உலக வெப்பமயமாதல்

உலக வெப்பமயமாதல்

உலக வெப்பமயமாதல் என்பது இன்றைய மனித குலத்தை எதிர்நோக்கியிருக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று. உலகம் வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் கிரீன்ஹவுஸ் விளைவு ஆகும்.

கிரீன் ஹவுஸ் விளைவு பூமியின் வெப்பநிலை அதிகரிக்கத் துணை செய்கிறது. இதன் காரணமாக துருவப்பணி உருகுதல், கடல் மட்ட உயர்வு, பருவநிலை மாற்றம் போன்ற மிகப் பயங்கரமான பின் விளைவுகள் உண்டாகும்.

உலக வெப்பமயமாதல் எப்படி நடக்கிறது என்று பார்ப்போம்.

உலகின் ஒரே ஆற்றல் மூலம் சூரியன். வெப்ப ஆற்றல் சூரியனிடமிருந்து பூமிக்கு வெப்பக் கதிர்வீச்சு முறையில் அனுப்பப்படுகிறது. பூமியால் உட்கிரகிக்கப்படும் வெப்பக் கதிர்வீச்சின் அலை நீளம் 4 மைக்ரானை விடக் குறைந்ததாகும்.

பூமியால் கிரகிக்கப்பட்ட ஆற்றல் கதிர்வீச்சு முறையில் மீண்டும் அண்ட வெளிக்கே திருப்பியனுப்பப்படுகிறது. பூமியின் வெப்பநிலை சூரியனின் வெப்பநிலையை விடக் குறைவானதாகையால் இக்கதிர்வீச்சின் அலைநீளம் முன்னதை விடப் பெரியதாக (4 மைக்ரான் முதல் 20 மைக்ரான் வரை) உள்ளது. கதிர்வீச்சின் செறிவு 10 – 12 மைக்ரான் இடைவெளியில் அதிகமாக உள்ளது.

 

கிரீன்ஹவுஸ் விளைவு:

வளிமண்டலத்தில் உள்ள நீராவியானது 5 – 7 மைக்ரான் இடைவெளியில் உள்ள மற்றும் 12 மைக்ரானுக்கு அதிகமான கதிர்வீச்சுக்களை கவரும் தன்மை வாய்ந்தது. வளி மண்டலத்திலுள்ள கார்பன்டை ஆக்ஸைடு 4 மற்றும் 5 மைக்ரான் மற்றும் 14 மைக்ரானை விட அதிகமான கதிர்வீச்சுக்களைக் கவரும் தன்மை உடையது.

சூரியனிடமிருந்து வரும் கதிர்வீச்சு குறைந்த அலைநீளம் (4 மைக்ரானுக்குக் கீழே) உடையதாகையாதலால் வளி மண்டலத்தைத் தாண்டி முழுவதுமாக பூமியை வந்தடைகின்றது. ஆனால் பூமியின் கதிர்வீச்சு அதிக அலை நீளம் (4 முதல் 20 மைக்ரான் வரை) உள்ளதாகையால் அதன் ஒரு பகுதி கார்பன்டை ஆக்சைடு மற்றும் நீராவியால் கவரப்படுகின்றது. இதன் காரணமாக பூமியின் வெப்பநிலை உயர்கிறது.

கிரீன் ஹவுஸ் என்பது ஒளியை உள்ளே புக அனுமதிக்கும். ஆனால் வெளிச்செல்ல அனுமதிக்காத ஓர் அமைப்பாகும். முன்னர் கூறிய விளைவு இதனை ஒத்திருப்பதால் அது கிரீன்ஹவுஸ் விளைவு எனப் பெயரிடப்பட்டது.

(இங்கு கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் நீராவி ஆகியவை வெப்பம் உட்புக அனுமதிக்கின்றன. ஆனால் வெளிச்செல்ல அனுமதிப்பதில்லை)

 

கிரீன்ஹவுஸ் வாயுக்கள்

கிரீன்ஹவுஸ் விளைவுக்குக் காரணமான வாயுக்கள் கார்பன்-டை-ஆக்சைடு, ஓசோன், நைட்ரஜன், மீத்தேன், கந்தக டை ஆக்சைடு, ஈத்தீன் மற்றும் பிரியான்கள் (Co2, O3, N2, CH4, SO2,C2H4 and CFCs).

40% வெப்பநிலை மாற்றம் கார்பன்டை ஆக்சைடின் காரணமாகவும் 15% ஓசோனின் காரணமாகவும் ஏற்படுகின்றது. நீராவியும் இதில் பெரும்பங்கு வகிக்கின்றது.

 

பின்விளைவுகள்

உலகம் வெப்பமயமாதலின் காரணமாக மனித குலத்தை மிகவும் பாதிக்கும் வண்ணம் கீழ்க்காணும் விளைவுகள் ஏற்படுகின்றன. அவை

1. துருவப் பனி உருகுதல்

2. கடல் மட்ட உயர்வு

3. பருவநிலை மாறுபாடு

4. பயிர் விளைச்சல் குறைவு

வெப்பநிலை உயர்வின் காரணமாக துருவங்களில் தேங்கியுள்ள பனிக்கட்டிகள் அதிகமாக உருக ஆரம்பிக்கின்றன. இதன் காரணமாக கடல்மட்டம் உயருகின்றது. கடல் நீரின் வெப்ப விரிவாக்கத்தாலும் கடல்மட்டம் உயருகின்றது

இருபதாம் நூற்றாண்டில் 15 சென்டி மீட்டர் உயரத்திற்கு கடல் மட்டம் அதிகரித்துள்ளது. வளிமண்டலத்தில் 2oC வெப்பநிலை உயர்வு ஏற்பட்டால் அதன் காரணமாக 30 சென்டி மீட்டர் வரையிலான உயர்வு இருக்கும். ஆண்டிற்கு துருவப்பனி உருகுதலின் காரணமாக மட்டும் 1 முதல் 2 சென்டி மீட்டர் அளவு கடல் மட்டம் உயர்கிறது.

இன்னும் 4oC வெப்பநிலை உயர்வு ஏற்பட்டால் அதன் காரணமாக அண்டார்டிக் துருவத்தின் பனி முழுவதும் உருகுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக அஞ்சப்படுகிறது. இதனால் கடலோர நாடுகளும் நகரங்களும் மூழ்கி அழியும் நிலையில் உள்ளன. (எ.கா.) மாலத்தீவு, பங்களாதேஷ், தெர்லாந்து மற்றும் பல.

உலக வெப்பமயமாதலின் காரணமாக குளிர்காலம் குறைவானதாகவும், குளிர்மிகுந்ததாகவும் மாறுகிறது. கோடைகாலம் வறண்டதாகவும், நீண்டதாகவும் மாறுகின்றது. வெப்பமயமாதலின் விளைவாக புல்வெளிகள் மற்றும் பாலைவனங்கள் விரிவடைகின்றன மற்றும் வன அளவு குறைதலும், துருவம் நோக்கி நகர்தலும், பயிர் விளைச்சலில் பாதிப்பும் ஏற்படுகின்றன.

 

தொழில் மயமாதலும் வெப்பமயமாதலும்

தொழில்மயமாதலின் காரணமாக வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கி.பி. 1800ல் கார்பன்டை ஆக்சைடின் அளவு ஏறத்தாழ 290ppm ஆக இருந்தது. ஆனால் தற்போது அது 375ppm க்கும் அதிகமாக உள்ளது.

கார்பன்டை ஆக்சைடு வெளியீட்டின் அதிகரிப்பு வீதம் 1950ல் 0.7ppm ஆக இருந்தது. எழுபதுகளின் ஆரம்பத்தில் அது 1.3ppm ஆக உயர்ந்தது.

தொழில்மயமாக்குதலின் காரணமாக ப்ரியான்கள் (குளோரோ பிளோரோ கார்பன்கள்) வெளியீடு அதிகமாக உள்ளது.

கி.பி. 2040ல் வளிமண்டலத்திலுள்ள கார்பன்டை ஆக்சைடின் அளவு தற்போது இருப்பதைவிட இருமடங்காக மாறுவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது. இதனால் 1.5oC முதல் 4.5oC வரையான வெப்பநிலை உயர்வு ஏற்படலாம். இது மிகப்பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

 

தீர்வு

உண்மையைச் சொல்வதனால் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கார்பன்டை ஆக்சைடின் வெளியீட்டு அளவைக் குறைப்பது என்பது மிகக் கடினமான காரியம். எனவே இதை விட்டுவிட்டு வேறு வழியைத்தான் நாம் நாடவேண்டும்.

1. வனப்பாதுகாப்பு, மரம் நடுதல்

2. மீள்சக்தியுடைய ஆற்றல் வளங்களைப் பயன்படுத்துதல்

3. ஆற்றலின் பயன்பாட்டு வீதத்தை அதிகரித்தல்

போன்ற வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் வெப்பமயமாதலைச் சற்றுக் கட்டுப்படுத்தலாம்.

 

பருவகால மாறுபாட்டிற்கான அரசாங்கங்களின் கூட்டமைப்பு (ஐபிசிசி)

உலக வெப்பமயமாதலைத் தடுக்கும் பொருட்டு 1988ல் மற்றும் ஐக்கிய நாடுகளின் சுற்றுப்புற அமைப்பும் சேர்ந்து பருவகால மாறுபாட்டிற்கான அரசாங்கங்களின் கூட்டமைப்பை ஏற்படுத்தின.

இந்நிறுவனம் இத்துறையில் ஆய்வுகள் மேற்கொள்கிறது மேலும் வெப்பமயமாதலைத் தடுப்பதற்கான உலகளவில் சட்டதிட்டங்களை உருவாக்கி அமல்படுத்துகிறது.

இந்நிறுவனம் இதுவரை இரண்டு சர்வேத மாநாடுகளை நடத்தியுள்ளது. ஒன்று 1993ல் தியோ டி ஜெனிரோவிலும் மற்றது 1997 (டிசம்பர் 1-10)ல் ஜப்பானிலுள்ள குயோட்டாவிலும் நடைபெற்றது.

வளர்ந்த நாடுகளே கார்பன்டை ஆக்சைடு மற்றும் இதர கிரீன்ஹவுஸ் வாயுக்களை அதிகம் வெளியிட்டன, வெளியிடுகின்றன. எனவே வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள் வெப்பமயமாதலைத் தடுப்பதற்கான பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகின்றன. ஆனால் வளர்ந்த நாடுகள் இதற்குத் தயாரில்லை.

மேலும் ப்ரியான்களின் மாற்று போன்ற உயர்தொழில் நுட்பங்களை வளர்ந்த நாடுகள் மட்டுமே கொண்டிருக்கின்றன. வளரும் நாடுகள் இத்தகைய வெப்பமயமாதலைத் தடுக்கும் தொழில்நுட்பங்களை வியாபார நோக்கமின்றி பரிமாற்றம் செய்து கொள்ள விரும்புகின்றன.

மேலும், வளரும் நாடுகள், வெப்பமயமாதலைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு வளர்ந்த நாடுகளின் பொருளாதார உதவியை எதிர்பார்க்கின்றன. ஆனால் வளர்ந்த நாடுகள் இவற்றிற்கும் தயாரில்லை. எனவே இந்நிறுவனத்தின் பெரும்பாலான நடவடிக்கைகளில் குழப்பமே மிஞ்சுகிறது.

உலக வெப்பமயமாதல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. கட்டுப்படுத்துவதற்கான செயல்முறைகளை விட்டுவிட்டு ஒவ்வொரு நாடும் தத்தமது சொந்த நலன்களை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படுகின்றன. இந்நிலை மாற வேண்டும்.

– வ.முனீஸ்வரன்

Visited 1 times, 1 visit(s) today

Comments

“உலக வெப்பமயமாதல்” மீது ஒரு மறுமொழி

  1. […] அளவுகள் அதிகரிக்கும்போது உலக வெப்பமயமாதல் நிகழ்விற்குக் […]