பயன் தரும் உலோகக் கலவைகள்

நம் வாழ்வில் பல உலோகக் கலவைகள் பயன்படுகின்றன. அவற்றில் வெண்கலம், பித்தளை, எஃகு, டியூராலுமின், பற்றாசு முதலானவை குறிப்பிடத்தக்கவை. இந்த உலோகக் கலவைகளின் உருவாக்கம், வகை, பண்பு, பயன் ஆகியவற்றைப் பார்ப்போம்.
முதன் முதலாக உருவாக்கப்பட்ட உலோக்க கலவை வெண்கலம்.

வெண்கலம்
வெண்கலம்

இது தாமிரமும் வெள்ளீயமும் கலந்த உலோகக் கலவை. வெண்கலத்தை ஆயுதங்கள் செய்யப் பயன்படுத்தினர்.

வெண்கலம் கவர்ச்சியும், அரிமானத்தை எதிர்க்கும் தன்மையும் பெற்றுள்ளதால் சிலைகள் வடிக்கப் பயன்படுகிறது.

 

 

தாமிரம், துத்தநாக உலோகங்களின் கலவை பித்தளை. இது இரண்டு உலோகங்களின் உலோகக் கலவை.

பித்தளை அலங்காரப் பொருட்கள், இசைக்கருவிகள், பாத்திரங்கள், விளக்குகள், மற்றும் பல வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் செய்யப் பயன்படுகிறது.

 

இரும்பு உலோகமும், கார்பன் அலோகமும் கலந்த எஃகு ஓர் உலோகக் கலவை ஆகும். எஃகு கட்டுமானத் துறையில் பெரிதும் பயன்படுகிறது.

எஃகு பாத்திரங்கள் மற்றும் பல வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் செய்யப் பயன்படுகிறது.

எஃகு
எஃகு

 

 

அலுமினியம் இலேசானது. அதன் கடினத் தன்மை குறைவு. கடினத் தன்மையை அதிகரிப்பதற்கு அலுமினியத்துடன் தாமிரம், மெக்னீசியம், மாங்கனீசு போன்றவற்றைச் சேர்ப்பர். இது டியூராலுமின் என்ற உலோகக் கலவை ஆகும்.

டியூராலுமின் விமானம், இரயில் பெட்டி ஆகியவற்றின் பாகங்கள் செய்யப் பயன்படுகிறது.

டியூராலுமின்
டியூராலுமின்

 

தூய தங்கம் மிகவும் மென்மையானது. தூய தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்கள் எளிதில் உருமாற்றமும் தேய்மானமும் அடையும். ஆபரணத் தொழிலில் தங்கத்துடன் தாமிரம் கலந்து உலோகக் கலவையாக்கப்படுகிறது.

 

உலோகக் கலவை எப்படி உருவாகிறது?

உலோகங்களை ஒன்றுடன் ஒன்று கலந்து உருக்கி குளிர்வித்து படிகமாக்கும்போது உலோகக் கலவை கிடைக்கிறது.

இவ்வுலோகக் கலவையில் உருகிய நிலையில் உள்ளது போன்றே அயனிகள் சமமாகப் பரவியுள்ளன. ஆதலால் உலோகக் கலவைகள் திண்மக் கரைசல்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இக்கரைசலில் உள்ள ஓர் உலோகத்தின் அயனிகள் மற்றோர் உலோகத்தின் அயனிகளால் படிக அமைப்பின் பகுதிகளில் ஓரளவு இடம் மாற்றம் செய்யும்போது பதிலீட்டுத் திண்மக் கரைசல் உருவாகிறது.

எடுத்துக்காட்டு தாமிரமும் நிக்கலும் சேர்ந்த உலோகக் கலவை.

 

உலோகத்தின் படிக அமைப்பில் உள்ள உலோக நேர்மின் அயனிகளுக்கிடையே சில சிறிய அயனிகள் அமைவதால் இடைச்செருகல் திண்மக் கரைசல் உண்டாகிறது.

இரும்பும் கார்பனும் கலந்த எஃகு ஓர் இடைச் செருகல் திண்மக் கரைசல்.

 

உலோகக் கலவைகளின் பண்புகள் மற்றும் பயன்கள்

1. உலோகக் கலவை கடினத் தன்மையை அதிகரிக்கிறது. எடுத்துக்காட்டு டங்ஸ்டன் எஃகு. இது வேகமாக வெட்டும் கருவிகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

2. உலோகக் கலவை அரிமான எதிர்ப்பு ஆற்றலைக் கொடுக்கிறது. எடுத்துக்காட்டு எஃகுடன் குரோமியம் சேர்த்துத் துருப்பிடிக்காத எஃகு பெறப்படுகிறது. இது பாத்திரங்கள், அறுவை சிகிச்சைக் கருவிகள் செய்யப் பயன்படுகிறது.

3. உலோகக் கலவை உருகுநிலையைக் குறைக்கிறது. எடுத்துக்காட்டு வெள்ளீயம், காரீயம் கலந்த பற்றாசு. இவ்வுலோகக் கலவை உலோகங்களை இணைக்கப் பயன்படுகிறது.

4. உலோகக் கலவை இழுவிசையை அதிகரிக்கிறது. எடுத்துக்காட்டு எஃகுடன் குரோமியம், வெனேடியம் கலந்து வெனேடியம் எஃகு உருவாக்கப்படுகிறது. இக்கலவை உந்து தண்டுகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

5. உலோகக் கலவை வேதிச் செயல்களை மாற்றுகிறது. எடுத்துக்காட்டு சோடியம் இரசக் கலவை.

6. உலோகக் கலவை சிறந்த வார்ப்புகளை உருவாக்குகிறது. எடுத்துக்காட்டு காரீயம், ஆண்டிமணி, வெள்ளீயம் கலந்த அச்சு உலோகம்.

7. உலோகக் கலவை மின்தடைச்சுருள் கம்பிகள் செய்யப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டு மாங்கனீன். இது இரும்பு, தாமிரம், மாங்கனீசு, நிக்கல் கலந்த உலோகக் கலவை.

8. உலோகக் கலவை வேதிப் பொருள்களால் ஏற்படும் பாதிப்பிற்கு எதிர்ப்பு ஆற்றலைக் கொடுக்கிறது. எடுத்துக்காட்டு காரீயம், ஆண்டிமணி கலந்த ஆண்டிமோனியல் காரீய உலோகக் கலவை. இது கந்தக அமிலத்தைச் சேகரிக்கும் கொள்கலன்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

பொதுவாக உலோகக் கலவைகள் நீண்ட நாள்கள் உழைக்கக் கூடியவை. தேவையான பண்பு கொண்ட பொருள்களை உலோகக் கலவை மூலம் உருவாக்கலாம்.

உலோகக் கலவை உருக்குதல், அழுத்த வார்ப்பு, மின்வழித்தகடு படிதல் போன்ற மூன்று முறைகளில் உருவாக்கப்படுகிறது. பித்தளை மின்வழித்தகடு படிதல் முறையில் உருவாகிறது.

 

உலோகக் கலவைகளின் வகைகள்

உலோகக் கலவைகள் மூன்று வகைப்படும்.

1.இரும்பு உள்ள உலோகக் கலவைகள்

2.இரும்பு அற்ற உலோகக் கலவைகள்

3.இரசக் கலவைகள்

 

1.இரும்பு உள்ள உலோகக் கலவைகள்

இவற்றில் முக்கியமாக இரும்பு அடங்கியிருக்கும். எடுத்துக்காட்டு குரோம் எஃகு, நிக்கல் எஃகு, இன்வார், மாங்கனீசு எஃகு

 

2.இரும்பு அற்ற உலோகக் கலவைகள்

இவ்வகை உலோகக் கலவையில் இரும்பு தவிர மற்ற உலோகங்களின் கலவைகள் அடங்கியிருக்கும். எடுத்துக்காட்டு அலுமினியவெண்கலம், மணிவெண்கலம், வெடிஉலோகம், ஜெர்மன் வெள்ளி, மானெல் உலோகம்

 

3.இரசக் கலவைகள்

இவை உலோகங்களைப் பாதரசத்துடன் கலந்து உண்டாகும் உலோகக் கலவைகளாகும். எடுத்துக்காட்டு சோடியம் இரசக்கலவை, துத்தநாக இரசக்கலவை.

வெள்ளி, துத்தநாகம், தாமிரம், வெள்ளீயம் போன்ற உலோகத்துடன் பாதரசத்தைச் சேர்த்து உருவாக்கப்படும் உலோகக் கலவை, பல்சிதைவினால் உண்டாகும் பற்குழியை அடைக்கப் பயன்படுகிறது.

இவ்வாறு பல்வேறு உலோகக் கலவைகள் அன்றாட வாழ்விலும் அறிவியல் துறை செயலாக்கங்களிலும் பயன்படுகின்றன.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.