உருளைக்கிழங்கு பால்ஸ் செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு பால்ஸ் என்பது வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய வித்தியாசமான, சுவையான உணவாகும்.

உருளைக்கிழங்கு பெரும்பான்மையோரால் விரும்பப்படும் உணவுவாகும். இதனைக் கொண்டு கிழங்கு மசாலா, குருமா, சிப்ஸ் போன்றவை பொதுவாக செய்யப்படுகின்றன.

வித்தியாசமான சுவையான உணவு வகையான உருளைக்கிழங்கு பால்ஸ் செய்வதைப் பற்றிக் காண்போம்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – ¼ கிலோ கிராம்

சீரகத் தூள் – 2 ஸ்பூன்

கரம் மசாலாத் தூள் – 2 ஸ்பூன்

மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

கான்பிளவர் மாவு – 25 கிராம்

 

செய்முறை

முதலில் உருளைக் கிழங்கை அவித்து தோலுரித்துக் கொள்ளவும். பின் அதனை நன்கு மசித்துக் கொள்ளவும். மசித்த கிழங்குடன் சீரகத் தூள், கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

பின் அதனை சிறு சிறு உருண்டைகளாக்கவும். பின் உருண்டைகளை கான்பிளவர் மாவில் பிரட்டிக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். எண்ணெய் காய்ந்தவுடன் கான்பிளவர் மாவில் பிரட்டிய உருண்டகளை போடவும். பொன்னிறமானவுடன் எடுத்து விடவும். சுவையான உருளைக் கிழங்கு பால்ஸ் தயார்.

இதனை சாம்பார் சாதம், பருப்பு சாதம், தயிர் சாதம் ஆகிய சாத வகைகளுடன் சேர்த்து உண்ணலாம். குழந்தைகளுக்கு மாலைச் சிற்றுண்டியாகவும் கொடுக்கலாம். குழந்தைகள் இதனை மிகவும் விரும்பி உண்பர்.

குறிப்பு: 

விருப்பமுள்ளவர்கள் மசித்த கிழங்குடன் மேற்கண்ட பொருள்களுடன் வெள்ளைப் பூண்டினை நசுக்கிச் சேர்த்து உருண்டைகள் தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் கான்பிளவர் மாவுக்கு பதிலாக அரிசி மாவைச் சேர்த்தோ அல்லது பாதி அரிசி மாவு பாதி கான்பிளவர் மாவு கலந்து வைத்துக் கொண்டு அதில் உருண்டைகளைப் பிரட்டலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்