நாள்களின் நகர்வு முன்னோக்கிச் செல்ல
நாகரீக பகிர்வு பின்னோக்கித் தள்ள
வறுமைக் கோட்டில் பயணத்தில் உள்ள
வதைப்படும் மானுடம் வளருமோ மெல்ல…
ரோசா மலரின் உதிரத் துளியை
லேசா உறிஞ்சி அத்தர் செய்து
ராசா மக்கள் நுகர்ந்து வாழ
காசும் பார்க்கும் கனவான் முதலை..
உழைக்கும் மானுட வர்க்கத்தின் நிலையும்
உணர்ந்தோர் அறிவர் இதுவே (வெ)ன்று
அத்தர் வாசம் மேனியில் வீச
அத்துணை வியர்வையும் விலையாய் கொடுப்பர்…
பூவின் உள்ளே ஊறிய தேனை
புயலாய் வந்து களவாடும் தேனீ
நிழலாய் மனிதன் நிசமாய் எடுத்து
முறையாய் முழுதும் பக்குவப் படுத்தி
நிறைவாய் அதனைக் கொடுத்து விட்டாலும்
விரைவாய் அதனுள் கலப்படம் செய்து
நுரையாய் நம்மிடம் குறையாய் சேர்ப்பர்…
வரகும் சாமையும் வளமாய் விளையும்
விறகும் கொண்டே மணமாய் சமைப்பர்
மரபும் சற்றே மாறியும் போக
அடைப்பட்டு போனது நெகிழியின் வலைக்குள்
மரிக்கும் நிலையில் மானுடன் தேட
மலைத்துப் போனான் உரைத்திடும் விலையில்…
நெடுவயல் நீர்ப்பாய்ச்சு நெற்கதிர் பாலூற
கடும்பணி புரிந்திடும் மருத நிலத்தோனின்
நெடுந்துயர் நீங்கிடும்
மனதுக்கு மருந்துண்டோ
உபாதைகள் உதிர்ந்தோட உபாய மொன்றுரைப்பீரோ…
கணுக்கால் கடுகடுக்க கலம்மீது நெடும்பயணம்
கரத்தினில் பிரிந்து கடலினில் விரிந்திடும்
வலைதனில் சிக்கிடும் கயலினைக் கண்டிட்டால்
வாடிய முகத்தினில் வாசமலரும் மலர்ந்திடும்
கரையை சேர்ந்திடில் கனவான் கூட்டமோ
விலையும் உரைக்கும் கயலின் நிலைக்கு..
உள்ளங் கையும் உருமாறிப் போகும்
எல்லை யில்லா உழைப்பின் விளைவால்
உழைக்கும் வர்க்கம் மறுத்து நின்றால்
பிழைக்கும் வழியும் அறுந்து போகும்
வையம் வாழ உழைத்திடும் உறவை
வாழ்த்துவோம் நாமும் இத்திரு நாளில்…
க.வடிவேலு
தகடூர்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!