ப உருகிய நீரால கெடுதல் மட்டுந்தான்ணு சொல்றீங்க.”

“அப்படி சொல்ல முடியாது.”

“பின்னே?”

“ஏன்னா, உருகிய நீரால நன்மைகளும் இருக்குது.”

“என்ன நன்மைகள்? அத சொல்லுங்க..”

“சொல்றேன். உலகெங்கிலும் உள்ள சில நகரங்கள்ல இருக்கும் பெரிய ஏரிகளுக்கு நீர் ஆதாரமே உருகிய நீர்தான்.

அதுமட்டுமில்லாம, உலகின் சில பகுதிகள்ல, உருகியநீர் குடிநீர் மூலமாகவும் இருக்குது. சிலபகுதிகள்ல விவசாய நீர்ப்பாசனத்திற்கும், நீர்மின் நிலையங்களுக்கும் உருகிய நீர் பயன்படுது.

சமீபத்துல உருகிய நீர் இயற்கையான உயிரியல் செயல்முறையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கண்டுபிடிச்சிருக்காங்க. அத்தோட, உருகிய நீரானது திடீர் காலநிலை மாற்றத்தின் அறிகுறியாக இருக்குதாம். இவற்றையெல்லாம் தெளிவா ஆய்வு பண்ணி பிரச்சனைக்கான தீர்வ கண்டுபிடிக்கிற முயற்சியில விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டிருக்காங்க.”

“வாழ்த்துகள் சார். இப்ப நான் கிளம்பணும். நாம் இன்னொரு சமயத்துல சந்திப்போம்” என்று கூறி நீர் புறப்பட்டது.

“நன்றி” என பதில் கூறி, குளிர்சாதனப் பெட்டியை சுத்தம் செய்யும் பணியை தொடர்ந்தேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461

மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

நீரின் வடிவம் – நீருடன் ஓர் உரையாடல் 35

நீரின் வயது – நீருடன் ஓர் உரையாடல் 33

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.