உழவு மாடுகள்- வகைகளும் சுழிகளும்

உழவு மாடுகள் விவசாயிகளின் செல்வம் ஆகும். மாடு என்றால் பொதுவில் செல்வம் என்று பொருள். கம்பன் மாட்டின் சிறப்பை சொல்லும்போது,

"வானத்தில் மேகங்கள் எழுந்து குறித்த காலத்தில் மழை பெய்தாலும் உலகினருக்கு செழிப்பு உண்டாவது மாடுகளினாலேதான். 

வேதம் படித்தவர்களால் வெய்யப்படும் வேள்விகள் சிறப்புப் பெறுவதுவும் மாடுகளால்தான். 

படைகள் கொண்டு போர் புரியும் மன்னர்களின் மதங்கொண்ட யானைகள் வலிமைப் பெறுவதும் மாடுகளால்தான்" என்று வேளாளர்களின் உழவு மாடுகளைச் சிறப்பிக்கின்றார்.

வானமழை பொழிந்தாலும் வளம்படுவது எவராலே?

ஞானமறை யவர்வேள்வி நலம்பெறுவது எவராலே?

சேனைகொடு பொருமன்னர் செருக்களத்தில் செகுக்குமத

யானைவலி எவராலே? இவர் எருத்தின் வலியாலே. ( ஏர் எழுபது – கம்பன் )

நம் நாட்டில் வேளாண்மையில் அண்மைக் காலம் வரையில் எருதுமாடுகளின் பங்கு இன்றியமையாததாக இருந்தது. ஒவ்வொரு விவசாயியும் தம் தேவைக்கு ஏற்றார்போல் மாடுகளை வைத்திருப்பார்கள். 

ஏர் ஓட்ட, உரம் எடுத்துச் செல்ல, விதை விதைக்க, பல்லு மரம் ஓட்ட, கார் மரம் ஓட்ட, பரம்பு ஓட்ட, மகசூலை எடுத்துவர என பலதரப்பட்ட அவசியத் தேவைகளுக்கு கிராமச் சூழலில் மாடுகள் இன்றியமையாதனவையாக இருந்த ன.

உழவு மாடுகள் வகைகள்

உழவு மாடுகள் பல வகைகளில் உள்ளன. அவற்றைப் பற்றி அறிவோம்.

வளைந்த கொம்புகளை உடைய மாடு குடைக்கொம்பன்.

சிவந்த நிறத்திட்டுக்களை உடைய மாடு செம்மறையன்.

குத்திட்டு நிற்கும் குளம்புடைய மாடு குத்துக்குளம்பன்.

குடை போன்ற காதுகளையுடைய மாடு குடைச்செவியன்.

கொம்புகளின் இரு முனைகளும் இணைந்த மாடு கூடுகொம்பன்.

பனங்காய் நிறத்தில் இருக்கும் மாடு மயிலை.

கழற்சிக்காய் போன்ற கண்களையுடைய மாடு கழற்சிக்கண்ணன்.

சிறிய கொம்புகளை உடைய மாடுகள் மட்டைக்கொம்பன்.

கருப்பு நிற மாடுகளை கறுப்பன்.

மேலும் மஞ்சள்வாலன், படப்புப்புடுங்கி, கொட்டைப்பாக்கன், கருமறையன், பசுக்காலன், அணிற்காலன், படலைக்கொம்பன், விடர்த்தலை பூநிறத்தான், வெள்ளைக்காளை, மணப்பாரை, வடக்கத்தியான் மேற்கத்தியான், ஓங்கோல், மற்றும் மல்லம் என‌ நிறைய வகை மாடுகள் இருந்துள்ளன.

இன்னும்கூட சில இருக்கும், ஆனால் நமக்கு தெரியுமா? முக்கூடற்பள்ளு என்ற நூலில் இருப்பதில் சிலவற்றை தெரிந்து கொள்வோம்.

குடைக்கொம்பன் செம்மறையன் குத்துக் குளம்பன் மேழை
குடைச்செவியன் குற்றாலன் கூடுகொம்பன்
வடர்ப்புல்லை கரும்போரான் மயிலை கழற்சிக் கண்ணன்
மட்டைக்கொம்பன் கறுப்பன் மஞ்சள்வாலன்
படப்புப் பிடுங்கி கொட்டைப் பாக்கன் கருமறையன்
பசுக்காலன் அணிற்காலன் படலைக்கொம்பன்
விடர்த்தலைப் பூநிறத்தான் வெள்ளைக் காளையும் இந்த
விதத்திலுண் டாயிரமே மெய்கா ணாண்டே.’ பாடல் 109

உழவு மாடுகள் மேல் உள்ள‌ சுழிகள்

சுழி என்பது வட்டமான வடிவத்தைக் குறிக்கிறது. மாட்டின் மீது பல இடங்களில் சுழி (அதாவது வளைவு) இருக்கும். சுழிகளின் ( வளைவுகளின்) அமைப்பை வைத்து அவை நன்மை தரும் சுழிகள் மற்றும் தீமை தரும் சுழிகள் என்று பிரிக்கின்றனர்.

சுழியினை சுடி என்றும் பேச்சு வழக்கில் சொல்லுவதுண்டு.

மாடு வாங்கும் போது அதுவும் குறிப்பாக நாட்டு மாடுகளை வாங்கும்பொழுது, சுழிகள் நன்றாக அமைந்திருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை உழவர் பெருமக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.

உழவுத் தொழிலுக்கு அச்சாணியாக இருப்பது எருது மாடுகளே ஆகும். எனவேதான் உழவர் பெருமக்கள் தங்களிடம் உள்ள உழவு எருதுகளில் தீய சுழிகள் இல்லாமல் இருப்பவைகளை மட்டுமே பேணி வளர்ப்பர். பால் மாடுகளிலும் சுழி பார்ப்பவர்கள் உண்டு.

மாட்டின் சுழிகளுக்கும் அவற்றின் உடல் நலன் மற்றும் உழைக்கும் திறனிற்கும் தொடர்பு இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

கிராமத்தில் தம் தேவைக்கு மாடுகள் வாங்க முயலும்போது, மாடுகளின் சுடிகளை(சுழி) நன்கு அறிந்த ஒரு சிலரின் உதவியால் மாடுகளை வாங்குவார்கள்.

அதுபோல் மாடுகளின் வகைகளையும் தத்தம் பகுதிகளுக்கு ஏற்றார்போல் வாங்குவார்கள்.

நன்மை செய்யும் சுழிகள்

1.கோபுரச்சுழி

2.லட்சுமிச் சுழி

3.தாமணி சுழி

4.வரி சுழி

5.இரட்டைக்கவர் சுழி

6.ஏறுபூரான் சுழி

7.விபூதி சுழி

8.கொம்புதானா சுழி

9. ஏறு நாக சுழி

10. பாசிங்சுழி.

மாட்டின் திமிலின் மேலும், திமிலுக்கு முன்புறத்தில் எதிரே நின்று பார்த்தால் தெரியும்படியாகவும் திமிலும் முதுகும் சேருமிடத்தில் இருப்பது கோபுரச்சுழி ஆகும்.

மாடுகளின் கழுத்தில் ஒருபக்கத்தில் கொஞ்சம் தள்ளி இருக்கும் சுழி, இலட்சுமி சுழி ஆகும்.

மாட்டின் முதுகுத் தண்டில் நீளமாக ஒரு கோடும் கோட்டின் இரு பக்கங்களிலும் இரண்டு சுழி இருந்தாலும் அல்லது முன்னங்கால்களுக்கும் கழுத்துக்கும் இடையில் தாடையின் இருபுறங்களில் இருந்தால் தாமணி சுழி ஆகும்.

மாட்டின் முதுகுத்தண்டின் இடப்பக்கம் மட்டும் உள்ள சுழி, விரி சுழி ஆகும்.

முன்னங்கால் முட்டியின் இரு பக்கங்களிலும் இரண்டு பிளவு போல் இருப்பது, இரட்டை கவர் சுழி ஆகும்.

கண்களுக்கு மேல் நெற்றியில் இருக்கும் சுழி இரட்டையாக இருந்தால், பாசிங் சுழி ஆகும்.

மாட்டின் முதுகின் நடுவில் பூரான் போன்று முடி பிளவு இருக்கும். அது முன் பக்கமாக முடிந்திருந்தால் ஏறுபூரான் சுழி ஆகும்.

மாடுகளின் இரு கண்களுக்கும் நடுவில் இரு புருவக் கோடுகளுக்கு கீழிருக்கும் சுழி, விபூதி சுழி ஆகும்.

மாட்டின் கொம்புகளுக்கு கீழ்ப் பக்கத்தில் சுழி இருந்தால், கொம்பு தானா சுழி ஆகும்.

மாட்டு வாலின் மேல்பக்கம் முதுகு நோக்கி சுழித்து செல்வது ஏறு நாக சுழி ஆகும்.

தீமைச் செய்யும் சுழிகள்

1.முக்கண் சுழி

2. குடைமேல் குடைசுழி

3.விலங்கு சுழி

4.பாடை சுழி

5.தட்டுச் சுழி

6.துடைப்பைச் சுழி

7. புட்டாணிச் சுழி

8. இறங்கு நாகச் சுழி

9.கருநாகச் சுழி

10.பெண்டிழந்தான் சுழி

11.எச்சுபள்ளிச் சுழி

12.வால்முடங்குச் சுழி

13 மென்னிப்பிடிச் சுழி

14.பூரண கௌவல் சுழி

15. பாடைக்கட்டுச்சுழி.

மாட்டின் இரு கண்களுக்கும் நடுவில் முக்கோண வடிவில் இருக்கும் சுழி, முக்கண்சுழி ஆகும்.

மாட்டின் நெற்றியில் ஒரு சுழியின் மேல் இன்னொரு சுழி இருந்தால் குடைமேல்குடை சுழி ஆகும்.

மாட்டின் முன்னங்கால் அல்லது பின்னங்காலின் பின்புறம் அல்லது கணுக்காலில் இருக்கும் சுழி, விலங்கு சுழி ஆகும்.

மாடுகளின் முதுகின் பின் பகுதியில் வாலின் முன் பக்கமாகவோ, பின் பக்கமாகவோ இருக்கும் சுழி, பாடை சுழி ஆகும்.

மாட்டின் இடுப்பு சேருமிடத்தில் சுழி இருந்தால், தட்டுச் சுழி ஆகும்.

மாட்டின் வால் ஆரம்பிக்கும் இடத்தில் உள்பக்கம் இருக்கும் சுழி, துடைப்பை சுழி ஆகும்.

மாட்டின் இடுப்பிற்கும் வால் ஆரம்பிக்கும் இடத்திற்கு நடுவில் சுழி இருந்தால், புட்டாணிச் சுழி ஆகும்.

மாட்டின் வால்பகுதில் மேல்புறத்தில் கீழ் நோக்கி இருக்கும் சுழி இறங்கு நாகச் சுழி ஆகும்.

மாட்டின் கழுத்தைச் சுற்றி மணிக்கயிறு கட்டியது போல் இருந்தால் கருநாகச்சுழி ஆகும்.

உழவு மாடுகள் மற்றும் அவற்றின் சுழிகள் பற்றி சிலரிடம் கேட்டும், படித்தும் தெரிந்ததைக் குறிப்பிட்டுள்ளேன். தத்தம் பகுதிகளில் இன்னும் இருக்கலாம். அவற்றையும் விருப்பம் உள்ளவர்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்
திருநின்றவூர்-602024
கைபேசி: 9444410450

One Reply to “உழவு மாடுகள்- வகைகளும் சுழிகளும்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.