உலகின் டாப்10 பெரிய பாலைவனங்கள் பற்றிப் பார்ப்போம். பாலைவனங்கள் ஐரோப்பாவைத் தவிர ஏனைய இடங்களில் காணப்படுகின்றன.
பொதுவாக குறைவான மழைப்பொழிவினைக் கொண்டுள்ள இடங்கள் பாலைவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
பாலைவனங்கள் வெப்பமானவையாகவோ, குளிரானவையாகவோ இருக்கலாம். நீரானது பாலைவனத்தின் சில இடங்களில் மிகவும் அரிதாகக் கிடைக்கும்.
வெப்ப பாலைவனங்கள் பெரும்பாலும் மழை மறைவுப் பிரதேசங்களில் மணல் மற்றும் மலைகளைக் கொண்டிருக்கும்.
பாலைவனங்களில் இருக்கும் உயிரினங்கள் அங்கு நிலவும் சூழலுக்கு ஏற்ப தகவமைப்புகளைக் கொண்டுள்ளன.
அன்டார்டிக் பாலைவனம், தென்துருவம்
அன்டார்டிக்
புவியின் தென்துருவப்பகுதியில் 1,38,29,430 சதுரகிமீ பரப்பளவினை கொண்ட அன்டார்டிக் உலகின் முதல் பெரிய பாலைவனமாகும். இது புவியின் மிகவும் குளிரான வறண்ட பாலைவனம் ஆகும்.
அன்டார்டிகாவின் தரைப்பகுதி 1.6கிமீ தடிமன் அளவுக்கு 98 சதவீதம் பனியால் மூடப்பட்டுள்ளது. இங்கு வெப்பநிலை கோடைகாலத்தில் 10 டிகிரி செல்சியஸாகவும், குளிர்காலத்தில் -85 டிகிரி செல்சியஸாகவும் இருக்கிறது.
இவ்விடத்தில் மழைப்பொழிவு 200மிமீ-க்கும் குறைவாக இருக்கிறது. உலகின் நன்னீரின் 70 சதவீதம் இங்கு பனியாக உறைந்துள்ளது.
அன்டார்டிக்காவில் வெப்பநிலை அதிகரித்து பனிக்கட்டி உருகும்போது அது பாலைவனமாக மாறுகிறது.
ஆர்டிக் பாலைவனம், வடதுருவம்
ஆர்டிக்
புவியின் வடதுருவப்பகுதியில் 1,37,26,937 சதுரகிமீ பரப்பளவினைக் கொண்ட ஆர்டிக் உலகின் இரண்டாவது பெரிய பாலைவனமாகும்.
இது கனடா, அலகாஸ்கா, பின்லாந்து, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ரஷ்யா, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது.
இங்கு கோடையில் வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாகவும், குளிர்காலத்தில் -40 டிகிரி செல்சியஸாகவும் இருக்கிறது. இங்கு வீசும் குளிர்காற்று அதிக பனிப்பொழி என்ற மாயயை உருவாக்குகின்றது.
சகாரா பாலைவனம், ஆப்பிரிக்கா
சகாரா பாலைவனம்
ஆப்பிரிக்கா கண்டத்தின் வடபகுதியில் 94,00,000 சதுரகிமீ பரப்பளவினைக் கொண்ட சகாரா உலகின் மூன்றாவது பெரிய பாலைவனம் ஆகும்.
உலகின் காணப்படும் வெப்ப பாலைவனங்களில் இதுவே மிகப்பெரியது. இது அல்ஜீரியா, சாட், எகிப்து, லிபியா, மாலி, மவுரித்தானியா, மொராக்கோ, நைஜர், சூடான், துனிசியா, மேற்கு சகாரா, எரித்தியா ஆகிய நாடுகளில் பரவியுள்ளது.
இது மிதவெப்ப மண்டலத்தில் அமைந்துள்ளது. இங்கு வெப்பநிலையானது பகலில் மிகஅதிகமாகவும், சூடாகவும் இருக்கிறது.
ஆனால் இரவில் மிகவும் குளிர்ந்து காணப்படுகிறது. சாகாராவின் மத்தியப் பகுதியில் தாவரங்கள் காணப்படுவதில்லை.
அரேபியப் பாலைவனம், ஆசியா
அரேபியப் பாலைவனம்
மேற்கு ஆசியாவில் 23,30,000 சதுரகிமீ பரப்பளவில் அமைந்துள்ள அரேபிய பாலைவனம் உலகின் நான்காவது பெரிய பாலைவனம் ஆகும்.
இது ஈராக், ஜோர்டான், குவைத், ஓமன், கத்தார், சௌதி அரேபியா, ஐக்கிய அரேபிய எமிட்ரேட்ஸ், ஏமன் ஆகிய நாடுகளில் பரவி காணப்படுகிறது.
இது மிதவெப்பமண்டல வகையைச் சார்ந்தது. இது ஆசியாவின் மிகப்பெரிய பாலைவனம் ஆகும்.
இதன் மத்தியப் பகுதியான ரப்-அல்-காலி உலகின் மிகப்பெரிய தொடர்ச்சியான மணல் அமைப்பினைக் கொண்டாகும். எனவே இவ்விடம் மணல் ஆறு என்று அழைக்கப்படுகிறது.
இங்கு காலநிலையானது மிகவும் உலர்ந்து காணப்படுகிறது. இவ்விடம் பகலில் வெப்பம் மிகுந்தும், இரவு உறைநிலைக்கு கீழான வெப்பநிலையும் கொண்டிருக்கிறது.
இங்கு ஆண்டின் சராசரி மழைப்பொழிவானது 100 மிமீ-ராக உள்ளது. சில இடங்களில் 30-40 மிமீ-ராகவும் இருக்கிறது.
கோபி பாலைவனம், ஆசியா
கோபி பாலைவனம்
மத்திய ஆசியப்பகுதியில் அமைந்துள்ள கோபி பாலைவனம் 10,00,000 சதுரகிமீ பரப்பளவினைக் கொண்டு உலகின் ஐந்தாவது பெரிய பாலைவனமாகத் திகழ்கிறது.
இது சீனாவின் வடக்கு மற்றும் மங்கோலியாவின் தெற்குப் பகுதியில் பரவியுள்ளது. இதன் பெரும்பான்மையான பகுதி மணற்பாங்காக அல்லாமல் கற்பாங்காகவே உள்ளது.
இமயமலையானது இந்தியப்பெருங்கடலில் இருந்து வரும் மழைமேகங்களைத் தடுத்து இப்பகுதியை பாலைவனமாக்கி உள்ளது. எனவே இது மழை மறைவுப் பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது.
இது குளிர் பாலைவன வகையைச் சார்ந்தது. இங்கு வெப்பநிலை கோடையில் 50 டிகிரி செல்சியஸாகவும், குளிர்காலத்தில் -40 டிகிரி செல்சியஸாகவும் இருக்கிறது.
கலகாரி பாலைவனம், ஆப்பிரிக்கா
கலகாரி பாலைவனம்
ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் 9,00,000 சதுரகிமீ பரப்பளவினைக் கொண்ட கலகாரி பாலைவனம் உலகின் ஆறாவது பெரிய பாலைவனம் ஆகும்.
இது அங்கோலா, போட்ஸ்வானா, நமீபியா, தென்னாப்பிரிக்கா நாடுகளில் பரவியுள்ளது. இங்கு கோடையில் வெப்பநிலை 20 டிகிரி முதல் 45 டிகிரி வரை உள்ளது.
இவ்விடத்தில் ஆண்டின் சராசரி மழைப்பொழிவு 175 முதல் 250மிமீ வரை ஆகும். இவ்விடம் சிவப்பு நிற மண்ணால் மூடப்பட்டிருக்கும்.
ஓமுரம்பா என்ற நதியே மழைகாலத்தில் இப்பகுதியின் நீராதாரமாக உள்ளது. இங்கு சிலசிறப்பான உயிரினங்கள் காணப்படுகின்றன. இப்பாலைவம் மிதவெப்பமண்டல வகையைச் சார்ந்தது.
படகோனியன் பாலைவனம், தென்அமெரிக்கா
படகோனியன் பாலைவனம்
தென்அமெரிக்காவின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள படகோனியன் பாலைவனம் 6,73,000 சதுரகிமீ பரப்பினைக் கொண்டு உலகின் ஏழாவது பெரிய பாலைவனமாக உள்ளது.
இதன் பெரும்பகுதி அர்ஜென்டினாவிலும், சிறிய பகுதி சிலி நாட்டிலும் அமைந்துள்ளது. இதன் கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும், மேற்கே ஆண்டிஸ் மலைத்தொடரும் உள்ளது.
ஆண்டிஸ் மலைத்தொடரால் இது மழைமறைவு பிரதேசமாக உள்ளது. இப்பாலைவனத்தின் மத்தியில் ஸ்டெப்பி புல்வெளிகள் மருந்திற்கு பயன்படும் குட்டை செடிகளுடன் காணப்படுகிறது.
இங்கு கோடையில் 6 டிகிரி முதல் 31 டிகிரி வரையிலும், குளிர்காலத்தில் 3 முதல் 12 டிகிரி வரையிலும் வெப்பநிலை காணப்படுகிறது. இது குளிர் பாலைவனத்தைச் சார்ந்தது.
விக்டோரியா பாலைவனம், ஆஸ்திரேலியா
விக்டோரியா பாலைவனம்
ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள விக்டோரியா பாலைவனம் 6,47,000 சதுரகிமீ பரப்பளவினைக் கொண்டு உலகின் எட்டாவது பெரிய பாலைவனமாகத் திகழ்கிறது.
இது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பாலைவனம் ஆகும். இது தெற்கு ஆஸ்திரேலியாவின் காவ்லர் மலையிலிருந்து மேற்கு ஆஸ்திரேலியாவின் கிழக்கு கோல்ட்ஃபீல்ட்ஸ் பகுதி வரை பரவியுள்ளது.
இது புல்வெளிகள், மணல் குன்றுகள், உப்பு ஏரிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இங்கு வெப்பநிலையானது கோடையில் 32-40 டிகிரி செல்சியஸாகவும், குளிர்காலத்தில் 21 டிகிரி செல்சியஸாகவும் உள்ளது.
இங்கு இடியுடன் கூடிய மழை பொதுவாகக் காணப்படுகிறது. இங்கு ஆண்டின் சராசரி மழையளவு 200-250 மிமீ ஆகும். இது மிதவெப்பமண்டல வகையைச் சார்ந்தது.
சிரியா பாலைவனம், ஆசியா
சிரியா பாலைவனம்
மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள சிரியா பாலைவனம் 5,20,000 சதுரகிமீ பரப்பளவினைக் கொண்டு உலகின் ஒன்பதாவது பெரிய பாலைவனமாக உள்ளது.
இது சிரியா, ஜோர்டான், ஈராக், சௌதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் பரவியுள்ளது. இது பாறைகளையும், தட்டையான நிலப்பரப்பினையும் கொண்டுள்ளது.
இது பாலைவனப்பகுதியையும், ஸ்டெப்பி புல்வெளிகளையும் கொண்டு தனித்துவமாக விளங்குகிறது.
சிரியாவில் உள்ள ஜெபல் டருஸ் எரிமலைப்பகுதிகளில் இருந்து வெளிவரும் வாலாவினால் இங்குள்ள நிலப்பரப்பு அமைந்துள்ளது. இது மிதவெப்பமண்டல வகையைச் சார்ந்தது.
பெரும்படுகைப் பாலைவனம், ஐக்கிய அமெரிக்கா
பெரும்படுகைப் பாலைவனம்
ஐக்கிய அமெரிக்காவில் அமைந்துள்ள பெரும்படுகைப் பாலைவனம் 4,92,000 சதுரகிமீ பரப்பினைக் கொண்டு உலகின் பத்தாவது பெரிய பாலைவனமாக உள்ளது.
இது ஐக்கிய அமெரிக்காவின் மிகப்பெரிய பாலைவனம் ஆகும். இதற்கு கிழக்கே ராக்கி மலைத்தொடரும், மேற்கே சியரா நெவாடா மலைத்தொடரும் காணப்படுகின்றன.
இதற்கு சோரான் மற்றும் மோஜாவே பாலைவனங்கள் தெற்கேயும், கொலம்பியா பீடபூமி வடக்கேயும் காணப்படுகின்றன.
இங்கே ஆண்டின் மழைப்பொழிவு 180-300 மிமீ வரை உள்ளது. இது குளிர்பாலைவனத்தைச் சார்ந்தது. இங்கு கோடை காலம் மிகவும் வெப்பமாகவும், குளிர்காலம் மிகவும் குளிராகவும் இருக்கும்.
One Reply to “உலகின் டாப்10 பெரிய பாலைவனங்கள்”