இந்த உழவன்
எதை நோக்கி இப்
பாதையிலே காத்திருக்கிறான்?
எதை எண்ணித் தன்
வயலையே பார்த்திருக்கிறான்?
வானில் தெரியும்
கார் முகில்கள்
காற்றில் கரைந்து போகுமுன்னே
தன் வயலும் மனமும்
குளிர்ந்திடவே மழையாய்ப்
பொழியட்டும் என்றா?
பாடுபட்டு இதுகாறும்
பேணிய பச்சை நெற்கதிர்கள்
வறட்சியில் வாடிக் கருகுமுன்னே
முற்றிய நல்ல நெல்மணியாய்
அறுவடை ஆகட்டும் என்றா?
இது வரை வாழ்ந்த
தன் வாழ்நாளில்
கடன் மேல் பட்ட
கடன் தன்னை
தன்னுயிர் பிரிந்து போகுமுன்னே
தீர்ப்பது எங்கனம் என்றா?
இனியும் வரும்
தன் வாழ்நாளில்
பார்த்துப் பார்த்துப்
பயிர் செய்தும்
நட்டம் மேலே நட்டம் வரின்
உய்வது எங்கனம் என்றா?
உயிர்ப்பது எவ்விதம் என்றா?
உழைப்புக்குத் தகுந்த
ஊதியம் உண்டெனும்
முன்னாள் வாக்கு
உலகினிலே
இந்நாள் அற்றுப் போனது
ஏன் என்றா?
உழவரும் வறுமையும்
உடன்பிறப்பு எனும்
இழிநிலை இன்றிங்கு
வந்துற்றது ஏன் என்றா?
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
எனும் பொதுமறை வாக்கின்று
பொய்த்தது ஏன் என்றா?
உழுதுண்டு வாழ்வாரே வீழ்வார்
எனும் புதுமறை வாக்கின்று
வாய்த்தது ஏன் என்றா?
விலையற்ற பயிருக்கு
விளையும் பயிர் எனப்
பெயரிட்டவர் யார்
என நினைத்தா?
விலையற்ற பொருளுக்கு
விளைபொருள் எனப்
பெயரிட்டது ஏன்
என வியந்தா?
அல்லும் பகலும் அயராது
ஓடாய் உழைத்து முதுகொடிந்த
உழவனை நாட்டின் முதுகெலும்பு
எனச் சொல்வது ஏன்
என நினைந்தா?
உழவன் முதுகை ஒடித்த பின்னும்
அவன் முதுகேறி
உயரச் சென்றோர்
ஏறிவந்த முதுகினையே
எட்டி உதைப்பது ஏன்
எனப் பதைத்தா?
ஊரில் வாழும்
உழவர் எல்லாம்
வயலில் இறைத்த
விதை யாவும்
பயிராய் முளைத்துப்
பலன் தரும் போது
நகரில் வாழும்
தலைவர்க்கு எல்லாம்
தேர்தலில் இறைத்த
வாக்குகள் யாவும்
விழலுக்கிறைத்த நீரெனவே
வீணாய்ப் போவது
ஏன் என்றா?
எனவே…
நல்லேர் உழவனே!
நான் சொல்வதைத் கேள்!
நீ
பாதையிலே காத்திருப்பதும் வீண்!
உன்
வயலையே பார்த்திருப்பதும் வீண்!
நீ காத்திருக்கும்
அப் பாதையிலே
பளபளவென
மின்னுவதெல்லாம்
பொன்னுமல்ல!
நீ பார்த்திருக்கும்
உன் வயலிலே
பசுமையாய்த்
தெரிவதெல்லாம்
காசுமல்ல!
கண்ணால்
நீ காண்பதெல்லாம்
வெறும் கானல் நீரே!
காலம்
ஒரு நாள் மாறும் என
நீ கருதுவதும்
ஒரு பகல் கனவே!
மாறியது
காலங்களில்லை
மனித மனங்கள் தான்!
மாறியது
வானிலை மட்டுமல்ல
உன் நிலையும் தான்!
இன்று வரை
உழவர் எனப் பெயர்
வந்த காரணம்
நீ வயலை
உழுவதனால் என்றிருந்தேன்
ஆனால்
இன்றறிந்தேன்
அதன் உண்மைக் காரணம்
காடென்றும் பாராமல்
மேடென்றும் பாராமல்
மழையென்றும் பாராமல்
வெயிலென்றும் பாராமல்
பகலென்றும் பாராமல்
இரவென்றும் பாராமல்
ஓய்வின்றி ஒழிவின்றி
வாழ்நாளெல்லாம்
நீ உழலுவதால் என்று
ஊருக்கும் உலகிற்கும்
உணவிடும் உன்னை
நீ
சரியாக உண்டாயா?
நன்றாக உறங்கினாயா?
என்று கேட்டு
என்றேனும் யாரேனும்
வந்ததுண்டா?
ஏனில்லை?
வருவார்.
நீ போகாத ஊருக்கு
எட்டு வழிப் பாதை
அமைக்க வேண்டி
உன் நிலத்தை
கையகப் படுத்த
ஒருவர் வருவார்
நீ ஏறாத விமானம்
ஏறியிறங்க ஏதுவாகத்
தேவை ஒரு ஓடு பாதை
அதை அமைக்கத் தேவை
ஏக்கர் ஒரு மூவாயிரம்
அதில் அடக்கம்
உன் ஏக்கர் மூன்றும்
என்று
அறிவிக்க வருவார்
இன்னொருவர்
ஏழு தலைமுறையாய்
இந்நிலம் எம்
முன்னோரின் சொந்தம்
என்று நீ
சொல்வதை சற்றேனும்
செவியில் கொள்ளார்
ஆறு லட்ச ரூபாய்
ஏக்கர் ஒன்றுக்கு
வாங்கிக் கொண்டு
அரசுக்கு நிலத்தை
விற்று விடு என்பார்
ஐந்து உயிர்கள் யாம்
இந்நிலத்தை
நம்பித்தான் வாழுகிறோம்
என்று நீ
கண்ணீர் வடித்தால்
வாரத்தில்
நாலு நாள் வேலை
உனக்கிங்கு
வருடத்தில்
நூறு நாள் வேலை
வாய்ப்புத் திட்டத்தில்
போட்டுத் தருவோம்
என்று
பொய்யுரை புனைவார்
உழுதவன்
கணக்குப் பார்ப்பதில்லை
என்பதென்னவோ உண்மைதான்
ஆனால்
உழுபவனுக்கு
கணக்கே தெரிவதில்லை
என்று
தவறாகக் கணக்கிடுவர்
அதிகார வர்க்கத்தர்
மூன்று போகம்
நெல் விளையும்
அசல் நஞ்சை பூமியிது
தர மறுப்பேன்
என்று நீ
அடம் பிடித்தால்
இரண்டு லட்சம்
இன்னும் கூட்டித்
தருவோம் என்று
பணத்தாசை
பல காட்டுவார்,
பேரமும் சில பேசுவார்
எனக்கிங்கு
இருப்பதெல்லாம்
இந்த ஒரு நிலம் தான்
என்று
நீ கெஞ்சினால்
உனக்கிங்கு
இருப்பதெல்லாம்
இந்த ஒரு வழி தான்
என்று
அவர் மிஞ்சுவார்,
கோர்ட் என்றும்
கேஸ் என்றும்
அச்சமூட்டி
ஆளை மிரட்டுவார்
என்
பாட்டன் முப்பாட்டன்
முந்தை நாளில் எனக்கீந்த
அரும் பெரும் சொத்தை
அவர் வழி நின்று
யான் காப்பன் என
எந்தைக்கு யானீந்த
வாக்கிங்குப் பிழையாகுமே
என்று
நீயும் முறையிட்டால்
அதனாலென்ன
எம் தலைவருந்தான்
ஐந்தாண்டுக்கு ஒரு முறை
அள்ளி வீசும்
வாக்குறுதி போல்
நீயும் அதனை
கணக்கில் கொள்ளாதே
என்று
பழிக்கு அஞ்சாமல்
பாதகம் செய்ய
வழி சொல்வார்!
அம்மட்டுமா?
புரோகிதர் ஒருவரை
நீ நாடிப்
பூசை புனஸ்காரம்
சில செய்து
பரிகாரம் ஒன்றையும்
தேடிக் கொள்
என்று அப்
பாவம் போக்க
வாய் கூசாமல்
வழி சொல்வார்!
அன்று நடந்த
அப் பாரதக் கதையில்
சூதாட்டம் எனும்
வஞ்சக சூழ்ச்சியால்
பாண்டவர் பூமியை
கௌரவர் பறித்தார்
இன்று நடக்கும்
இப் பாரதக் கதையில்
முன்னேற்றம் எனும்
பூடகப் போர்வையில்
உழுதவர் பூமியை
மாற்றார் பறிப்பார்
நாடிழந்த பாண்டவரும்
தம் நாடும் நகரமும்
சுகபோக வாழ்வும் துறந்து
அல்லல் படைத்த
கொடும் காட்டில்
மறைந்து வாழும்
நிலைமை உற்றார்
காடிழந்த உழவரும்
தம் ஊரும் உறவும்
சொத்து சுகங்களும் துறந்து
அல்லல்கள் நிறைந்த
நகர்ப் புறத்தில்
அகதிகள்போல் வாழும்
அவலம் உற்றார்
அன்று
பாண்டவருக்கும் கௌரவருக்கும்
இடையே
மண்ணுக்கென நடந்த
பாரதப் போரில்
காவியுடை எனும்
வேற்றுடை தரித்து
வஞ்ச மொழி
பேசி வந்த
தேரோட்டி கண்ணனுக்கு
தான் பாடுபட்டு
சேர்த்து வைத்த
தன் வினையை
தன் நல்வினையை
தன் உதிரத்தால்
தாரை வார்த்துக் கொடுத்தான்
புராண காலக் கர்ணன்
இன்று
உழவருக்கும்
மற்றவர்க்கும்
இடையே
மண்ணுக்கென நடக்கும்
பாரதப் போரில்
சீருடை என்னும்
ஓருடை தரித்து
நஞ்சு மொழி
பேசி வரும்
அரசு அதிகாரியர்க்கு
தான் பாடுபட்டுக்
காத்து வந்த
தன் நிலத்தை
தன் நன்னிலத்தை
தன் கண்ணீரால்
தாரை வார்த்துக் கொடுக்கும்
இன்றைய உழவன்
ஒரு கலியுகக் கர்ணன்
நக்கசேலம் சிட்னி ஜெயச்சந்திரன்