உளுந்தங்களி செய்வது எப்படி?

என்னடா தீபாவளி சமயத்தில் பலகாரத்தைப் பற்றி போடாமல் உளுந்தங்களி செய்முறை எதற்கு? என்று யோசிக்க வேண்டாம்.

பலகாரம் செய்வதற்கும், ஷாப்பிங் போவதற்கும் கூடுதல் சக்தி வேண்டாமா? அதற்குத்தான் இந்த உளுந்தங்களி.

இது வேற கூடுதல் வேலையான்னு யோசிக்காதீங்க. 15 முதல் 20 நிமிடங்களில் தயார் செய்துவிடலாம். சுவைக்கு ஒரு குறையும் இராது. இனி இந்த சுவையான உளுந்தங்களி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள் (4 பேருக்கு)

அரைத்த உளுந்த மாவு – 4 கை அளவு

கருப்பட்டி அல்லது வெல்லம் – சுவைக்கு ஏற்ப (தோராயமாக 200 கிராம்)

தேங்காய் துருவியது – 3 ஸ்பூன் அளவு

நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்

அரிசி மாவு – 4 ஸ்பூன்

 

செய்முறை

வீட்டில் இட்டிலிக்கோ, தோசைக்கோ மாவு அரைக்கும் போது வீட்டில் உள்ள நபர்களுக்கு ஏற்ப உளுந்தை கூடுதலாக சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அந்த உளுந்த மாவை புளிக்க வைக்க கூடாது. பிரிட்ஜ்ஜில் வைத்து விட்டு நேரம் கிடைக்கும் போது எடுத்து (உளுந்த மாவை பிரிட்ஜ்ஜில் வைத்த ஒரு நாளைக்குள்) களி தயாரிக்கலாம்.

முதலில் கருப்பட்டி அல்லது வெல்லத்தை தேவையான தண்ணீர் சேர்த்து கரைக்கவும். கடாயில் அரைத்த உளுந்த மாவைப் போட்டு சிறிது கூடுதலாக (1/2 டம்ளர்) தண்ணீர் சேர்த்து கையால் கலந்து விடவும். அதோடு அரிசி மாவையும் கலந்து விடவும்.

 

உளுந்து, அரிசி மாவு கரைசல்
உளுந்து, அரிசி மாவு கரைசல்

 

கரைசலை ஒரு முறை நன்கு கலக்கி விடவும். உப்புமா செய்வதற்கு கொதிக்கும் நீரில் ரவையை சிறிது சிறிதாக சேர்த்து வட்ட வடிவத்தில் கரண்டியால் சுற்றுவோம் அல்லவா? அது போல் கிண்டவும்.

ஐந்து நிமிடத்தில் நன்கு சேர்ந்து கேசரி பதம் வரும். அப்போது தீயை மிதமாக வைத்து நல்லெண்ணெய் சேர்க்கவும். களி வெந்து டப் டப் என்ற சத்தத்துடன் முட்டை போல் வரும்.

 

நல்லெண்ணெய் சேர்த்ததும்
நல்லெண்ணெய் சேர்த்ததும்

 

அந்த நேரத்தில் தேங்காய் துருவல் சேர்த்து ஒரு முறை கிண்டி கருப்பட்டி அல்லது வெல்லக் கரைசலை வடிகட்டி களியில் சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.

 

தேங்காய் துருவல் சேர்த்ததும்
தேங்காய் துருவல் சேர்த்ததும்

 

 

கருப்பட்டி அல்லது வெல்லக் கரைசல் சேர்த்ததும்
கருப்பட்டி அல்லது வெல்லக் கரைசல் சேர்த்ததும்

 

உளுந்தின் பச்சை வாசனை போய் கருப்பட்டி அல்லது வெல்லக் கரைசல் கட்டியானதும் இறக்கிவிடவும். சுவையான உளுந்தங்களி தயார்.

 

இறக்குவதற்குத் தயார் நிலையில் உளுந்தங்களி
இறக்குவதற்குத் தயார் நிலையில் உளுந்தங்களி

 

 

குறிப்பு

சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் வெல்லக் கரைசலுடன் சுக்குப் பொடியையும் சேர்த்து களி தயார் செய்யலாம்.

சிறிது பாசிபருப்பை வேகவைத்து சேர்த்தும் களி தயார் செய்யலாம்.

குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ், ஏலம் ஆகியவற்றை வறுத்து களியோடு சேர்த்துக் கொடுக்கலாம்.

உளுந்தின் அளவிற்கு ஏற்ப அரிசி மாவின் அளவினைக் கூட்டியோ, குறைத்தோ சேர்க்கவும். இது தான் களி கெட்டிப்பட உதவுகிறது.

பிரதிபா செந்தில்