உருளைக்கிழங்கு விரல் வறுவல் என்பது அருமையான தொட்டுக்கறி ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பி உண்பர்.
உருளைக் கிழங்கு என்பது பலருக்கும் விருப்பமான உணவுப் பொருள். இதனைக் கொண்டு பலவிதமான உணவுப் பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன.
அவற்றுள் ஒன்றுதான் உருளைக் கிழங்கு விரல் வறுவல். இனி சுவையான உருளைக்கிழங்கு விரல் வறுவல் செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
உருளைக் கிழங்கு – 300 கிராம்
ரவை – 3 மேசைக் கரண்டி
அரிசி மாவு – 2 மேசைக் கரண்டி
சோள மாவு – 3 மேசைக் கரண்டி
வற்றல் பொடி – 2 டீஸ்பூன்
மிளகு – 10 எண்ணம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

உருளைக்கிழங்கு விரல் வறுவல் செய்முறை
முதலில் உருளைக் கிழங்கினை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் உருளைக்கிழங்கின் தோலினை உரித்து மசித்துக் கொள்ளவும்.
மிளகினைப் பொடித்துக் கொள்ளவும்..
மசித்த உருளைக் கிழங்கு கலவையுடன் ரவை, அரிசி மாவு, சோள மாவு, வற்றல் பொடி, மிளகுப் பொடி, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து சப்பாத்தி மாவு போல் திரட்டிக் கொள்ளவும்.


பின்னர் அதில் இருந்து சிறு உருண்டையைத் தயார் செய்து அதனை விரல் வடிவத்துக்கு திரட்டவும். இவ்வாறு எல்லா மாவையும் விரல்களாகத் திரட்டவும்.

அடுப்பில் வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் அதில் விரல்களாகத் திரட்டிய மாவினைச் சேர்த்து பொரிக்கவும்.
விரல்களைப் பொரிக்கும் போது
விரல்களை அவ்வப்போது பிரட்டிவிட்டு குமிழி அடங்கியதும் எண்ணெயை வடித்து விட்டு விரல்களை வெளியே எடுக்கவும்.
சுவையான உருளைக்கிழங்கு விரல் வறுவல் தயார்.
சுவையான உருளைக்கிழங்கு விரல் வறுவல்
இதனை எல்லா வகையான சாதங்களுக்கும் தொட்டுக்கறியாகப் பயன்படுத்தலாம்.
குறிப்பு
உருளைக் கிழங்கு விரல்களைப் பொரித்து எடுக்கும் போது எண்ணெய் மிதமான சூட்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
உருளைக் கிழங்கினை அழுத்தினால் கடினமானதாக உள்ளவற்றை தேர்வு செய்யவும்.
உருனைக் கிழங்கினை மசித்தால் நன்கு மசியும்படி நன்கு வேக வைத்து எடுக்கவும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!