உறுதியான கால்சியம் தான் விலங்குகளுக்கு உருவத்தை கொடுப்பதோடு அவைகளின் நகர்வுக்கும் வழி செய்கிறது.
பூமியின் மேற்பரப்பில் அதிக அளவு கிடைக்கும் ஐந்தாவது தனிமம் கால்சியம். 1808 ஆம் ஆண்டு, ஹம்ப்ரி டேவி என்பவரால் கண்டறியப்பட்ட கால்சியத்தின் வேதியியல் குறியீடு ‘Ca’. இக்குறியீடானது ‘சுண்ணாம்பு’ எனப் பொருள் தரும் ’லத்தின்’ சொல்லான காலக்ஸ் (Calx) என்பதிலிருந்து பெறப்பட்டது.
சாம்பல் நிற மற்றும் மிருதுவான தனிமமான கால்சியம் உயிரினங்களில் ஒன்றரக் கலந்துள்ளது. குறிப்பாக, உயிரினத்தின் கடினமான பாகமாகவும் (ஓர் உறுப்பாக) உள்ளது.
ஆனால் தனிமமாக அல்ல. சேர்மமாக! ஆமாம், ஹைட்ராக்சி அபடைட்டாகவும், கால்சியம் கார்பனேட்டாகவும் இது உயிரினத்தில் உள்ளது. இது குறித்த தகவல்களை காண்போம்.
எலும்பு
எலும்பு, விலங்குகளுக்கு உருவத்தை கொடுப்பதோடு, அவைகளின் நகர்வுக்கும் வழி செய்கிறது. எலும்புகள் அதன் அமைப்பை பொருத்து நீண்ட, குறுகிய, தட்டையான, ஒழுங்கற்ற மற்றும் செஸ்மாய்ட் என ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஆனால் எலும்பு வகைகளின் வேதிப்பொருளில் பெரிய அளவில் மாற்றமில்லை.
எலும்பானது சுமார் முப்பது சதவிகிதம் கரிம பொருளாலும் (கொள்ளோஜன் முதலியன), எழுபது சதவிகிதம் ஹைட்ராக்சி அபடைட் எனப்படும் கனிமத்தாலும் ஆனது.
கால்சியம் (Ca), பாஸ்பரஸ் (P), ஆக்ஸிஜன் (O) மற்றும் ஹைட்ரஜன் (H) போன்ற தனிமங்கள் குறிப்பிட்ட விகிதத்தில் சேர்ந்து Ca10(PO4)6(OH)2 (மூலக்கூறு வாய்பாடு) எனப்படும் ஹைட்ராக்சி அபடைட்டை உருவாக்குகிறது. இது ஒரு கடினமான சேர்மமாக இருப்பதாலேயே, எலும்புகள் உறுதியுடன் உள்ளன.
பற்கள்
முதுகெலும்புள்ள பெரும்பாலான விலங்குகளின் வாயில் இருக்கும் உறுதியான பற்கள், அவை உண்ணும் உணவினை அரைப்பதற்கு உதவுகின்றன. சில விலங்குகளுக்கு பற்கள் இரையை வேட்டையாடுவதற்கும், தற்காத்து கொள்வதற்கும் பயன்படுகின்றன.
பற்கள் (குறிப்பாக எனாமல்) சுமார் தொன்னூற்று ஆறு சதவீதம் ஹைட்ராக்சி அபடைட்டால் ஆனது. ஏனைய நான்கு சதவீதம் புரதம் மற்றும் நீரினால் ஆனது. அதிக அளவு ஹைட்ராக்சி அபடைட்டினால், பற்களுக்கு உறுதி தன்மை கிடைப்பதோடு உடையகூடிய தன்மையும் உண்டாகிறது.
ஹைட்ராக்சி அபடைட் அமிலத்தில் கரையும் தன்மை கொண்டது. இதன் காரணமாகவே, பற்சிதைவும் ஏற்படுகிறது. அதாவது, உணவில் (உண்ட பின்பு வாய் இடுக்கில் இருக்கும் உணவு துகள்) உள்ள கார்போஹைட்ரேட்டு வாயில் இருக்கும் பாக்டீரியாங்களால் சிதைக்கப்பட்டு லாக்டிக் அமிலத்தை உண்டாக்குகிறது.
இவ்வமிலத்தில் ஹைட்ராக்சி அபடைட் கரைவதால் பற்சிதைவு உண்டாகிறது. எனவேதான், தூங்க செல்லும்முன், பற்துலக்குதல் அவசியம் என்கின்றனர் பல் மருத்துவர்கள்.
கடல் சிப்பிகள்
கடல் மெல்லுடலிகளை (கடல் சிப்பிகள்) பாதுகாக்கும் கூடானது ’கால்சியம் கார்பனேட்’ எனும் சேர்மத்தாலும், சிறிதளவு புரதத்தாலும் ஆனது.
கால்சியம், கார்பன் (C) மற்றும் ஆக்ஸிஜன் முதலிய தனிமங்கள் குறிப்பிட்ட விகிதத்தில் சேர்ந்து கடினமான கால்சியம் கார்பனேட்டை (CaCO3) தருகிறது. இதுவே, கடல் சிப்பிகளின் கூட்டிற்கு கடினத் தன்மையை கொடுக்கிறது.
பவளப் பாறைகளின் (முதுகெலும்பில்லாத விலங்கு) கடினத் தன்மைக்கும் கால்சியம் கார்பனேட்டே காரணம்.
முட்டை கூடு
கடினமான, அதே சமயத்தில் உடையக் கூடிய முட்டை கூடு எதனால் ஆனது? இதுவும் கால்சியம் கார்பனேட்டால்! முட்டை கூட்டில் தொன்னூற்று ஐந்து சதவீதம் கால்சியம் கார்பனேட் இருக்கிறது.
மீதமிருக்கும் ஐந்து சதவீதம் கால்சியம் பாஸ்பேட் (Ca3(PO4)2), மெக்னீஷியம் கார்பனேட் (MgCO3) மற்றும் கரையாத புரதத்தால் ஆனது.
நத்தை கூடு
மெதுவாக ஊர்ந்து செல்லும் நத்தையின் கூடும் கால்சியம் கார்பனேட்டால் ஆனது. குறிப்பாக செபாவெந்தொ பொனாசிஸ் எனும் ஒரு வகை நத்தையின் கூடு சுமார் தொன்னூற்று எட்டு சதவிகிதம் கால்சியம் கார்பனேட்டால் ஆனது. இரண்டு சதவீதம் இரும்பு, அலுமினியம், மாங்கனீசு, மெக்னீஷியம் உள்ளிட்ட சேர்மங்களால் ஆக்கப்பட்டுள்ளது.
மீன்கள்
மீன்களின் உடம்பில் இருக்கும் முற்களிலும் கால்சியம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக, மீன்களை பொருத்து, வேதிப் பொருட்கள் மாறுபடும் என்ற பொழுதிலும், சால்மன் மற்றும் காட் போன்ற மீன்களின் எலும்புகளில் கால்சியம் அதிகம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
– முனைவர்.ஆர்.சுரேஷ்
ஆராய்ச்சியாளர்
பகுப்பாய்வு மற்றும் கனிம வேதியியல் துறை
கன்செப்ஷன் பல்கலைக்கழகம், சிலி
sureshinorg@gmail.com