உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.

இன்றைய பொருளாதாரம் எப்படி இருக்கிறது?

வேளாண்மைப் பொருளாதார வகையில் நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?

நாம் எங்கே போக வேண்டும்?

நமது நாடு வேளாண்மை நாடு.

வேளாண்மைக்குரிய நிலப்பரப்பு, நிலவளம், மனித சக்தி மிகுந்த நாடு.

நமது இலக்கியங்களில் காப்பியங்களில் தவறாமல் வேளாண்மையைப் புகழ்ந்து பேசாத கவிஞர்கள் இல்லை.

ஆனால், இன்றைய தலைமுறையில் வேளாண்மைத் துறையில் போதிய ஆர்வம் இல்லை!

அரசுப் பணிகளை விட வியாபாரத்தை விட விவசாயம் இரண்டாந்தரத் தொழில் என்று கருதப்படுகிறது.

இது முற்றிலும் தவறு.

 

‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை’

‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’

என்று திருக்குறள் கூறுகிறது.

உடலோடு கூடிய உயிர் வாழ்க்கைக்கு உணவுப் பொருள்கள் இன்றியமையாதன.

உணவுப் பொருள்களை வழங்குவது விவசாயத் தொழிலே!

அதனாலேயே உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று இலக்கியங்கள் பாராட்டுகின்றன.

நடைமுறையில் பால் தரும் பசு, புண்ணியமானது என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.

ஆனால் தமிழர் வாழ்வியலில் எருதே முதன்மை பெற்றுள்ளது.

நாம் வணங்கும் கடவுள் சிவபெருமான், தனது ஊர்தியாகவும் உயர்த்திப் பிடிக்கும் கொடியாகவும் பயன்படுத்துவது எருதுதான் என்பதை உணர்க. திருக்கோயில் முகப்பில் வரவேற்பதும் எருதே!

‘உழுத நோன் பகடு அழிதின்றாங்கு’

என்ற புறநானூற்று வரி, என்றும் போற்றத்தக்க வரி.

( நோன் ‍ – சிறந்த; பகடு ‍- எருது அல்லது மாடு; அழி ‍- வைக்கோல்.)

உழுததின் பயனாகிய நெல்லை நமக்கு உண்ணக் கொடுத்து விட்டு, நாம் கழிவாக எண்ணி அழிக்க நினைக்கும் வைக்கோலைத் தாம் உண்டு, மனிதனுக்கு மகத்தான சேவை செய்பவை எருதுகள்.

ஆதலால்தான் தமிழர் வாழ்வில் பொங்கல் விழா உழவர் திருநாளாக உருக்கொண்டது.

மனிதன் உண்டு உயிர் வாழ்தலுக்கு ஒரு நாளைக்குச் சராசரி எவ்வளவு உணவு – கூட்டுணவு தேவையோ அது அவனுக்குக் கிடைக்கவில்லை. அதனால் வலிமையிழந்து நிற்கின்றான்.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்

நமது நாட்டில் உணவுப் பொருள் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்கும் திசையில் சென்று கொண்டிருக்கிறோம். அன்றாடத் தேவைக்குரிய உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வதைக் கூடுதலாக்க வேண்டும்.

இலாப நோக்கில் பணப் பண்டங்களை உற்பத்தி செய்வதையும் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் விளை நிலங்களையும் கண்மாய்களையும் பற்றிக் கொண்டு வருவதையும் தவிர்க்க வேண்டும்.

ஊட்டி வளர்க்கும் தாய் போன்றது நிலம்.

உணவளிப்பவர்கள் விவசாயிகள்!

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.

 

நமது இந்திய நாட்டுப் பொருளாதாரத்தில் விவசாயம் கணிசமான பங்கைப் பெற்று வந்துள்ளது; பெற்று வருகிறது.

நமது நாட்டுப் பொருளாதாரத்தில் விவசாயம் வகிக்கும் பங்கு 39 விழுக்காடு அது மட்டுமல்ல. விவசாயத் தொழில் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்பு 79 விழுக்காடு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மை பெற்றுள்ள பொருளாதார விகிதம் 28 விழுக்காடு. வேலை வாய்ப்பு 62 விழுக்காடு.

இந்திய நாட்டுப் பொருளாதாரத்தை விவசாயத்தின் மூலம் மேலும் கூட்ட வாய்ப்புண்டு. அதுபோலவே தமிழ்நாட்டிலும் கூட்ட அதிக வாய்ப்புக்கள் உள்ளன.

அந்த வாய்ப்புக்களை நாம் முழுமையாகப் பயன்படுத்தினால் பொருளாதாரத் துறையில் தற்சார்பு நிலையை அடைய முடியும்.

எல்லோரும் பசிதீர உண்பது மட்டுமன்றி, பசி, பட்டினியை அறவே ஒழித்து வெளியேற்ற இயலும். ‘வறுமையே வெளியேறு’ என்ற கோஷத்திற்கு வெற்றி சேர்க்க முடியும்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

 

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற இக்கட்டுரை, தவத்திரு குன்றக்குடி அடிகளார் எழுதிய, எங்கே போகிறோம் என்னும் நூலில்,  வேளாண்மைச் சிந்தனைகள் என்னும் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.