உலகின் டாப் 10 நீளமான ஆறுகள் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம். ஆறுகள் நம்முடைய கலாச்சாரம், பாரம்பரியம், நாகரீகம் ஆகியவற்றிற்கு ஆதாரமாக அமைந்தவை.
மனிதனின் வளர்ச்சியானது ஆறுகளாலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆக ஆறுகளே நம் வாழ்வின் ஆதாரம்.
ஆறுகளின் நீளத்தினை அளவீடு செய்யும்போது அது உற்பத்தியாகும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் இடம் வரை கணக்கிடப்படுகிறது.
ஆறுகள் உற்பத்தியாகும் இடத்திலிருந்து கடலினை அடையும்வரை கடந்து செல்லும் இடங்களான பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள், மலைகள், சமவெளிகள் ஆகியவையும் கணக்கீட்டில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இனி உலகின் நீளமான ஆறுகள் பற்றிப் பார்ப்போம்.
1.நைல் நதி, வடகிழக்கு ஆப்பிரிக்கா
உலகின் முதல் நீளமான ஆறு நைல் ஆகும். இதனுடைய மொத்த நீளம் 6,650கிமீ ஆகும். இது ஆப்பிரிக்கா கண்டத்தில் வடகிழக்குப் பகுதியில் வடக்கு நோக்கிப் பாய்கிறது.
இது ஆப்பிரிக்காவில் தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரிட்ரியா, சூடான் மற்றும் எகிப்து என மொத்தம் பத்து நாடுகளை வளப்படுத்துகிறது.
எகிப்து மற்றும் சூடான் நாடுகள் இந்நதியினால் அதிகப்பயனை அடைகின்றன. வெள்ளை நைல், நீல நைல், அத்பரா ஆகியவை நைலின் முக்கிய துணை நதிகளாகும்.
வெள்ளை நைல் மத்திய ஆப்பிரிக்காவின் ஏரிகளிலும், நீல நைல் தனா ஏரியிலும் உற்பத்தியாகி சூடானில் இணைந்து இறுதியில் மத்தியதரைக் கடலில் கலக்கிறது. இவ்வாற்றின் கரையில் உருவான பழைமையான நாகரீகம் எகிப்திய நாகரீகம் ஆகும்.
2.அமேசான் ஆறு, தென்அமெரிக்கா
உலகின் இரண்டாவது நீளமான நதி அமேசான் ஆகும். இதனுடைய மொத்த நீளம் 6400கிமீ ஆகும். இது தென்அமெரிக்காவின் பெருநாட்டில் ஆன்டீஸ் மலைத்தொடரில் பனி மூடிய நவாடோ மிசிமி சிகரத்தின் பனி ஏரியில் உற்பத்தியாகி அட்லாண்டிக் கடலில் கலக்கிறது.
அமேசான் ஆறு பெரு, ஈகுவடார், பிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகளில் பாய்கிறது. இது உலகின் மிகப்பெரிய ஆறு என்ற பெருமையினை உடையது.
அமேசான் ஆற்றினால் வெளியேற்றப்படும் நீரின் அளவானது இதற்கு அடுத்து பெரிய எட்டு ஆறுகள் வெளியேற்றும் நீரின் அளவினைவிட அதிகமாகும்.
உலகின் மிகப்பெரிய மழைக்காடுகள் அமேசான் ஆற்றில் அமைந்துள்ளது. அமேசான் ஆறு மற்றும் அதில் உள்ள மழைக்காடுகள் உலகில் உள்ள உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கினை தன்னுள் கொண்டுள்ளது.
இவ்வாற்றில் உலகில் மிகப்பெரிய டால்பின், அனகோண்டா பாம்புகள், அமேசான் முதலைகள், பிரான்கா மீன்கள் ஆகியவை காணப்படுகின்றன.
3.யாங்சி ஆறு, சீனா
உலகின் மூன்றாவது நீளமான நதி யாங்சி ஆறு ஆகும். இதனுடைய நீளம் 6300கிமீ ஆகும். இது ஆசியாவின் மிகநீளமான நதி என்ற பெருமையைப் பெற்றது.
ஒரே நாட்டிற்குள் பாயும் ஆறுகளில் இது முதலிடத்தைப் பெறுகிறது. அதிக நீரினை வெளியேற்றும் ஆறுகளின் வரிசையில் யாங்சி ஆறு ஆறாவது இடத்தினைப் பெறுகிறது.
சீனாவின் ஐந்தில் ஒருபகுதி யாங்சி ஆற்றால் வளப்படுத்தப்படுகிறது. இவ்வாற்றின் கரையில் சீனமக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வாழ்கின்றனர்.
இது சீனாவின் கிங்ஹாய்-திபெத் பீடபூமியில் உள்ள பனிப்பாறைகளில் உருவாகி தென்மேற்கு, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு சீனப்பகுதிகளின் வழியாக கிழக்கு நோக்கிப் பாய்ந்து ஷாங்காய் நகரின் வழியே கிழக்கு சீனக்கடலில் கலக்கிறது.
சீனாவின் வரலாறு, பொருளாதாரம், கலாச்சாரம் ஆகியவற்றில் யாங்சி ஆறு முக்கியப்பங்கு வகிக்கிறது. சீனாவின் 20 சதவீத உள்நாட்டு உற்பத்தியானது இவ்வாற்றால் வளப்படுத்தப்படும் பள்ளத்தாக்கிலிருந்து கிடைக்கிறது.
சீன முதலைகளின் வசிப்பிடமாக உள்ள யாங்சி ஆறானது சீனாவை வடக்கு தெற்காகப் பிரிக்கிறது.
4.மிசிசிப்பி ஆறு, வடஅமெரிக்கா
இது உலகின் நான்காவது மிகநீளமான ஆறாகும். இதனுடைய நீளம் 6275கிமீ ஆகும். இது வடஅமெரிக்காவின் மிகநீளமான நதியாகும். மிசிசிப்பி ஆற்றின் நீரானது 98 சதவீதம் ஐக்கிய அமெரிக்காவையும், 2 சதவீதம் கனடாவையும் வளப்படுத்துகிறது.
இந்நதியானது மினசோட்டாவிலுள்ள இத்தாஸ்கா ஏரியில் இருந்து உற்பத்தியாகி ஐக்கியஅமெரிக்காவின் 30மாநிலங்கள், கனடாவின் இருமாநிலங்கள், மெக்ஸிகோ வளைகுடாவின் வழியாக அட்லாண்டிக் கடலில் கலக்கிறது.
12,000 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் தங்களின் உணவு மற்றும் போக்குவரத்திற்காக இவ்வாற்றினை சார்ந்துள்ளனர். ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில் மிசிசிப்பி ஆறு முக்கிய பங்கு வகிக்கிறது. பல தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் ஆகியவை இவ்வாற்றில் அமைந்துள்ளன.
5.யெனீசீ ஆறு, ஆசியா
இது உலகின் நீளமான ஆறுகளில் ஐந்தாவது இடத்தைப் பெறுகிறது. இதனுடைய நீளம் 5539கிமீ ஆகும். ஆர்டிக் பெருங்கடலில் கலக்கும் மிகப்பெரிய நதி அமைப்பு என்ற பெருமை யெனீசீ-அங்காரா-செலங்காஇடியர் ஆகியவற்றைச் சாரும்.
இந்நதியானது முங்காரிகைன் கோலில் உற்பத்தியாகி மங்கோலியா, ரஷ்யா வழியாக காரா கடலில் கலக்கிறது. இவ்வாற்றின் 2.9 சதவீதம் மட்டுமே மங்கோலியாவில் உள்ளது.
இவ்வாறானது 55 வகையான மீன்களுக்கு வாழிடமாக உள்ளது. குளிர்காலத்தில் இவ்வாற்றின் கரையோரங்களில் ரெயின்டீர் மான்கள் பெரிய கூட்டமாகக் காணப்படுகின்றன. எனவே இந்நதியின் சுற்றுசூழலானது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
6.மஞ்சள் ஆறு, சீனா
மஞ்சள் ஆறு உலகின் நீளமான ஆறாவது ஆறாகும். இதனடைய நீளம் 5464கிமீ ஆகும். இது சீனா மற்றும் ஆசியாவில் இரண்டாவது நீளமான ஆறு ஆகும்.
இது மேற்கு சீனாவின் சிங்ஹாங் மகாணத்திலுள்ள பாயன்ஹர் மலைத்தொடரில் தோன்றி 9மகாணங்கள் வழியாக சென்று பொகாய் கடலில் கலக்கிறது.
இவ்வாறானது காற்றடுக்கு வண்டல் மண்ணினை தன்னுள் கொண்டுவருவதால் மஞ்சள் நிறத்தில் காட்சி அளிக்கிறது. எனவே மஞ்சள் ஆறு என்று அழைக்கப்படுகிறது.
இவ்வாற்றில் காணப்படும் வண்டல் மண் ஆற்றில் நீர்வரத்து குறையும்போது ஆற்றின் பாதையில் படிந்து உயர்ந்து அணைபோன்று உருவாகிறது.
மீண்டும் இவ்வாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது ஆறானது வழக்கமான பாதையில் தனது செல்லாமல் பள்ளமான பகுதியில் (வேறு இடத்தில்) பயணத்தை மாற்றி வெள்ளப்பெருக்கினை உண்டாக்கி பெருத்த சேதத்தினையும் உண்டாக்குகிறது. எனவே இது சீனாவின் துயரம் என்று அழைக்கப்படுகிறது.
மஞ்சள் ஆறு சீனமொழியில் ஹோவாங் ஹோ என்று அழைக்கப்படுகிறது. இவ்வாற்றுப்பகுதி செழிப்பானதாக இருந்ததால் சீனநாகரீகம் முதலில் இங்குதான் தோன்றியது. எனவே மஞ்சள் ஆறு சீனநாகரீகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படுகிறது.
7.ஓப் ஆறு, ஆசியா
இது உலகின் ஏழாவது மிகநீளமான நதியாகும். இதனுடைய நீளம் 5410கிமீ ஆகும். இவ்வாறு ரஷ்யா, கசகஸ்தான், சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளை வளப்படுத்துகிறது.
இது மேற்கு நோக்கிப் பாய்ந்து ஆர்டிக் கடலில் கலக்கும் மூன்று முக்கிய நதிகளில் இதுவும் ஒன்று. (ஏனையவை யெனீசீ, மற்றும் லீனா ஆறு ஆகும்.)
இந்த ஆறு கடலில் கலக்கும் இடத்தில் உலகின் மிகப்பெரிய வளைகுடாவான ஓப் வளைகுடாவை உண்டாக்குகிறது. வேளாண்மை, மின்சக்தி, குடிநீர், மீன்பிடித்தல் ஆகியவற்றிற்கு இந்த ஆறு பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
8.பரனா ஆறு, தென்அமெரிக்கா
இது உலகின் நீளமான நதிகளில் எட்டாவது இடத்தைப் பெறுகிறது. இதனுடைய நீளம் 4880கிமீ ஆகும். இது தென்அமெரிக்காவின் தெற்கு மத்தியில் பாய்ந்து பிரேசில், அர்ஜென்டினா, பராகுவே, பொலிவியா, உருவே நாடுகளை வளப்படுத்துகிறது.
இது தென்அமெரிக்காவின் இரண்டாவது நீளமான நதியாகும். ஆழம் மிகுந்த இந்நதியானது கடல்வழியாக உள்நாட்டு நகரங்களை இணைக்க உதவுகிறது.
தெற்கு பிரேசிலில் பரனைபா ஆறும், கிராண்ட் ஆறும் சந்திக்கும் இடத்தில் இவ்வாறு உற்பத்தியாகி அட்லாண்டிக் கடலில் கலக்கிறது.
இவ்வாற்றில் நீர்மின்சாரம் தயாரிக்க பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. இவ்வாற்றின் டெல்டா பகுதியானது பறவைகளை கண்டுகளிக்க சிறந்த இடமாகும். பரனா என்பதற்கு பெரிய கடல் என்பது பொருளாகும்.
9.காங்கோ ஆறு, ஆப்பிரிக்கா
இது உலகின் ஒன்பதாவது நீளமான ஆறாகும். இதனுடைய நீளம் 4700கிமீ ஆகும். இது ஆப்பிரிக்காவின் மேற்கு நடுப்பகுதியில் பாய்ந்து இறுதியில் அட்லாண்டிக் கடலில் கலக்கிறது.
ஆப்பிரிக்காவில் நைலுக்கு அடுத்த மிகப்பெரிய ஆறு காங்கோ ஆகும். உலகில் அமேசானுக்கு அடுத்தபடியாக அதிக கனஅளவு நீரினைக் கொண்டு செல்லும் ஆறு மற்றும் உலகின் ஆழமான ஆறு (220 மீ) என்ற பெருமைகளையும் இது உடையது.
இந்நதியானது காப்பி, சர்க்கரை, பருத்தி உள்ளிட்ட பொருள்களின் வர்த்தகத்திற்கும், நீர்மின்சாரம் தயாரிப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
`10.அமுர் ஆறு, ஆசியா
இது உலகின் பத்தாவது நீளமான ஆறு ஆகும். இதனடைய நீளம் 4444கிமீ ஆகும். இவ்வாறு வடகிழக்கு சீனாவின் மேற்குப் பிராந்திய மலைகளில் சுமார் 303 உயரத்தில் சில்கா மற்றும் அர்குன் ஆகிய இருபெரும் ஆறுகளின் இணைப்பினால் உருவாகி ஒக்வொட்ச் கடலில் கலக்கிறது.
இந்த ஆறு சீனாவிற்கும், இரஷ்யாவிற்கும் இடையே உள்ள எல்லைப்பகுதியில் கிழக்கு நோக்கி ஓடுகிறது. சீனாவில் இவ்வாறு கருப்பு டிராகன் ஆறு என்று அழைக்கப்படுகிறது.
அமுர் ஆற்றில் கலுகா, ஆசிய மீன், ஆர்டிக் சைபீரிய மீன், டெய்மன் மீன், அமுர் கேட்மீன், மஞ்சள்சீக் மீன் போன்ற மீன்வகைகளும், அமுர் சிறுத்தைகளும் காணப்படுகின்றன.