7.6.2025 அன்று தமிழ் அமுது என்ற இணையவழி நிகழ்வில் ஏ.கே.செட்டியார் அவர்களின் புத்தகம் பற்றி மதுரகவி சீனிவாசன் ஆற்றிய உரையின் சில பகுதிகள்.
வணக்கம். ஏ.கே.செட்டியார் அவர்களின் பயணக் கட்டுரைகள் தொகுப்பான ‘உலகம் சுற்றிய தமிழன் ‘ என்ற நூலைப் பற்றி இந்த நிகழ்வில் நான் விவரிக்க உள்ளேன்.
நூலைப் பற்றிப் பேசுவதற்கு முன்பாக முதற்கண் ஏ.கே. செட்டியார் அவர்கள் பற்றிய சில தகவல் துளிகள்
ஏ.கே.செட்டியார் – அ.கருப்பன் செட்டியார் அவர்கள் , 1910 ஆம் ஆண்டு பிறந்தார் . 1983 ஆம் ஆண்டு மறைந்தார்.
தமிழில் பதினேழு நூல்களைப் படைத்தவர். குமரி மலர் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்தவர் .
இவர் இதழாசிரியர், எழுத்தாளர் மட்டுமல்ல.
மகாத்மா காந்தியடிகள் மீது மிகுந்த பற்று கொண்ட இவர்தான் தொழில்நுட்பங்கள் எதுவும் அதிகம் இல்லாத காலத்தில் காந்திஜி பற்றிய ஆவணப் படத்தை எடுத்தவர்.
ஏ.கே.சி அவர்கள் உருவாக்கிய காந்திஜி பற்றிய ஆவணப் படம் சென்னையில் 1940 ஆம் ஆண்டு ஆகஸ்டு 23 ஆம் தேதி திரையிடப்பட்டது.
கால வெள்ளத்தில் அழியாத இந்த திரைப்படம் அதிநவீன வடிவத்திற்கு மாற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டு இன்றும் ஒவ்வொரு வாரமும் மதுரை காந்தியடிகள் அருங்காட்சியகத்தில் திரையிடப்பட்டு வருகிறது.
மிகவும் இளம் வயதிலேயே அயல்நாடு சென்றவர். இன்றைய மியான்மரில் அன்றைய பர்மாவில் அந்தக் காலகட்டத்தில் தமிழர்கள் அதிக அளவில் வசித்து வந்தனர். அதில் ஏ.கே.சியும் ஒருவர்.
ரங்கூனிலிருந்து வெளிவந்த ‘தனவணிகன்’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் ஏ.கே.சி . அப்போது அவருக்கு வயது இருபத்திரண்டு .
‘உலகம் சுற்றும் தமிழன்’ என்று போற்றப்பட்ட ஏ.கே.சி அவர்கள், தமிழ்ப் பயணக்கட்டுரை இலக்கியத்தின் முன்னோடி என்று போற்றப்படுபவர்.
இவர் தமது காலத்திற்கு முன்பாக வெளிவந்த பயணக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டார்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக சந்தியா பதிப்பகம் இந்த தொகுப்பு நூலை மீண்டும் வெளியிட்டனர்.
ஏ.கே.சி அவர்கள், பாரதியாரின் பயணக்கட்டுரைகளையும் திரட்டி வெளியிட்டுள்ளார்.
ஏ.கே.செட்டியார், புதுச்சேரியில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களைச் சந்தித்தார்.
அப்போது ஏ.கே.சி அவர்கள், பாரதிதாசன் அவர்களிடம் தாங்கள் இயற்கை அழகைப் பற்றி கவி பாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அவருடைய வேண்டுகோளை ஏற்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் படைத்த காவியம் தான் அழகின் சிரிப்பு. ஏ.கே.சி அவர்கள், அழகின் சிரிப்பு காவியத்தை தமது குமரிமலர் இதழில் தொடராக வெளியிட்டார்.
பின்னர், பதிப்புலக முன்னோடி முல்லை முத்தையா அதனை நூலாக வெளியிட்டார்.
காந்தியடிகள் பற்றி ஆவணப் படம் தயாரித்த ஏ.கே.சி.யால் திரை நுணுக்கங்கள் பற்றி எழுதாமல் வேறு யார் எழுத முடியும்?
இவருடைய நூல்களில் ஒன்று திரையும் வாழ்க்கையும் . இந்த நூல் திரைப்படம் பற்றிய நுணுக்கங்களை சுவையாக விவரிக்கிறது
‘உலகம் சுற்றும் தமிழன்’ என்ற இந்த நூல் முதல் பதிப்பாக 1940 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. சக்தி காரியாலயம் இந்த நூலை வெளியிட்டுள்ளார்கள்.
1030-களில் உலக நாடுகளை எல்லாம் சுற்றி வந்த ஏ.கே.சி அவர்கள், அன்றைய தமிழ் வாசகர்களுக்கு சொல் விருந்தாக பல்வேறு தமிழ்ப் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு உலகம் சுற்றும் தமிழன் என்னும் இந்த நூல் .
இந்த நூலை முதற்பதிப்பாக வெளியிட்ட சக்தி பதிப்பகத்தின் வை.கோவிந்தன் பற்றி சொல்லியே ஆக வேண்டும் .
வை.கோவிந்தன் எழுத்தாளர் இதழாளர் பதிப்பாளர். காலத்தை மீறி சிந்தித்து சாதனை படைத்தவர்.
அமெரிக்காவின் ‘டைம் மேகசைன்’ போன்று தமிழில் பத்திரிகை நடத்த வேண்டும் என்ற அவா உந்தித் தள்ள சக்தி என்கிற இதழை டைம் மேகசைனைப் போலவே நடத்தி வந்தார்.
அணில் என்ற சிறுவர் இதழையும் நடத்தி வந்தவர். தமிழ்வாணன், ரா.கி.ரங்கராஜன் ஆகியோர் வை.கோவிந்தன் அவர்களின் பட்டறையில் உருவானவர்கள் .
இந்த உலகம் சுற்றும் தமிழன் நூலில் 104 பக்கங்களில் உலக நாட்டுப் பயணக் கட்டுரைகள் உள்ளன. ஏ.கே.சி அவர்களின் உரைநடை, சரளமான நடை மற்றும் எளிதான பதங்கள். அந்த வகையில் இருபதாம் நூற்றாண்டு தமிழ் உரைநடைக்கு வளம் சேர்த்தவர்களில் ஏ.கே.சி முக்கியமானவர் எனலாம்.
நூலின் பதிப்புரையில் வை.கோவிந்தன் அவர்கள் கூறியதாவது –
“சக்தி மலர் இரண்டாவதாக வெளிவந்திருக்கும் உலகம் சுற்றும் தமிழன் என்னும் இந்த நூல், காந்தியடிகளின் சரிதத்தை திரைப்படமாக எடுக்கும் சென்னை டாகுமென்ட்டரி பிலிம்ஸின் மானேஜிங் டைரக்டரான ஶ்ரீ ஏ.கே.செட்டியார், மேல்நாட்டுப் பிரயாணம் செய்து வருகையில் அவ்வப்போது பல பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். இப்புத்தகத்தைத் தமிழ் மக்கள் ஆதரித்து இம்மாதிரி பல நூல்கள் வெளியிட ஊக்க வேண்டுகிறோம்
இந்த நூலின் முதல் அத்தியாயம் –
உலகமெங்கும் ஒலிக்கும் பெயர் என்ற தலைப்பைக் கொண்டது. ஏ.கே.சி அவர்கள், ஜப்பான் பயணம் செய்த போது இவரைச் சந்தித்த பொது ஜனங்களில் பலரும் காந்திஜியைப் பற்றியே கேட்டிருக்கிறார்கள்.
ஏ.கே.சி அவர்கள் , ஒரு திரை அரங்கத்திற்குச் சொல்கிறார். அங்கு அமர்வதற்கு இருக்கை இல்லாததால் திரும்ப எண்ணிய போது ஒரு சீனப் பெண்மணி இவரை அழைத்து ‘இங்கே உட்காருங்கள்!’ என்று இடம் கொடுத்து ‘காந்திஜி சௌக்கியமா!’ என்று கேட்டிருக்கிறார்.
கொரியா மாணவர்களின் கூட்டத்தில் ஏ.கேசி . அவர்கள் உரையாற்றுகிறார் அப்போது அவர் காந்தியடிகள் அமெரிக்காவுக்குச் செல்ல நேர்ந்தால் ஜப்பானுக்கும் கொரியாவுக்கும் வரக் கூடும் என்று இவர் கூறினார். உடனே கொரிய இளைஞன் ஒருவன் இவரைக் கட்டிப் பிடித்து அணைத்துக் கொள்கிறான்.
ஏ.கே.சி அவர்கள், பசிபிக் பெருங்கடலின் நடுவே உள்ள ஹவாய்த் தீவின் ‘ஹில்லோ’ நகரத்திற்குச் சென்ற போது ‘ஹில்லோ ட்ரிப்யூன்’ என்ற அந்த ஊர் பத்திரிகையின் முதற் பக்கத்தில் காந்தியடிகளின் நாட்டிலிருந்து ஒரு பத்திரிகைக்காரர் வந்திருக்கிறார் என்று இவரைப் பற்றி கொட்டை எழுத்துக்ளில் செய்தி வெளியிட்டதாக குறிப்பிடுகிறார்.
ஐரோப்பிய நாடுகளில் இவர் செல்லும் போது மக்கள் இவரிடம் காந்திஜி பற்றி விசாரிக்கிறார்கள் . அமெரிக்காவில் பல அமெரிக்கர்கள் காந்தி குல்லா அணிவதாகவும் காந்திஜியின் பிறந்த நாளைக் கொண்டாடுவதாகவும் குறிப்பிடுகிறார்.
இப்படியாக உலகமே காந்தியடிகளின் பெயரை உச்சரித்துள்ளதை அனுபவ ரீதியாக ஏ.கே.செட்டியார் கண்டு பதிவு செய்துள்ளார்.
2வது அத்தியாயத்தில் புகழ் பெற்ற ஜப்பானிய கவிஞர் நோகுச்சியைச் சந்தித்த அனுபவத்தைப் பகிரந்து கொள்கிறார்.
3 வது அத்தியாயம் – ஹவாய்த் தீவுகள் பற்றிய பயண அனுபவம் . பசிபிக் பகுதியில் உள்ள இந்த அழகிய தீவுகளை 1788 ஆம் ஆண்டில் காப்டன் குக் என்பவர் கண்டுபிடித்தாராம். அது வரை வெளி உலகத் தொடர்பு இல்லாமல் இந்த தீவுகள் இருந்துள்ளன. இங்கு சுற்றுலா யாத்ரீகர்கள் அதிகம் வருவதாக குறிப்பிடுகிறார்.
4 வது அத்தியாயம் – அமெரிக்காவில் என்ற தலைப்பில் அமெரிக்க அனுபவத்தை விவரிக்கிறது.
நிற வேற்றுமையினால், துவேஷத்தால், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் அவஸ்தைப்பட்டதாக கூறுகிறார். அமெரிக்க இளைஞர் ஒருவரின் உதவியால் அறையைப் பெற்றதாக கூறுகிறார்.
லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நியுயார்க்கிற்கு நான்கு நாள் ரயில் பயணத்தில் சென்று வந்த அனுபவங்களை எடுத்துரைக்கிறார்.
நியுயார்க்கில் ராக்பெல்லர் என்கிற உலகறிந்த வள்ளல் கட்டி வைத்திருந்த இன்டர்நேஷனல் ஹவுஸ் என்ற மாணவர் விடுதியில் உள்ள இந்திய சமூகத்தினருடன் தாம் ஐக்கியமானதாக குறிப்பிடுகிறார் ஏ.கே.சி.
நயாகரா, நேஷனல் பார்க் உள்ளிட்ட பார்க்க வேண்டிய இடங்களைக் கண்டு களித்தது பற்றி கூறுகிறார்.
ஐந்தாவது அத்தியாயத்தில் அமெரிக்காவின் பூர்வ குடிகளான செவ்விந்தியர்கள் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறார்.
ஆறாவது கட்டுரையில் அயர்லாந்து பயண அனுபவம். சுதந்திர அயர்லாந்து நாட்டைக் காண வேண்டும் என்கிற அவா நிறைவேறியதாக கூறுகிறார்.
இங்கு சுங்க அதிகாரிகள் கஷ்டப்படுத்தவில்லை விரைவாக சோதனையை முடித்து அனுப்பி வைப்பதாக கூறுகிறார். அயர்லாந்தில் ஐரிஷ் சாமான்களையே வாங்க வேண்டும் என்கிற குரல் ஓங்கி ஒலிப்பதாகத் தெரிவிக்கிறார்.
ஏழாவது அத்தியாயத்தில் பின்லாந்து நாட்டுப் பயணத்தை விவரிக்கிறது.
எட்டாவது அத்தியாயத்தில் ஜெர்மனியில் தமிழ் நன்கு கற்றறிந்த, தமிழில் பேசக் கூடிய பைத்தான் சாஸ்திரி என்பவரைச் சந்தித்து உரையாடியதைப் பற்றிப் பேசுகிறார்.
ஒன்பதாவது கட்டுரையில் செக்கோஸ்லோவக்கியாவின் பிராஹா என்கிற நகரத்தில் செலவழித்த பொழுதுகளைப் பற்றி விவரிக்கிறார்.
பத்தாவது கட்டுரையின் தலைப்பு – பொருட்காட்சிக்குத் தக்க மாளிகை என்ற தலைப்பிலான கட்டுரை – ஜெனிவாவில் சர்வதேச சங்கத்திற்கு முன்னால் நின்றிருந்தேன் – முறையிடுவதற்காக அல்ல பார்ப்பதற்காக என்று சொல்வதில் ஏ.கேசி. அவர்களின் சொல் நயம் வெளிப்படுகிறது .
11 வது கட்டுரை – வெனிஸ் நகரப் பயண அனுபவம் . கப்பல் மூலமாக வெனிஸ் துறைமுகத்திற்கு மகிழ்ச்சியுடன் சென்றடைகிறார். வெனிஸ் நகரத்தில் வீதிகளே கிடையாது . கால்வாய்கள் தான். படகில் தான் எதிர் வீட்டுக்கும் செல்ல வேண்டும். ராபர்ட் ப்ரௌனிங் என்கிற ஆங்கிலக் கவிஞர் இங்குதான் மறைந்தார் என்ற தகவலைத் தெரிவிக்கிறார்.
12 வது கட்டுரை – வரலாற்றுப் பெருமை வாய்ந்த ரோமாரபுரிக்குச் சென்று வந்த அனுபவத்தைப் பற்றிப் பேசுகிறார்.
13 வது கட்டுரை – தென் ஆப்பிரிக்க பயண அனுபவம். காந்திஜி, போராட்டக் குணங்களுடன் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள களம் அமைத்துக் கொடுத்த இடம் அல்லவா ?
தென் ஆப்பிரிக்கா செல்வதில் நிற பேதம் காரணமாக ஏ.கே.சி . அவர்களுக்குப் பல தடைகள் , தடங்கல்கள் ஏற்பட்டன. அவற்றை எல்லாம் கடந்து கப்பலில் பயணம் செய்து கேப் டவுன் நகரத்தைச் சென்றடைகிறார்.
ரயிலில் இந்தியர்கள், தனி கம்பார்ட்மென்ட்டில் தான் செல்ல வேண்டும் என்ற விதி இருந்ததை தெரிவிக்கிறார். டர்பனில் 80,000 இந்தியர்கள் . அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்.
டர்பன் நகரில் உள்ள பெரிய இந்திய மார்க்கெட்டில் தமிழ்ச் சகோதரிகள் பேசும் தமிழ் வேடிக்கையாக இருக்கும் . இவர்கள் பேசும் ஆங்கிலம் , தமிழை விட நன்றாக இருக்கும் என்று எழுதுகிறார்.
காந்தியடிகள் முன் எடுத்த உரிமைப் போராட்டங்களில் தியாகம் செய்து துணை நின்றவர்கள் தமிழர்கள் தாம். தமிழர்களின் வாழ்க்கை நிலை உயரவில்லை. வயிறு நிறைய உணவு கிடைக்கிறது தவிர வேறு ஒன்றும் இல்லை. உரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை .
இங்கு உள்ள தமிழர்களில் பலர் கடன் வாங்கி விசேஷங்களுக்கு அதிகம் செலவழிக்கின்றனர். கடன் வாங்கி கல்யாணம் செய்து கெட்ட குடும்பங்கள் எத்தனையோ.
இந்தியர்களுக்கு என்று தனி ஹோட்டல். தனி தபால் ஆபீஸ் என்றெல்லாம் இருந்தது. தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்புகையில் இடையூறு, விமானத்தில் டர்பன் செல்கிறார்
ஏ.கே.சி. கப்பல் கம்பெனியில் தகராறு . ஜப்பான் கம்பெனி உட்பட எல்லா கம்பெனியும் இவர் இந்தியர் என்பதால் முதல் வகுப்பு டிக்கட் கொடுக்க மறுக்கின்றனர். கடைசியாக ஏஜன்ட் ஜெனரலின் உதவியால் முதல் வகுப்பு டிக்கட் பெற்று பயணம் செய்ததஈக கூறுகிறார்.
என்றோ எழுதியதுதான் இருப்பினும், இந்தக் கட்டுரையை ஏ.கே.சி அவர்கள் முடிக்கும் விதம் நம் நெஞ்சை உருக்கும் .
“அந்த துரதிஷ்டமான தென் ஆப்பிரிக்காவை நினைக்கும் போதெல்லாம் நமது பாரத சேய்கள் அங்கு சென்று படும் பாடுகள் தான் நினைவுக்கு வருகின்றன” என்பதே அது.
மதுரகவி சீனிவாசன்
சென்னை
கைபேசி: 9841376382
மின்னஞ்சல்: mkavi62@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!