உருளைக்கிழங்கு வெங்காய வடை செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு வெங்காய வடை சிறிது நேரத்தில் சட்டென்று செய்யக் கூடிய ருசியான சிற்றுண்டி. வீட்டிற்கு திடீர் விருந்தினர் வருகையின் போது இதனை செய்து அசத்தலாம்.

இதற்கு உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் இருந்தால் போதும். இனி உருளைக்கிழங்கு வெங்காய வடை செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 2 எண்ணம் (1/4 கிலோ கிராம்)

பெரிய வெங்காயம் – 2 எண்ணம் (1/4 கிலோ கிராம்)

கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்

சோள மாவு – 2 ஸ்பூன்

மிளகாய் வற்றல் பொடி – 1/2 ஸ்பூன்

மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்

கரம் மசாலா பொடி – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

இஞ்சி – பாதி சுண்டு விரல் அளவு

பச்சை மிளகாய் – 1 எண்ணம்

கொத்த மல்லி இலை – 1 கொத்து

கறிவேப்பிலை – 3 கீற்று

கடலை எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

உருளைக்கிழங்கு வெங்காய வடை செய்முறை

உருளைக்கிழங்கின் தோலை நீக்கிக் கொள்ளவும். பின்னர் அதனை இழைப்பானில் இழைத்துக் கொள்ளவும்.

துருவிய உருளைக்கிழங்கு

பெரிய வெங்காயத்தை பொடியாக நேராக வெட்டிக் கொள்ளவும்.

நறுக்கிய வெங்காயம்

கொத்த மல்லி இலை, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி நசுக்கிக் கொள்ளவும். உருளைக் கிழங்கில் உள்ள அதிகப்படியான தண்ணீரை பிழிந்து விடவும்.

உருளைக் கிழங்கினை அதிக நேரம் காற்றில் வைத்திருந்தால் நிறம் மாறி விடும். எனவே கடைசியாக உருளைக் கிழங்கினை தயார் செய்யவும்.

வாயகன்ற பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கு, நறுக்கிய பெரிய வெங்காயம், கடலை மாவு, சோள மாவு, மஞ்சள் பொடி, கரம் மசால் பொடி, மிளகாய் பொடி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்த மல்லி இலை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

எல்லாப் பொருட்களையும் சேர்த்ததும்
எல்லாப் பொருட்களையும் கலந்ததும்

வாணலியை அடுப்பில் வைத்து கடலை எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள கலவையை கையில் எடுத்து வடைகளாகத் தட்டி போடவும்.

வடைகளாகத் தட்டியதும்
வடைகள் வேகும் போது

குமிழி அடங்கியதும் வடைகளை எடுத்து விடவும். சுவையான உருளைக்கிழங்கு வெங்காய வடை தயார். இதனை மாலை நேரத்தில் டீ-யுடன் சேர்த்து உண்ணப் பொருத்தமாக இருக்கும்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் புதினா இலையைச் சேர்த்தும் இந்த வடையைத் தயார் செய்யலாம்.

வடைகள் வேகமாக வெந்து விடும். ஆதலால் அடுப்பினை மிதமான தீயில் வைக்கவும்.

ஜான்சிராணி வேலாயுதம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.