உருளைக்கிழங்கு ஃப்ரை செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு ஃப்ரை அருமையான தொட்டுக்கறி ஆகும். இதனை எளிதில் தயார் செய்து விடலாம்.

பார்ப்பதற்கு மீன் வறுவல் போன்று இருக்கும் இது சுவையிலும் அசத்தலானது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை விரும்பி உண்பர்.

இது சாம்பார் சாதம், ரசம் சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர் சாதம் உள்ளிட்ட சாத வகைகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

இனி சுவையான உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 2 எண்ணம்

நல்ல எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு ‍- 1/2 டீஸ்பூன்

உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்

சீரகம் – 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கீற்று

மஞ்சள் பொடி ‍ – 1/2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லிப் பொடி – ‍ 1&1/2 ஸ்பூன்

சீரகப் பொடி ‍- 3/4 ஸ்பூன்

மிளகுப் பொடி – ‍ 1/2 ஸ்பூன்

மிளகாய் வற்றல் பொடி ‍- 3/4 ஸ்பூன்

செய்முறை

முதலில் உருளைக்கிழங்கினை நன்கு கழுவிக் கொள்ளவும்.

பின்னர் அதனை படத்தில் உள்ளவாறு நீள்வட்டமாக வெட்டி தண்ணீரில் அலசிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

நீள்வட்டமாக நறுக்கிய உருளைக்கிழங்கு

வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிதம் செய்து கொள்ளவும்.

தாளிதம் செய்யும் போது

பின்னர் பருப்பு சிவந்ததும் அதில் நறுக்கி அலசிய உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்க்கவும்.

அத்துடன் தேவையான உப்பு மற்றும் மஞ்சள் பொடி சேர்க்கவும்.

உருளைக்கிழக்கினைச் சேர்த்ததும்
உப்பு மற்றும் மஞ்சள் பொடி சேர்த்ததும்

உப்பையும் மஞ்சள் பொடியையும் உருளைக்கிழங்கு முழுவதும் நன்கு கலந்து விடவும்.

பின்னர் வாணலியை மூடி போட்டு 4 நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும்.

பாதி வெந்ததும்

உருளைக்கிழங்கு பாதிக்கும் சற்று அதிகமாக வெந்ததும் அதில் கொத்தமல்லிப் பொடி, மிளகுப் பொடி, சீரகப் பொடி மற்றும் மிளகாய் வற்றல் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பொடி வகைகளைச் சேர்த்ததும்
கலந்து விட்டதும்

மிதமான தீயில் மூன்று நிமிடங்கள் வைத்திருந்து இறக்கி விடவும்.

சுவையான உருளைக்கிழங்கு ஃப்ரை தயார்.

குறிப்பு

உருளைக்கிழங்கினை நீள்வட்டமாக வெட்டும்போது 1/2 இன்ச் தடிமனுக்கு வெட்டவும். அப்போது தான் உருளைக்கிழங்கு உடைந்துவிடாமல் நன்கு மசாலாப் பொருட்கள் கலந்து சுவையாக இருக்கும்.

விருப்பமுள்ளவர்கள் உளுந்தம் பருப்பிற்குப் பதில் கடலைப் பருப்பு சேர்த்து உருளைக்கிழங்கு ஃப்ரை தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.