“தெரியுமா சேதி?” என்ற மாதவியின் வார்த்தைக்கு பின்னால், ஒளிந்திருக்கும் அந்த செய்தி என்னவாக இருக்கும்னு தானே யோசிக்கிறீங்க. வாங்க சொல்றேன்.
முதலில் ஒரு விஷயம் தெளிவா புரிஞ்சிச்சிகிட்டு, நாம, அடுத்தபடியா அவுங்க சொன்ன “தெரியுமா செய்திக்கு?” போவோம்.
பொதுவான விஷயத்தை பாப்போம்.
அது என்ன?
ஒரு செய்தியை சொல்றவங்கள வச்சும், அந்த செய்தியை கேக்றவங்கள வச்சும் தான், அந்த செய்தியோட அர்த்தம் வெளிப்படும்.
அது எப்படின்னு தானே யோசிக்கிறீங்க?
சொல்றவங்களுக்கு சாதகமா இருக்கணும்னா, அவுங்களுக்கு ஏத்த மாதிரி சொல்வாங்க, இல்ல கேக்குறவங்களுக்கு சாதகமா அமையணுனா, அவுங்களுக்கு சாதகமா சொல்லுவாங்க.
மாதவியின் முகத்தையே பார்த்த கண்ணகிக்கு மட்டும் தெரியும், ‘ஏதோ வில்லங்கமான செய்தி வாயிலிருந்து விழப் போகுதுன்னு’.
கண்ணகிக்கு எதிர்த்து பேச முடியாது என்றெல்லாம் இல்லை. இருந்தாலும் அவளும் பெண்தானே!
‘புறம்பேசும் வார்த்தைகள் தனக்கு பாதகமில்லை என்றால், பொழுபோக்குக்கு காதை கடன் கொடுப்பதில் தவறில்லை!’ என்று தோன்றியது அவளுக்கு.
நடந்து போய்க் கொண்டே பேச்சை தொடர்ந்தார்கள், வழியில் கடந்து சென்றவர்களை பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் இருவரும்.
செவ்வாய் தோறும் துர்கை கோவிலுக்கு செல்வது வழக்கம். இருவரும் உறவுக்காரர்கள்.
உறவு என்றாலே, உள்ளுக்குள் ஏதோ ஒருவகையான பகை / கசப்புணர்வு ஓடிக்கொண்டே தானிருக்கும்.
இது இவர்களுக்கு மட்டுமல்ல; எல்லோருடைய வாழ்விலும் நடக்கும் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகிவிட்டது.
இது சிலருக்கு வெளியில் தெரியும் அளவுக்கு இருக்கும், ஒரு சிலருக்கு உள்ளுக்குள்ளேயே ஓடிக்கொண்டிருக்கும்.
மாதவி வாய்க்கு மட்டும் ஓய்வு கொடுத்ததாக தெரியவில்லை. தூங்கும்போது கூட, ஏதாவது சொல்லி புலம்பியபடியே தான் தூங்குவாள்.
‘என்ன கதையின் ஆரம்பத்திலே மாதவியை கொடுமையாக சித்தரிக்கிறீர்களே?’ என்று நினைத்து விடாதீர்கள், கதையின் போக்கில் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
சொல்ல வந்த செய்தி ஆரம்பிக்கும் முன்னே, இடை இடையே சின்ன சின்ன இடையூறுகள் / கிராஸ் டாக்கிங் மாதவிக்கு, போகும் வழியெங்கும் நிறைய தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அதனால், சொல்ல வந்த செய்தியை சொல்ல முடியாமல் போனது, கோவிலும் வந்துவிட்டது.
நிறைய பெண்களின் கூட்டம். கையில் இருந்த அர்ச்சனை கூடையை விட, மனதிலிருந்த வேண்டுதலின் எடை தான் அதிகமாக இருந்தது எல்லோருக்கும்.
ஆளுக்கொரு கவலை, அதற்கான வேண்டுதல். பூஜை அவசரமாக நடக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் ஐயரையே முறைத்துக் கொண்டிருக்கும் எல்லோருக்கும் இடையில், மாதவியும் கண்ணகியும் வேறு சேர்ந்து கொண்டனர்.
இவர்களுக்குள்ளும் பல்வேறு ஆசைகள். மனம் விட்டு சொல்ல முடியாத வேண்டுதல்கள்.
ஆனால், இந்த கோவிலுக்கென்று ஒரு சில வரைமுறைகளை வைத்திருக்கின்றனர்.
அது, அம்மனின் அங்கீகாரம் பெற்றவர் போல இருக்கும் ஒரு பெண்மணியிடம் தான், சொல்லக்கூடிய வேண்டுதல்களை சொல்லுவார்கள்.
அவர் மட்டுமே, உரக்க அம்மனிடம் சொல்லுவார். அவர் சொல்லுவது அப்படியே நடக்கும் என்ற நம்பிக்கை, இன்றளவும் அங்குள்ள பெண்களிடம் நிலவும் மன ஆறுதல்.
ஐயரின் மெதுவான பூஜை நிகழ்வுகள், பல பெண்களுக்கு ரத்த கொதிப்பை அதிகரிக்க செய்தது.
அம்மன் என்னவோ கேட்டவுடன் கொடுப்பதற்கு தயாராக இருப்பதைப் போலவும், ஐயர் தான் அதை தடுப்பது போலவும் பரபரப்பாக காணப்பட்டனர்.
ஒருசில பெண்களோ, ஆண்டுத் தேர்வுக்கு அரைகுறையாக படித்து வந்த மாணவர்கள் போல வேண்டுதல்களை மனதுக்குள்ளே சொல்லிக் கொண்டிருந்தனர்.
ஒரு சிலர் ஐயரின் குறைகளை கமெண்ட் அடித்து பேசிக் கொண்டிருந்தனர்.
ஒரு சில இளசுகள் மட்டும், விரலை விசிறியாக்கி முகத்தின் வியர்வைக்கு காற்று விட்டு காய வைத்து கொண்டிருந்தனர்.
ஒருவழியாக ஐயர் அபிஷேகம் முடித்து, அலங்காரத்துக்கு திரையை மூடினார்.
இனி, அம்மனுக்கு, நாம பேசுவது காதில் விழாது என்பது போல அனைத்து பெண்களின் பேச்சுகள் சத்தமாக இருந்தது.
மாதவிக்கு விட்டுப்போன செய்தியை சொல்ல நேரம் வந்தது போல கண்ணகியை பார்த்தாள். கண்ணகிக்கு புரிந்து விட்டது, சொல்ல வந்த செய்தியை கேட்க ஆர்வமாக பார்த்தாள்.
“உங்க கொழுந்தனார் பையனுக்கு கல்யாணம் ஆயிடுச்சாமே! உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஆனா, எனக்கு நீங்க சொல்லவே இல்ல!”
“அப்படியெல்லாம் இல்ல!, அப்படியிருந்தா நமக்கு சொல்லாமலா இருப்பாங்க, அப்படி நடந்தும் இருக்காது”
“ம்ம், எப்படி நீங்க விட்டு கொடுப்பீங்க, ரொம்ப புடிச்சவங்களாச்சே!”
“அப்போ நீங்க யாரு எனக்கு?”
“நானெல்லாம் சும்மா, கணக்கிலே இல்ல!”
“அப்படியெல்லாம், சொல்லாதீங்க அத்தாச்சி, நீங்க தான் முதல் ஆளு அப்புறம் தான், நானெல்லாம்”,
“இத நானா சொல்லல. ஒருமுக்கியமான ஆளு தான் சொன்னாங்க, அதான் சொன்னேன்”,
பேசிக் கொண்டிருந்த மாதவி, திடீர்ன்னு கண்ணகியின் கையை பிடித்து அழுத்தி, “எதுவும் பேசாதீங்க!” என்று சொல்லிக் கொண்டே வெளிப்பக்கம் பார்வையைச் செலுத்தினாள் லேசான புன்னகையுடன்.
கண்ணகி மாதவியின் பார்வை சென்ற திசையை நோக்கி பார்த்து அதிர்ச்சியடைந்தாள்.
வருகின்ற பெண்மணியின் மகனை பற்றித்தான் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அது வேறு யாருமல்ல, மாதவிக்கு அண்ணி, கண்ணகிக்கு உடன்பிறவா சகோதரி ஆனால் மூத்தவள்.
கண்ணகிக்கு ஒரே பயம், ‘பேசிக் கொண்டிருந்ததை அக்கா கேட்டிருப்பார்களோ!’ என்று.
கண்ணகிக்கு, தைரியம் கிடையாது மாதவியை போல யாரைப் பற்றியும் அக்கப்போர் பேசுவதற்கு.
ஆனால், யாரவது ஏதாவது சொன்னால், கேட்பதற்கு மட்டும் ஆர்வம். ஆனால் இன்று யாரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தமோ அவர்களே இருக்கிறார்கள்.
கேட்டிருந்தால் காலத்திற்கும் சொல்லிக் காட்டுவார்களே, இல்லையென்றால், வெறுத்துப் போய் பேசாமலே இருந்து விடுவார்களோ, இல்லையென்றால் வீட்டுக்காரரிடம் சொல்லி சண்டை வளர்ப்பார்களோ, தெரிந்தே தவறு செய்து உடனே மாட்டிக் கொண்ட குழந்தையை போல மனம் அல்லாடிக் கொண்டிருக்க, அவரோ, நேரில் வந்து, எதுவும் பேசாமல் கோவிலை சுற்ற ஆரம்பித்தார்.
இவளுக்கு இன்னும் படபடப்பு அதிகரித்தது.
மாதவி அம்பாளுக்கு விளக்கு ஏற்றுவது போல பாவனை செய்து கொண்டிருந்தாள்.
‘சரி, இனி மாதவியுடன் இருப்பது சரியல்ல!’ என்று தோன்றியது கண்ணகிக்கு.
அக்கா முதல் சுற்று வரும்போது தன்னையும் இணைத்துக் கொள்ள தயாரானாள் கண்ணகி.
அருகில் வந்ததும் சேர்ந்து கொண்டே பேச்சுக் கொடுத்தாள். அவளும் எதிர்பார்த்திருந்தது போல முகத்தில் ஆர்வம் தெரிந்தது. இப்போது தான் கண்ணகிக்கு கொஞ்சம் நிம்மதி ஆனது.
வீட்டில் உள்ளவர்களின் நலம் விசாரித்துக் கொண்டே நடந்தாள்.
“என்ன புள்ளைக்கு கல்யாணம் நடக்கும்னு வந்திருக்கிறாயா?”,
“ஆமா அக்கா! மோனிஷுக்கு எப்போ கல்யாணம்? பொண்ணு பார்த்தாச்சா?”
“ம்ம், நீ இல்லாமலா பண்ணிடுவோம், இந்த அம்பாளுகிட்ட ரெண்டு வாரத்துக்கு முன்னாடிதான் வந்து கோரிக்கை வச்சேன். மூணாவது வாரத்துக்குள்ள முடிஞ்சிடுச்சி, அதான் கல்யாணம் நல்லா நடக்கணும்னு வேண்டி விளக்கு போட வந்திருக்கேன்.
உனக்கு சேதி தெரியுமா? மாதவி பையன் யாரையோ காதலிக்கிறானாம். அவன் அந்த பொண்ணோட சுத்துறத, மோனிஷ் போட்டோ எடுத்து வந்து காட்டுனான்.
அதுக்குகூட நான் திட்டினேன். அவுங்க அப்பா, அம்மாவுக்கு தெரிஞ்சா மனசு கஷ்டப்படுவாங்கன்னு. அத பாரு நம்பிக்கையோடு விளக்கு போட வந்திருக்கு. அதுகிட்ட சொல்லிடாத!”, அக்கா சொல்லி முடிவதற்கும் அம்பாளின் திரை விலகுவதும் சரியாக இருந்தது.
மின்சார விளக்கில் பிரகாசமாக தெரியும் அம்பாளின் முகம், சற்று இருட்டாக தெரிந்தது, கொஞ்ச நேரம் முன்பாக தான் மின்சாரம் நின்றிருக்கிறது.
இப்போது, மாதவியும் அக்காவும், அருகருகே கட்டி தழுவி, நலம் விசாரித்து கொண்டிருந்தனர். இவர்களை பார்த்த கண்ணகிக்கு தலை சுற்றுவது போல இருந்தது.
திரும்பி அம்பாளை பார்த்தாள், அம்பாள் முழுமையாக தெரியவில்லை, தீப ஒளியில் முகம் மட்டும் லேசாக தெரிந்தது, இவர்களை எல்லாம் பார்த்து சிரிப்பது போல இருந்தது.
வேண்டிக் கொள்ள வந்தது என்ன என்பதே மறந்து போயிருந்தது கண்ணகிக்கு.
பொய்கை கோவி அன்பழகன்
மயிலாடுதுறை
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!