உணவுக்கு உழைக்காமல் உணர்விற்கு உழைக்கின்றான்
உறுபசி கொள்ளாது உலகினைக் காக்கின்றான்
உயிர்நாடி ஓடிடுதே உழவனின் ஏரினிலே
பயிர்வாடிப் போயிடுமே அவன்முகம் வாடயிலே
நெற்கதிர் பாலேறும் உழைப்பின் வியர்வையிலே
நிற்கதி யாகின்றான் நினைக்க மறக்கையிலே
நாவும் தேடிடுமே அறுசுவை உணவதனை
நாதியற்று கிடக்கின்றான் அறுவடை செய்தவனோ
கருவளரும் குழந்தையென பயிரினையே வளர்க்கின்றான்
பதரெனப் போனாலே பதறியேப் போகின்றான்
பதறியவன் உதறிவிட்டால் பரம்பொருளும் பசிகாண்பான்
கதறும் மனநிலைக்கு கடிவாளம் அவனிடுவான்
உழவனின் உறவாக உயிர்களும் தொடர்ந்தாலும்
உணர்வுள்ள ஆறறிவோ அகன்றே போகிறதே
சேறும் சிவந்திடுமே உழவனின் உதிரத்தில்
சேர்த்தணைக்க மறுக்கின்றோம் சேறும் சிதறிடுமோ
தீண்டாமை பார்வைக்குத் தீர்ப்பும் கிடைத்திடுமே
தீங்கான மனமெல்லாம் தீக்கிரை ஆயிடுமே
தீராத பசியெல்லாம் அவன்வழி தீர்ந்திடுவான்!
தீர்வின் கடைப்புள்ளி அவனென் றாகிடுவான்!!
க.வடிவேலு
தகடூர்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!