உற்று நோக்கு – படிப்பது எப்படி? – பாகம் 8

உற்று நோக்கு. அஃது உயர்வுக்கு உறுதுணை.

எந்த ஒரு செயலையும் மேம்போக்காகச் செய்யாமல் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செய்தால், அது மிகப்பெரிய பலன்களை நமக்குக் கொடுக்கும் என்பது குறித்து சென்ற கட்டுரையில் பார்த்தோம்.

நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உற்றுக் கவனித்தால் அது நமக்குப் பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கும். அதற்கு இதோ இரண்டு அருமையான நிகழ்ச்சிகள்.

ஜூடோ கலை பிறந்த வரலாறு

1882ம் ஆண்டு பனி படர்ந்த அந்த மலைச்சாரலில் அமைந்திருந்த ஒரு குருகுல ஆசிரமத்தில், கானோ ஜிகாரோ ஷிகான் என்ற உடற்கல்வியியல் மாணவ இளைஞர் ஆழ்நிலை தியானத்தில் அமர்ந்து இருந்தார்.

அந்த சமயத்தில் பனிக்காற்று கொஞ்சம் அதிகமாக வீசியது கண்டு அவர் மெல்லக் கண் திறந்தார்.

ஆசிரமத்தின் தாழ்வாரத்தில் அமர்ந்திருந்த அவரது கவனத்தை, ஆசிரமத்தின் முன்னே இருந்த ஒரு பைன் மரம் ஈர்த்தது. அந்த சமயத்தில் நல்ல பனி பொழிந்து கொண்டு இருந்தது.

மரத்தின் மீது வீழ்ந்த பனித்துகள்கள் மரக் கிளைகளில் அப்படியே படர்ந்து படிய ஆரம்பித்து விட்டன‌. பனி அதிகமாகப் படியப் படிய அந்த மரக்கிளை சரிந்துகொண்டே வந்தது.

கானோ, இதோ இப்போது அந்த மரத்தின் கிளை பனியின் கனம் தாங்காமல் உடைந்து விடப்போகிறது என்று நினைத்த மாத்திரத்தில் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

அதாவது மரத்தின் கிளை நன்கு கீழே வளைந்தவுடன் அதில் படிந்திருந்த பனிப் படலங்கள் கட்டியாகி சர்ரென்று வழுக்கி நிலத்தில் வீழ்ந்து விட்டது. பனிக்கட்டி சறுக்கி விழுந்தவுடன் மரக்கிளை நிமிர்ந்து தனது பழைய நிலைக்குச் சென்றது.

இதனைக் கண்டவுடன் கானோ மனதில் ஒரு யுக்தி பிறந்தது.

நம்மை யாரேனும் தாக்க வந்தால், அவரது பிடிக்குள் மாட்டுவது போல மாட்டிக்கொண்டு வளைந்து கொடுத்து, அவரை லாவகமாக கீழே உதறித் தள்ளிவிட்டு மீண்டும் நம்மால் சக்தியுடன் எழுந்து விட முடியும் என்று.

‘வலிமையை வளைந்து கொடுத்து வெல்வது’ எனும் இந்த யுக்தியில் பிறந்ததுதான் மனித குலத்துக்கு அவர் கற்றுக் கொடுத்த ஜூடோ எனும் அற்புதமான தற்காப்புக் கலை.

1964 முதல் ஜூடோ ஒலிம்பிக் போட்டிகளிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

உற்று நோக்கு என்ற மந்திரம் கானோ ஜிகாரோ ஷிகான் அவர்களை மரக்கிளையையும் பனியையும் சேர்த்து யோசிக்க வைத்தது. அவரை ஜூடோ கலையை உருவாக்க வைத்தது.

அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியக் காரணமாக இருப்பது, நிகழ்வுகள் மற்றும் தகவல்களை உற்று நோக்கு என்ற கோட்பாடு தான்.

மரத்தில் இருந்து விடுபட்ட ஆப்பிள் கீழே விழுவது எல்லோரும் பார்ப்பதுதான். அதை உற்று நோக்கி, அதைப் பற்றித் தீவிரமாக சிந்தித்ததால் புவியீர்ப்பு விசையை சர். ஐசக் நியூட்டன் கண்டுபிடித்தார். காலங்கள் கடந்தும் இன்று அவர் கொண்டாடப்படுகிறார்.

உலகின் ஓவியப் புதையல்

ஏப்ரல் மாதம் 1819ம் ஆண்டில் ஒருநாள், அப்போதைய ஆங்கிலேய அதிகாரி ஜான் சுமித் அவர்கள், மஹாராஷ்டிரா மாநிலம் ஒளரங்காபாத் நகருக்கு சற்று தொலைவில் இருந்த மலைப்பகுதியில் புலிவேட்டையில் தனது சகாக்களுடன் ஈடுபட்டிருந்தார்.

மதிய நேரம் அவர்களுக்கு சற்று ஓய்வு தேவைப்பட்டது.

ஓய்வாக ஓரிடத்தில் அவர்கள் கொட்டகை அமைத்து அமர்ந்திருந்த சமயம், அந்த இடத்தினை சுற்றி நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார் சுமித்.

மொட்டைப் பாறைகளாகக் காட்சியளித்த அந்தப் பகுதியில், ஓரிடத்தில் மட்டும் வட்டமாக பாறை மீது புற்கள் முளைத்து பச்சைப் பசேல் என புல்வெளியாகக் காட்சியளித்தது.

அதனைப் பார்த்த சுமித் தனது சகாக்களுடன் அந்த இடத்திற்குச் சென்று அதனைத் தோண்டிப் பார்க்க சொன்னார்.

தோண்டத் தோண்ட அந்தப் பகுதி குகைபோல சென்று கொண்டே இருந்தது.

குகையின் உள்ளே அழகான புத்த சமய கலாச்சாரங்களை விளக்கும் அந்த அஜந்தா குகை ஓவியங்கள் மற்றும் சிற்பங்களைக் கண்டு சுமித் அசந்தே போனார்.

அந்த ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் எல்லாம் இந்தக் குகைகளில் கி.மு. 2ம் நூற்றாண்டு முதல் கி.பி. 5ம் நூற்றாண்டு வரை உருவாக்கப்பட்டவை.

பல நூற்றாண்டுகளாக‌ மண்ணுக்குள் புதைந்து கிடந்த‌ இந்த கலைப் பொக்கிஷங்களை சுமித் கண்டறிந்தார். அவர் கண்டறிந்தது குகை எண் 10.

இதுபோல 30 குகைகள் பாரம்பரிய மிக்க ஓவியங்களுடன் உலகமே வியக்கும் வண்ணம் நமது பாரதக் கலாச்சாரத்தை பறைசாற்றிக் கொண்டு இருக்கின்றன.

இக்குகைகளை ஐ.நா சபையின் யுனெஸ்கோ அமைப்பு உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவித்துள்ளது.

இந்த குகை ஓவியங்கள் மற்றும் சிற்பங்களை நம் கண்களுக்கு விருந்தாக்கியது ஜான் சுமித் அவர்களின் ‘உற்று நோக்கு’ என்ற மந்திரம் தான்.

இன்னும் கற்றுக் கொள்ளும் யுக்திகள் நிறைய இருக்கிறது.

‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்று கூறுவார்கள். அது சார்ந்த ஒரு நிகழ்வினை அடுத்த வாரம் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

( படிப்பது எப்படி என்று படிப் படியாய்ப் படிப்போம்)

மு​னைவர் ​பொ.சாமி
வேதியியல் இ​ணைப் ​பேராசிரியர்
வி.இ.நா. ​செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர் – 626 001
கைபேசி: 9443613294

அடுத்தது விளையும் பயிர் – படிப்பது எப்படி? – பாகம் 9

முந்தையது உருப்படியாய் உயர‌ – படிப்பது எப்படி?- பாகம் 7

4 Replies to “உற்று நோக்கு – படிப்பது எப்படி? – பாகம் 8”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.