உருளைக்கிழங்கு ரிங்ஸ் செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு ரிங்ஸ் வித்தியாசமான, சுவையான நொறுக்குத்தீனி வகையைச் சார்ந்தது.

சமோசா, பிஸ்கட், முறுக்கு, சாக்லேட் உள்ளிட்டவைகளைச் சாப்பிட்டு போரடிக்கும் போது இதனை செய்து உண்ணலாம்.

மாலை நேரங்களில் இதனை குழந்தைகளுக்குச் செய்து கொடுக்கலாம். இதனை எல்லோரும் விரும்பி உண்பர்.

இதில் மிளகு, சீரகம், கரம் மசாலா உள்ளிட்ட மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படுவதால் இதனை அப்படியே உண்ணலாம்.

இனி சுவையான உருளைக்கிழங்கு ரிங்ஸ் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 200 கிராம் (1 கப்)

ரவை – 100 கிராம் (1/2 கப்)

அரிசி மாவு – 2 ஸ்பூன்

கார்ன்ஃப்ளார் மாவு – 5 ஸ்பூன்

நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்

வெள்ளைப் பூண்டு – 3 பற்கள்

கரம் மசாலாப் பொடி – 2 தேக்கரண்டி

மிளகுப் பொடி – 1 தேக்கரண்டி

சீரகப் பொடி – 1 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் ‍ (1/2 கப்)

கடலை எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை

உருளைக்கிழங்கினை குக்கரில் நன்கு வேக வைத்து தோலை உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும்.

வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வெறும் வாணலியில் ரவையை வாசம் வரும் வரை ஒரே சீராக வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.

ரவையை வறுக்கும் போது

ரவை ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

வாயகன்ற வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்ல எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், நறுக்கிய வெள்ளைப்பூண்டினைச் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.

வெள்ளைப்பூண்டினை சேர்த்ததும்

அதனுடன் மிளகுப் பொடி, சீரகப் பொடி, கரம் மசாலாப் பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.

மசாலாப் பொடிகளைச் சேர்த்ததும்

மசாலா பொடிகளின் பச்சை வாசனை நீங்கியதும், அதனுடன் அரை கப் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் சேர்த்ததும்

தண்ணீர் கொதித்ததும் அரைத்து வைத்துள்ள ரவை மற்றும் அரிசி மாவினை சிறிது சிறிதாகச் சேர்த்து கிளறவும்.

பொடித்த ரவையைச் சேர்க்கும் போது

ரவை வெந்து கெட்டினாதும் அதனை இறக்கி விடவும்.

ரவை கெட்டியானதும்

அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு சேர்க்கவும்.

மசித்த உருளைக்கிழங்கைச் சேர்த்ததும்

உருளைக்கிழங்கும் ரவையும் ஒன்றுடன் ஒன்று நன்கு சேரும்படி நன்கு கிளறி சப்பாத்தி மாவு பதத்திற்குத் திரட்டவும்.

மாவினைத் திரட்டியதும்

அதிலிருந்து சிறிதளவு மாவினை எடுத்து கார்ன்ஃப்ளார் மாவு தூவிய சப்பாத்திக் கல்லில் வைத்து 1/4 இன்ச் தடிமன் உள்ள சப்பாத்தியாக விரிக்கவும்.

சப்பாத்தியாக விரித்ததும்

சிறியது பெரியதுமான இரண்டு வெவ்வேறு அளவுள்ள மூடிகளை எடுத்துக் கொள்ளவும். பெரிய மூடியினைக் கொண்டு விரித்த சப்பாத்தி மாவில் படத்தில் உள்ளவாறு வட்டங்களாக துளையிடவும்.

பெரிய வளையத்தால் துளையிடும் போது

சிறிய மூடியினைப் பயன்படுத்தி பெரிய வட்டங்களுக்குள் சிறிய வட்டங்களாக துளையிடவும்.

சிறிய வளையத்தால் துளையிட்டதும்

வட்டத்தைச் சுற்றிலும் மற்றும் வட்டத்திற்குள்ளும் உள்ள மாவினை வெளியே எடுத்து விடவும். இப்பொழுது வளைய வடிவத்தில் மாவு இருக்கும். இவ்வாறு எல்லா மாவினையும் வளையங்களாக மாற்றிக் கொள்ளவும்.

வளையங்கள்

வாணலியை அடுப்பில் வைத்து கடலை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் அடுப்பினை வைத்து, வளையங்களை ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு அவ்வப்போது திருப்பி விடவும்.

வளையங்கள் வேகும் போது

எண்ணெய் குமிழி அடங்கியதும் வளையங்களை வெளியே எடுத்து விடவும்.

சுவையான உருளைக்கிழங்கு ரிங்ஸ் தயார்.

உருளைக்கிழங்கு ரிங்ஸ்
உருளைக்கிழங்கு ரிங்ஸ்

குறிப்பு

உருளைக்கிழங்கு மற்றும் ரவை எடுக்கும்போது சரியான அளவினைப் பயன்படுத்தவும். இல்லையெனில் மாவு மிகவும் கெட்டியாகவோ அல்லது தளர்வாகவோ இருந்து சப்பாத்தியாக விரிக்க இயலாமல் போகும்.

விருப்பமுள்ளவர்கள் மிளகாய்த்தூள் சேர்த்து ரிங்ஸ் தயார் செய்யலாம்.

மிகவும் மெல்லிய தடிமன் உள்ள சப்பாத்தியாக விரித்து ரிங்ஸ் தயார் செய்யும் போது அது எளிதில் உடைந்து விடும். ஆதலால் குறிப்பிட்ட தடிமனுடைய சப்பாத்தியாக விரிப்பது சிறந்தது.

ஜான்சிராணி வேலாயுதம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.