உலகின் டாப் 10 மழைக்காடு பற்றிப் பார்ப்போம். மழைக்காடுகள் அதிகளவு ஆக்ஸிஜனை வழங்குவதால் உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படுகின்றன.
இவை சுற்றுசூழலுக்கு அவசியமான முக்கியமான உயிர்தொகுதியாக உள்ளன. உலகின் 50 சதவீத உயிரினங்கள் இக்காடுகளில் காணப்படுகின்றன.
வானிலை மற்றும் சுற்றுசூழலின் வெப்பநிலை கட்டுப்பாட்டாளர்களாக மழைக்காடுகள் விளங்குகின்றன.
தற்போது காடுகள் அழிப்பு உள்ளிட்ட மனித நடவடிக்கைகளால் மழைக்காடு மட்டுமின்றி அதிலுள்ள விலங்குகளும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
உலகின் டாப் 10 மழைக்காடு
1. அமேசான் மழைக்காடு
அமேசான் மழைக்காடு
அமேசான் மழைக்காடு 55,00,000 சதுர கிலோமீட்டர் பரப்பினைக் கொண்டு டாப் 10 மழைக்காடு பட்டியலில் முதலிடத்தைப் பெறுகிறது. இது வெப்ப மண்டல மழைக்காடு வகையினைச் சார்ந்தது.
இது பிரேசில், பெரு, கொலம்பியா, வெனிசுலா, ஈகுவடார், பொலிவியா, கயானா, சுரிநேம், பிரெஞ்சு கயானா உள்ளிட்ட தென்அமெரிக்க நாடுகளில், அமேசான் நதியின் வடிநிலப் பகுதிகளில் காணப்படுகிறது. இக்காட்டின் 60சதவீதம் பிரேசிலில் காணப்படுகிறது.
இக்காட்டில் 16,000 இனங்களாக பகுக்கப்பட்ட சுமார் 390 பில்லியன் மரங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள உயிரினங்களில் 2.5 மில்லியன் பூச்சிகள், 2000 வகையான பாலூட்டிகள் மற்றும் பறவைகள், பல்லாயிரக்கணக்கான தாவரங்கள் அடங்கும்.
இன்றுவரை இப்பிராந்தியத்தில் பொருளாதார மற்றும் சமூக ஆர்வமுள்ள 4,38,000 வகையான தாவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் பல கண்டுபிடிக்கப்பட உள்ளன.
சிறுத்தைப் புலி, மலையரிமா, அனகோன்டா, எலட்ரிக் ஈல், பிரானா, விஷத்தவளைகள், ஏராளமான ஒட்டுண்ணிகள், குருதியுண்ணும் வெளவால் உள்ளிட்ட உயிரினங்கள் காணப்படுகின்றன.
2. காங்கோ மழைக்காடு
17,80,000 சதுர கிலோமீட்டர்பரப்பினைக் கொண்ட காங்கோ மழைக்காடு இப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது வெப்ப மண்டல மழைக்காட்டினைச் சார்ந்தது.
காமரூன், காபோன், ரிபப்ளிக் ஆப் காங்கோ, டெமாக்ரேடிவ் ரிபப்ளிக் ஆப் காங்கோ, மத்திய ஆப்ரிக்கன் ரிபப்ளிக், எக்குவடோரியல் கினியா ஆகிய ஆறு ஆப்பிரிக்க நாடுகளில் பரவிக் காணப்படுகிறது.
ஆறுகள், காடுகள், சவன்னா புல்வெளி, சதுப்பு நிலம் மற்றும் வெள்ளம் சூழ்ந்த வனப்பகுதி ஆகியவை இதில் அடக்கம்.
இக்காடுகள் அதன் உயர்பல்லுயிரியலுக்காக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் 600-க்கு மேற்பட்ட மர இனங்கள் மற்றும் 10,000 விலங்கு இனங்கள் காணப்படுகின்றன.
யானை, கொரில்லா, சிம்பன்சி, ஓகாப்பி மற்றும் சிங்கம் ஆகியவை முக்கியமானவை ஆகும்.
3. நியூகினியா மழைக்காடு
நியூகினியா மழைக்காடு
நியூகினியா மழைக்காடு 2,88,000 சதுர கிலோமீட்டர் பரப்பினைக் கொண்டு டாப் 10 மழைக்காடு பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஆசிய-பசிபிக் பகுதியில் அமைந்துள்ள இது வெப்ப மண்டல மழைக் காட்டினைச் சார்ந்தது. இந்தோனேசியா, பாப்பு நியூகினியா போன்ற நாடுகளில் இக்காடுகள் பரவிக் காணப்படுகின்றன.
இதில் அடர்ந்த மழைக்காடு முதல், கடற்கரை மாங்குரோவ் காடு வரை அடங்கியுள்ளது. இக்காட்டில் உலகின் தனித்துவ தன்மை கொண்ட விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் காணப்படுகின்றன.
உலகில் வேறு எங்கும் காணப்படாத ஆர்க்கிட் வகைத் தாவரங்கள் இங்கு உள்ளன. மாமிச எலிகள், மாபெரும் புறாக்கள், மர கங்காருகள் மற்றும் பெரிய எலிகள் இங்கு காணப்படுகின்றன.
4. வால்டிவியன் மிதவெப்பமண்டல மழைக்காடு
வால்டிவியன் மிதவெப்பமண்டல மழைக்காடு
2,48,100 சதுர கிலோமீட்டர் பரப்பினைக் கொண்டு வால்டிவியன் மித வெப்ப மண்டல மழைக்காடு இப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
இது தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளில் உள்ள சிலி, அர்ஜென்டினா பகுதிகளில் காணப்படுகிறது.
ஆஞ்சியோஸ்பெர்ம் மரங்கள், மூங்கில், பன்னம், பைன் போன்ற கூம்பு மரங்கள், குறுகிய கடலோர கீற்றுகள், பனிக்கட்டிகள், பனிப்பாறைகள் மற்றும் ஒரு மத்திய பள்ளத்தாக்கு ஆகியவை இக்காட்டை சிறப்பிக்கின்றன.
இங்கு கனமழை காரணமாக வெப்பநிலை பொதுவாக ஈரப்பதமாக இருக்கும். பொதுவாக இவ்விடத்தில் மூடுபனி காணப்படுகிறது.
அரியவகை விலங்குகள் மற்றும் 150மீ உயரமுள்ள தாவரங்களுக்கு இவ்விடம் பிரபலமானது. ஆலிஸ் மற்றும் ஒலிவியா போன்றவை இக்காணப்படும் குறிப்பிடப்பட்ட பழமையான மரவகைகளாகும்.
புடு மற்றும் கோட்கோட் ஆகிய அமெரிக்காவின் மிகச்சிறிய மான் மற்றும் பூனை இக்காட்டில் காணப்படுகிறது.
5. கிழக்கு ஆஸ்திரேலிய மித வெப்ப மண்டல மழைக்காடுகள்
2,22,100 சதுர கிலோமீட்டர் பரப்பினைக் கொண்டு இது டாப் 10 மழைக்காடு பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது மித வெப்ப மண்டல மழைக்காடாகும்.
இது ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ்ஸின் கிழக்கு கடற்கரை பகுதியிலிருந்து, தென்கிழக்கு குயின்ஸ்லாந்து வரை நீண்டுள்ளது.
இப்பகுதியில் சுற்றுசூழல் குறைந்தளவு மாறுபட்ட வானிலை, பல்வேறு வகையான இயற்கை சூழல்கள் மற்றும் வளமான தாவரங்களை உள்ளடக்கியது.
யுனஸ்கோ நிறுவனத்தால் உலகப் பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட, நீலமலைகள் தேசியப்பூங்கா இவ்விடத்தில் அடங்கியுள்ளது.
இப்பகுதியில் மணற்கல் பாறைகள், ஆழமான பள்ளத்தாக்குகள், யூகலிப்டஸ் காடுகள் மற்றும் அரிதான தாவர மற்றும் விலங்கு இனங்கள் ஏராளமாக உள்ளன.
கோவாலா கரடிகள், வெல்வெட் புழுக்கள், கூக்கபரா, காங்காங் காகடூ, கிரிம்சென் ரோசெல்லா, சிவப்புதலை கழுகு ஆகியவை இங்கு காணப்படுகின்றன.
6. போர்னியோ மழைக்காடு
2,20,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவினைக் கொண்ட போர்னியா மழைக்காடு இப்பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.
வெப்ப மண்டல மழைக் காட்டினைச் சார்ந்த இது மலே தீவுகள் மற்றும் இந்தோனேசியாவிற்கு இடையில் அமைந்துள்ளது.
140 மில்லியன் ஆண்டுகள் பழமையானதான இது, உலகின் மிகவும் பழமையானதாககக் கருதப்படுகிறது. இது ஆசியாவின் மிகப்பெரிய மழைக்காடாகும்.
இது தாழ்நில மற்றும் 1000மீ-க்கு மேல் அமைந்துள்ள மலை மழைக்காடுகளின் கலவையாகும். இங்கு 100 வகையான பாலூட்டிகள் உட்பட சுமார் 4500 வகையான உயிரினங்கள் காணப்படுகின்றன.
இங்கு காணப்படும் உராங்குட்டான்கள், யானைகள் அழிவின் விளிம்பை நோக்கி உள்ளன.
7. பசிபிக் மித வெப்ப மண்டல மழைக்காடு
பசிபிக் மித வெப்ப மண்டல மழைக்காடு
60,346 சதுர கிலோமீட்டர் பரப்பினைக் கொண்டுள்ள இது டாப் 10 மழைக்காடுகள் பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.
மித வெப்ப மண்டல மழைக்காடு வகையைச் சார்ந்த இது கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்கா பகுதிகளை உள்ளடக்கியது.
அலகாஸ்காவில் உள்ள இளவரசர் வில்லியம் சவுண்டின் விளிம்பிலிருந்து, கனடாவின் கடரோல பிரிட்டிஷ் கொலம்பியாவிலும், வடமேற்கு அமெரிக்க மாநிலங்களான ஓரிகான் மற்றும் வாஷிங்டன் வழியாக வடக்கு கலிபோர்னியா வரையில் உள்ளது.
சுமார் 4000 கிமீ நீளத்தில் குறுகி கடலோரமாக இது பரவியுள்ளது. இது உலகின் கடலோர மிதமான மழைகாடுகளில் முதலிடம் பெறுகிறது.
இது புவியின் மிகஉயரமான மிகப்பெரிய நீண்டகாலம் வாழும் செம்மரங்களைக் கொண்டுள்ளது. கருப்பு கரடிகள், கிரிஸ்லி கரடிகள், புள்ளி ஆந்தை, சிட்கா மான்கள் மற்றும வழுக்கை தலை கழுகு ஆகியவை இங்கு காணப்படுகின்றன.
8. சுமத்திரன் மழைக்காடு
25,000 சதுர கிலோமீட்டர் பரப்பினைக் கொண்டுள்ள இப்பகுதி டாப் 10 மழைக்காடுகள் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது வெப்பமண்டல மழைக்காடு வகையினைச் சார்ந்தது.
இது குனங் லியூசர் தேசிய பூங்கா, கெரின்சி செப்லாட் தேசிய பூங்கா, புக்கிட் பாரிசன் செலட்டன் தேசிய பூங்கா என்னும் மூன்று இந்தோனேசிய பூங்காக்களைக் கொண்டுள்ளது.
மூன்று தேசிய பூங்காக்களும் மிகவும் மாறுபட்ட வாழிடங்களை கொண்டு சிறந்த பல்லுயிர் தன்மையும் பெற்றுள்ளன.
இந்த குறிப்பிட்ட பகுதி வேறுபட்ட பல்லுயிர்த் தன்மையைக் கொண்ட தாழ்நிலம் மற்றும் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள காடுகளை உள்ளடக்கியதாக இருந்ததால், சுமத்ராவின் வெப்ப மண்டல மழைக்காடு பராம்பரியக்களமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
முன்பு மிகப்பரந்த அளவில் இருந்த வெப்ப மண்டல மழைக்காடுகள், 50 ஆண்டுகள் கால இடைவெளியில், மிகச் சுருங்கி மிகக் குறுகிய பகுதியாக ஆகிவிட்டது.
சுமத்ரன் காண்டாமிருகம், உராங்குட்டான், ஆசியதபீர் ஆகிய விலங்குகளும், வெள்ளை இறக்கைகள் கொண்ட மரவாத்து, சுமத்ரன் தரைகுயில் போன்ற பறவைகளும் முக்கியமானவை.
இராஃப்லேசியா அர்னால்டி (உலகின் மிகப்பெரிய மலர்) மற்றும் டைட்டன் ஆரம் (உலகின் உயரமான மலர்) உள்ளிட்ட தாவரங்கள் இங்கு குறிப்பிடத்தக்கவை ஆகும்.
9. போசாவாஸ் பாதுகாக்கப்பட்ட மழைக்காடு
20,000 சதுர கிலோமீட்டர் பரப்பினைக் கொண்ட போசாவாஸ் பாதுகாக்கப்பட்ட மழைக்காடு இப்பட்டிலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.
வெப்ப மண்டல மழைகாடு வகையினைச் சார்ந்த இது மத்திய அமெரிக்காவின் நிகரகுவா நாட்டில் உள்ளது. இந்நாட்டின் 15சதவீதப் பரப்பினை ஆக்கிரமித்துள்ள இக்காடு, மேற்கு அரைக்கோளத்தில் அமேசானுக்கு அடுத்த இரண்டாவது பெரிய மழைக்காடாகும்.
இவ்விடம் 1997 முதல் யுனொஸ்கோ உயிர்கோள இருப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்காட்டில் ஆயிரக்கணக்கான மரங்களும், இருவாழ்விகளும், 2,00,000 பூச்சியினங்களும் காணப்படுகின்றன.
குவெட்செல், குவாக்காமயாக்கள், ஹார்பி கழுகு, மலையரிமா, சிறுத்தைப் புலி, தும்பிப்பன்றி போன்றவைகளும் இங்குள்ளன.
10. வெஸ்ட்லேண்ட் மித வெப்ப மண்டல மழைக்காடு
11,880 சதுர கிலோமீட்டர் பரப்பினைக் கொண்ட இம்மழைக்காடு டாப் 10 மழைக்காடு பட்டியலில் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இது நியூசிலாந்தின் தெற்கு தீவில், மத்திய மேற்கு கடற்கரையினை ஒட்டி அமைந்துள்ளது. இது உள்நாட்டில் செல்லமாக ஈரமான கோட் என்றழைக்கப்படுகிறது.
இக்காடானது தெற்கு ஆல்ப்ஸ் மற்றும் டாஸ்மன் கடலுக்கு இடையில் அமைந்துள்ளது. ஃபிரான்ஸ் ஜோசப் மற்றும் ஃபாக்ஸ் பனிப்பாறைகள் இதில் அடங்கும்.
பனிப்பாறைகள் மற்றும் மழைக்காடுகள் சந்திக்கும் ஒருசில இடங்களில் இதுவும் ஒன்று.
கீ, குருவியினங்கள், சதுப்புக்கோழி, ஸ்பர்விங் லாவிங், கிவி மற்றும் நிலசிலந்தி ஆகியவை இங்குள்ளவைகளில் குறிப்பிடத்தக்கவை.
உலகின் டாப் 10 மழைக்காடு பற்றித் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா?
காடுகளின் அவசியம் பற்றி அறிந்து, காடுகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை, நாம் ஒவ்வொருவரும் முன்னெடுக்க வேண்டும்.