நிறையப் பேருக்கு பிடித்த உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு உலகில் பெரும்பாலோருக்கு பிடித்த காயாகும். இக்காயின் சுவையானது சைவ மற்றும் அசைவ உணவுகளுடன் சேர்த்து உண்ணக் கூடியதாக உள்ளது.

இக்காயானது உலகில் எல்லாத் தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்படுகிறது.

அரிசி, கோதுமை, சோளத்திற்கு அடுத்து நான்காவது அதிகம் பயிர் செய்யக்கூடிய உணவுப்பொருளாக உருளைக்கிழங்கு உள்ளது.

உருளைக்கிழங்கானது சமையலில் வேகவைத்து, வறுத்து, மசித்து என பலவகைகளில் பயன்படுத்தப்படுகிறது.

காய்கறிகளை வெறுக்கும் பல குழந்தைகள் உருளைக்கிழங்கினை விரும்பி உண்கின்றனர். இதற்கு காரணம் உருளைக்கிழங்கின் விசித்திரமான மாயாஜால சுவையாகும்.

உருளைக்கிழங்கின் தாயகம் தென் அமெரிக்கப் பகுதிகள் ஆகும். இக்காயானது முதலில் 7000 முதல் 10000 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகளில் பயிர் செய்யப்பட்டுள்ளது.

16-ஆம் நூற்றாண்டில் இக்காயானது ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின் அங்கிருந்து ஆசியா மற்றும் ஏனைய பகுதிகளை இக்காய் சென்றடைந்தது.

உருளைக்கிழங்கு உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.

போலந்து, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் இக்காயினை அதிகளவு உற்பத்தி செய்கின்றன.

உருளைக்கிழங்கானது சோலானேசியீ என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. கத்தரிக்காய், தக்காளி உள்ளிட்டவை உருளைக்கிழங்கின் உறவினர்கள் ஆவர்.

உருளைக்கிழங்கின் அறிவியல் பெயர் சோலானம் டியூபரோசம் என்பதாகும்.

உருளைக்கிழங்கானது பல்லாண்டு வாழக்கூடிய தாவர இனமாகும். உருளைக்கிழங்குத் தாவரமானது 12 முதல் 18 அடி உயரம் வரை வளரும்.

 

உருளைக்கிழங்கு தாவரம்
உருளைக்கிழங்கு தாவரம்

 

உருளைக்கிழங்கு பூ
உருளைக்கிழங்கு பூ

 

இத்தாவரம் பல கிழங்குகளால் நிலத்தடியில் தாங்கப்படுகிறது. உருளைக்கிழங்கானது உண்மையில் தரைகீழ் தண்டின் பருத்த பகுதியாகும்.

உருளைக்கிழங்கின் வெளிப்புறத் தோலானது ஓரளவு பழுப்பு நிறத்தில் காணப்படும்.

வெள்ளை, சிவப்பு, அடர்நீலம் ஆகிய வண்ணங்களிலும் இக்காய் காணப்படுகிறது.

 

 பலவண்ண உருளைக்கிழங்கு
பலவண்ண உருளைக்கிழங்கு

 

பொதுவாக இக்காயானது உருண்டை, நீள்வட்டம், ஒழுங்கற்ற வடிவங்களில் இருக்கிறது.

இக்காயின் உட்புற சதைப்பகுதியானது வெள்ளை, கீரீம், இளஞ்சிவப்பு, நீல வண்ணங்களில் காணப்படுகிறது.

 

ஊதா வண்ண உருளைக்கிழங்கு
ஊதா வண்ண உருளைக்கிழங்கு

 

ஆண்டு முழுவதும் இக்காய் கிடைக்கிறது. குளிர் மற்றும் மிதவெப்ப பகுதிகளில் அதிகளவு பயிர் செய்யப்படுகிறது.

இக்காய் பயிர் செய்து 120 நாட்களில் அறுவடைக்கு தயார் ஆகிறது.

உருளைக்கிழங்கில் உள்ள நுண்ஊட்டச்சத்துக்கள்

உருளைக்கிழங்கில் விட்டமின் சி, பி6(பைரிடாக்ஸின்) மிகவும் அதிகளவு உள்ளன.

விட்டமின் பி1 (தயாமின்), பி3(நியாசின்), பி5(பான்டாதெனிக் அமிலம்) அதிகளவு இக்காயில் காணப்படுகின்றன.

மேலும் இதில் விட்டமின் பி2(ரிபோஃப்ளோவின்), கே, போலேட்டுக்கள் ஆகியவை உள்ளன.

இதில் தாதுஉப்புக்களான மக்னீசியம், மாங்கனீசு, இரும்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவை அதிகளவு உள்ளன.

மேலும் இதில் கால்சியம், துத்தநாகம் போன்றவையும் உள்ளன.

இக்காயானது அதிகளவு கார்போஹைட்ரேட், நார்ச்சத்து ஆகியவற்றையும், குறைந்தளவு புரோடீனையும் கொண்டுள்ளது.

உருளைக்கிழங்கின் மருத்துவப் பண்புகள்

உடல் எடை அதிகரிக்க

உருளைக்கிழங்கானது அதிகளவு கார்போஹைட்ரேட்டையும் குறைந்தளவு புரோடீனையும் கொண்டுள்ளது.

எனவே உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் உருளைக்கிழங்கினை உண்டு பயன்பெறலாம்.

இக்காயில் உள்ள விட்டமின் சி மற்றும் விட்டமின் பி தொகுப்புகள் கார்போஹைட்ரேட்டை முறையாக உறிஞ்ச உதவி செய்கின்றன.

எனவேதான் போட்டியின் போது எரிக்கத் தேவையான ஆற்றலினை சேமிக்கும் பொருட்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் மல்யுத்தவீரர்களின் உணவுப்பட்டியலில் உருளைக்கிழங்கானது கட்டாயம் இடம் பெறுகிறது.

எளிதில் செரிக்க

உருளைக்கிழங்கில் அதிகம் உள்ள கார்போஹைட்ரேட்டானது எளிதில் சீரணிக்கவும், சீரணத்தை எளிதாக்கவும் செய்கிறது.

சிறுகுழந்தைகளுக்கு உருளைக்கிழங்கினைக் கொடுக்கும்போது எளிதில் சீரணமாவதுடன் வலிமையையும் கொடுக்கிறது.

எனவேதான் சிறுகுழந்தைகளின் உணவுப்பட்டியலில் இக்காய் இடம்பெறுகிறது.

வழக்கமாக உருளைக்கிழங்கினைக் கொடுக்கும்போது அது நாளடைவில் அமிலத்தன்மையை உண்டாக்கும்.

இக்காயில் உள்ள நார்சத்தானது செரிமான சாறுகளின் சுரப்பினை அதிகரித்து செரிமானத்தை எளிதாக்குகிறது.

இதனால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட வயிற்று கோளாறுகள் தடுக்கப்படுகின்றன. மேலும் குடல் புற்றுநோய் ஏற்படுவதையும் இக்காய் தடைசெய்கிறது.

சருமப் பாதுகாப்பு

இக்காயில் காணப்படும் விட்டமின் சி, பி தொகுப்புகள் மற்றும் தாதுஉப்புக்களான பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், மெக்னீசியம் போன்றவை சருமத்தைப் பாதுகாக்கின்றன.

அரைத்த பச்சை உருளையின் கூழுடன் தேனினைச் சேர்த்து சருமம் மற்றும் முகத்தில் தடவ சருமம் பொலிவு பெறும்.

இம்முறையானது சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் புள்ளிகளை குணப்படுத்த உதவுகிறது.

புறஊதாக்கதிர்களின் பாதிப்பு ஏற்பட்ட சருமத்தில் பச்சை உருளை கூழினைத் தடவ விரைவான நிவாரணம் கிடைக்கும்.

பச்சை உருளைச்சாறு மற்றும் உருளைக்கிழங்கினை கழுவிய தண்ணீரை முழங்கை மற்றும் முழங்கால்களில் தடவ கருமைநிறம் நீங்கி சருமம் மென்மையாகிறது.

ஸ்கர்வி நோய்க்கு

விட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படும் ஸ்கர்வி நோய்க்கு இக்காய் சிறந்த தீர்வாக உள்ளது.

ஸ்கர்வி நோயால் உதடுகளின் ஓரங்களில் வெடிப்பு ஏற்படுதல் மற்றும் ஈறுகள் வீங்கி பூஞ்சையால் பாதிப்படைதல் போன்றவை ஏற்படும்.

உலக மக்களிடம் விட்டமின் சி குறைவால் ஏற்படும் ஸ்கர்வி நோய்க்கு உருளைக்கிழங்கு சரியான தீர்வினை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாத நோயைக் குணப்படுத்த

உருளைக்கிழங்கில் உள்ள மெக்னீசியம், கால்சியம் போன்ற தாதுஉப்புக்கள் வாதநோயைக் குணப்படுத்த உதவுகின்றன.

உருளைக்கிழங்கினை கொதிக்க வைத்த தண்ணீரானது வாதநோயால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்திற்கு நிவாரணம் அளிக்கிறது.

இக்காயானது அதிக கார்போஹைட்ரேட்டைக் கொண்டுள்ளதால் இதனை உணவாக உண்ணாமல் வெளிப்புறத்தில் (அரைத்து பூசுதல்) உபயோகித்தால் வாதநோயாளிகளுக்கு சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

வீக்கத்தைக் குறைத்தல்

உருளைக்கிழங்கானது உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் ஏற்படும் வீக்கத்தினைக் குறைக்க உதவி செய்கிறது.

உருளைக்கிழங்கில் உள்ள விட்டமின் சி, பொட்டாசியம், விட்டமின் பி6(பைரிடாக்ஸின்) போன்றவை குடல் மற்றும் செரிமானப் பாதையில் ஏற்படும் வீக்கத்தினைச் சரிசெய்கிறது.

வாய்ப்புண் இருப்பவர்களும் இக்காயினை உண்டு நிவாரணம் பெறலாம்.

கீல்வாதத்தினால் அவதியுறுபவர்கள் உருளைக்கிழங்கினை வெளிப்புறத்தில் பூசி நிவாரணம் பெறலாம்.

புற்றுநோயைத் தடுக்க

உருளைக்கிழங்கில் உள்ள ஃப்ளவனாய்டுகள், ஆன்டிஆக்ஸிஜென்டுகள், விட்டமின் ஏ போன்றவை புற்றுநோய் உருவாவதைத் தடைசெய்கின்றன.

மேலும் உருளைக்கிழங்கில் க்யூயர்சிடின் என்ற புற்றுநோய் தடுப்புப்பொருள் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

க்யூயர்சிடின் வேதிப்பொருளானது உடலில் புற்றுநோய் மற்றும் கட்டிகள் ஏற்படா வண்ணம் பாதுகாக்கிறது.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க

உயர் இரத்த அழுத்தமானது பதற்றம், செரிமானமின்மை, சர்க்கரை நோய், உணவுப் பழக்கவழக்கம் எனப்பல வகைகளில் ஏற்படுகிறது.

பதற்றத்தினால் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தை உருளைக்கிழங்கு சரிசெய்கிறது.

உருளையில் உள்ள விட்டமின் சி மற்றும் நார்ச்சத்து செரிமானத்தை நன்கு நடைபெறச் செய்து செரிமானமின்மையால் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தைச் சரிசெய்கிறது.

உருளையில் உள்ள நார்சத்து கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைத்து உயர் இரத்த அழுத்தத்தை சரிசெய்கிறது.

அத்தோடு இன்சுலின் சுரப்பினையும் அதிகரிக்கிறது.

மேலும் உருளையில் உள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தை சீர்செய்கிறது.

ஆரோக்கியமான மூளையின் செயல்பாட்டிற்கு

உருளைக்கிழங்கியில் அதிகளவு கார்போஹைட்ரேட் காணப்படுகிறது.

இதனால் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரித்து சோர்வு அடையாமல் மூளையின் அறிவாற்றல் செயல்திறனை அதிகரித்து ஆரோக்கியமாகச் செயல்படச் செய்கிறது.

உருளையில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபினை அதிகரித்து மூளைக்கு அதிகளவு ஆக்ஸிஜன் கிடைக்கச் செய்து நன்கு செயல்பட வைக்கிறது.

இக்காயில் உள்ள விட்டமின் பி தொகுப்புக்கள் மற்றும் பாஸ்பரஸ், துத்தநாகம் போன்றவை மூளையை நன்கு செயல்படத் தூண்டுகின்றன.

சிறுநீரகக் கற்களைக் கரைக்க

இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும்போது சிறுநீரகக் கற்கள் தோன்றுகின்றன.

புரதச்சத்து அதிகம் உள்ள உணவினை உண்ணும்போது இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும்.

மேலும் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து சிறுநீரகக்கற்கள் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.

புரதச்சத்து குறைவாக உள்ள உருளைக்கிழங்கில் உள்ள மெக்னீசியச்சத்து சிறுநீரகக் கற்களை கரைக்க உதவுகிறது.

எனவே சிறுநீரகக் கற்கள் கரைய உருளைக்கிழங்கினை உணவாகக் கொள்ளலாம்.

உருளைக்கிழங்கினை வாங்கும் முறை

உருளைக்கிழங்கினை வாங்கும்போது புதிதானதாக, கனமானதாக தொட்டால் கடினமானதாக இருப்பதை வாங்க வேண்டும்.

வெட்டுக்காயங்கள் உடைய தோல் சுருங்கியவற்றை நீக்கிவிட வேண்டும்.

முளைப்புகளுடன், மேற்தோலில் பச்சை நிறம் உடையவற்றையும் நீக்கிவிட வேண்டும்.

உருளைக்கிழங்கினை பயன்படுத்தும் முறை

உருளைக்கிழங்கின் தோலினை சமைப்பதற்கு முன்னர் அகற்றக் கூடாது.

ஏனெனில் தோல் மற்றும் அதன் அடிப்பரப்பில் விட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்கள் அதிகளவு உள்ளன.

தோலினை நீக்கும்போது நுண்ஊட்டச்சத்துக்கள் வீணாகிவிடும்.

உருளைக்கிழங்கினை வேக வைக்கும்போது முதலில் தண்ணீரை கொதிக்கவிட்டு பின் அதனுடன் கிழங்கினைச் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் சமைக்கும் நேரம் குறைவதோடு விட்டமின் சி-யும் சிதைவுறாமல் இருக்கும்.

உருளைக்கிழங்கினை வறுக்கும்போது அதில் உள்ள விட்டமின் சி 75 சதவீதம் சிதைந்து விடுகிறது. எனவே இக்கிழங்கினை வேகவைத்து பயன்படுத்துவது நல்லது.

உருளைக்கிழங்கினை அறையின் வெப்பநிலையில் வைக்கும்போது அது எளிதில் முளைத்துவிடும். எனவே சூரிய ஒளிபடாத சற்று குளிர்ந்த இடத்தில் வைப்பது சிறந்தது.

உருளைக்கிழங்கினையும் வெங்காயத்தையும் அருகருகே வைக்கக்கூடாது. அவ்வாறு வைக்கும்போது இரண்டுமே சீக்கிரம் அழுகி விடும்.

உருளைக்கிழங்கு குவியலில் ஏதேனும் ஒன்று கெட்டுப்போய் இந்தால் அதனை உடனே அப்புறப்படுத்தவும். இல்லைஎனில் எல்லா    கிழங்கும் சீக்கிரம் கெட்டு விடும்.

சத்துக்கள் நிறைந்த இயற்கையின் கொடையான உருளைக்கிழங்கினை அளவாக உணவில் உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.