உழைப்பவர் உலகம் எளிதில் வெற்றி பெறும்

உழைப்பவர் உலகம் எளிதில் வெற்றி பெறும் என்ற இக்கட்டுரை, எங்கே போகிறோம் என்னும் நூலில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் எழுதிய உழைப்புச் சிந்தனைகள்  என்னும் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

இன்றைய மனிதன் படிக்கிறான்; பட்டதாரியாகிறான்; அறிஞன் ஆகிறான்.

அறிவின் பயன், என்ன செய்யவேண்டும் என்று அறிந்து செய்தலேயாம்.

 

செயல், உழைப்பின் பாற்பட்டது. உழைப்பற்ற செயல்களும் உண்டு. ஆயினும் உண்ணல், உடுத்தல், காதல் செய்தல் ஆகிய நுகர்ச்சிகளுக்கும் உழைப்பு இன்றியமையாதது.

ஏன்?

மனிதன் விலங்குகளின்றும் வேறுபட்ட நிலை, உணவைத் தேடும் நிலையில்தான் தொடங்கியது. பின்னாளில் அவன் வளர, வளர உணவைத் தேடாமல் படைத்தான்.

இந்தக் காலக்கட்டத்தில் உழைப்பு வளர்ந்தது. கருவிகளுடன் மனிதனுக்குத் தொடர்பு ஏற்பட்டது. ஆக உழைப்பே வாழ்வு என்றாகிறது. உழைப்பிற்கே உரியது வாழ்வு.

வாழ்வு உழைப்பினாலான‌து. வாழ்வினால் உழைப்பு வளர்கிறது. உண்ணும் உணவைத் தனது கடின உழைப்பால் – நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த, உழைத்துப் படைத்து உண்பவர்கள் நல்லவர்கள்; உத்தமர்கள்.

உழைத்தால்தான் உணவு என்ற சட்டம் வேண்டும் என்றான் ஜான் ஸ்மித்.

இந்தச் சட்டத்தை உலக நாடுகள் இயற்ற வேண்டும். அதற்கு நாம் எல்லோரும் கீழ்ப்படிய வேண்டும்.

அண்ணல் காந்தியடிகள் ‘உழைக்காமல் உண்பவர்கள் திருடர்கள்’ என்றார்.

 

வாழ்க்கையின் இயல்பே உழைப்புத்தான்! அறி கருவிகள், செயற் கருவிகளுடன் கூடிய, உடல் சார்ந்த வாழ்க்கையை உழைக்காமல் நடத்துவது யாங்ஙனம்?

மனிதனின் இன்றியமையாத் தேவை உணவு. அடுத்தது காதல்.

பழங்காலத்தில் உற்பத்தியுடன் கூடிய நாகரிகத் தொடக்கம் உழைப்பினாலேயே தொடங்கப் பெற்றது. காதல் வாழ்க்கையும் அப்படித்தான்!

சோம்பலுடனும் சோர்வுடனும் நூறு ஆண்டுகள் வாழ்வதைவிடப், பெருமுயற்சி கடினஉழைப்புடன் ஒருநாள் வாழ்ந்தால்கூடப் போதும்! உழைப்புடன் கூடிய வாழ்க்கை, சொர்க்கத்தின் கதவைக் கூடத் தட்ட உதவும்.

ஒவ்வொருவரும் எந்தவிதமான தூண்டுதலுமின்றி இயல்பாகவே உழைக்கும் உணர்வு பெறவேண்டும்.

என்று மனிதகுலத்துக்கு உழைப்பு ஜீவ சுபாவமாக அமைகிறதோ, அன்றே ‘சக்திக்கேற்ற உழைப்பு, தேவைக்கேற்ற ஊதியம்’ என்ற பொதுவுடைமைச் சமுதாயம் அமைய முடியும்.

உழைப்பின் சின்னமாகிய காய்த்துப் போன கைகளும் கால்களும் பெறவேண்டும். அதுவே, உழைத்தலைக் காட்டும் சின்னம்!

 

ஒருநாள் நபிகள் நாயகம், தம்மைக் காண வந்தவர்களுடன் கட்டித்தழுவியும், கைகளைப் பற்றிக் கண்ணில் ஒற்றியும் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் வழங்கிக் கொண்டிருந்தார்.

அப்படி வந்தவர்களுள் ஒருவரின் கையைப் பற்றிய அண்ணலார் நபிகள் நாயகம் நீண்ட நேரம் திரும்பத் திரும்ப அவர் கையைக் கண்களில் ஒற்றிக்கொண்ட தோடன்றி, கண்களில் நீர்மல்க நின்று கொண்டிருந்தார்.

 

மற்றவர்கள் காரணம் கேட்டபோது, ‘இவருடைய கைகளில் உழைத்துக் காய்த்துப்போன சுவடுகள் இருந்தன. அவை எனக்குப் பெருமகிழ்வைத் தந்தன’ என்று நபிகள் நாயகம் அருளிச் செய்ததாக அவர் வரலாறு கூறுகிறது.

 

மனிதன் இன்ப நுகர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் மட்டுமே திளைத்து வாழ்தல் கூடாது. இன்ப நுகர்ச்சியையும் மகிழ்ச்சியையும் வாழ்க்கையின் இலட்சியங்களாகக் கொள்ளக்கூடாது.

உழைப்பே வாழ்க்கையின் உயர் குறிக்கோளாக அமையவேண்டும். உழைப்பின் வழி, இன்ப நுகர்ச்சியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். இது உறுதி.

உழைப்பவர் உலகம் எளிதில் வெற்றி பெறும்

உழைப்பு, உடலுக்கு உறுதி சேர்க்கும். அறிவு வளர்ச்சிக்கும் உதவும். இந்த உலகில் பலவற்றிற்கு எல்லை உண்டு. ஆனால், அறிவுக்கும் ஆளுமை நிறைந்த உழைக்கும் சக்திக்கும் எல்லையே கிடையாது.

மூளை இயங்க, இயங்க அறிவு வளரும். உழைப்பு தொடர்ந்து இடையீடின்றி நிகழின் உழைக்கும் சக்தியும் வளரும்.

நம் ஒவ்வொருவருடனும் பிறப்பிலேயே கலந்திருப்பது உழைப்பாற்றல், உழைக்கும் சக்தி. உழைப்பதே மனிதப் படைப்பின் நோக்கம்.

கால்களையும் கைகளையும் மற்றப் பொறிகளையும் முறையாக உழைப்பில் ஈடுபடுத்தினால் எல்லையே இல்லாத அளவுக்கு உழைத்துக் கொண்டே இருக்கலாம்.

அறிவு பூர்வமாகவும், விருப்பத்துடனும், ஆர்வத்துடனும் உழைத்தால் களைப்பு வாராது. மாறாகக் களிப்புணர்வே தோன்றும். ஓய்வு எடுக்கும் எண்ணமே தலைகாட்டாது.

உழைப்பாளிக்கு ஓய்வு, வேலையை மாற்றிக் கொள்வதுதான்.

 

நம்முடைய வாழ்நாளின் குறிக்கோள் இன்னதென நிர்ணயம் செய்துகொண்டு, உறுதியுடன் தொடர்ந்து உழைக்க வேண்டும். அப்படி ஒரு குறிக்கோளுடன், ஒரு துறையில் வாழ்நாள் முழுதும் உழைத்தால்தான் அந்தக் குறிக்கோள் கைகூடும்.

 

நமது வாழ்க்கையும் உன்னத நிலையை அடையும். இங்ஙனம், துறைதோறும் நின்று உழைப்பவர்கள் எண்ணிக்கைக் கூடினால் நாடு வளரும். உழைப்பவர் உலகம் எளிதில் வெற்றி பெறும்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.