நீருடன் ஓர் உரையாடல் 9 – உவர் நீர்

நாளை திங்கட்கிழமை.

‘நீர் தொழில்நுட்பவியல்’ குறித்து பாடம் எடுக்க வேண்டியிருந்தது. அதற்கான முன் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.

குறிப்பாக, நீரில் இருந்து உப்புக்களை பிரித்தெடுக்கும் முறைகள் பற்றிய தகவல்களை வாசித்துக் கொண்டிருந்தேன்.

“வேலையா இருக்கியா? தண்ணி லாரி வந்திருக்கு. இரண்டு குடம் மட்டும் புடிச்சிட்டு வர்றீயா?” என்று அம்மா கேட்டார்.

“தோ, வர்றேன் மா” என்று கூறி விரைந்து சென்றேன்.

தெருவில் தண்ணி லாரி நின்று கொண்டிருந்தது. பக்கத்து வீட்டு நண்பர் ஒருவர் மட்டும் இரண்டு குடங்களை வைத்துக் கொண்டிருந்தார்.

நானும் இரண்டு குடங்களை எடுத்துச் சென்று தண்ணீரை வாங்கிக் கொண்டு வந்தேன். நீர் நிறைந்த குடங்களை சமையலறையில் வைத்துவிட்டு மீண்டும் எனது அறைக்கு திரும்பினேன்.

வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்திருந்ததால், எனக்கு வியர்த்துக் கொட்டியது. தாகம் எடுக்கவே, மீண்டும் சமையலறைக்குச் சென்று ஒரு குவளையில் குடிநீர் எடுத்துக் கொண்டு வந்தேன்.

சிறிதளவு நீரைக் குடித்துவிட்டு, குவளையை அருகில் வைத்தேன். மீண்டும் புத்தகத்தை எடுத்து வாசிக்க தொடங்கினேன். நெற்றியிலிருந்து வியர்வை வழிந்து புத்தகத்தில் சொட்டியது.

‘அடடா, வியர்வ சொட்டிடுச்சே’ என்று நினைத்தவாரே, புத்தகத்தில் இருந்த வியர்வை துளியை துடைத்தேன். பின்னர், மீண்டும் வாசிக்க தொடங்கினேன்.

‘Brackish water’ என்ற தலைப்பில் தகவல்கள் இருந்தன.

“வெயில் ரொம்ப அதிகமோ?” குவளையில் இருந்த நீர் கேட்டது.

வியர்வையை துடைத்தவாறே குவளையை பார்த்தேன்.

“சார் நான் தான். வெயில் ரொம்ப அதிகமா?” என்று கேட்டது நீர்.

“ரொம்ப ரொம்ப அதிகம்” என்றேன்.

“இம், என்ன பண்றீங்க?”

“படிச்சிக்கிட்டு இருக்கேன்”

“எத?”

“Brackish water –ரைப் பத்திதான்.”

“அப்படீன்னா?”

“Brackish water-ன்னா உவர் நீர்”

“சரிங்க சார். உவர் நீர்ன்னா என்னன்னு சொல்லுங்க.”

“உவர் நீர் அப்படிங்கற‌து நன்னீரும், கடல் நீரும் கலக்கும் இடத்துல இருக்கும் நீர். இதுல நன்னீரை விட உப்புத் தன்மை அதிகமாகவும், கடல் நீரை விட உப்புத் தன்மை குறைவாகவும் இருக்கும்.”

“ஒ! ஓ! முகத்துவாரப் பகுதியில இருக்கும் நீர சொல்றீங்களா?”

“ஆமாம்”

“சரிங்க, உவர் நீருல என்னென்ன உப்புக்கள் இருக்கு.”

“பொதுவா உவர் நீருலையும் சோடியம் குளோரைடு உப்பு தான் இருக்கும். இதோட பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், போன்றவையும் குறைஞ்ச அளவு இருக்கலாம்.”

“அப்படியா! இந்த உப்புக்கள் எவ்வளவு அளவு இருக்கும்?”

“இம்ம், ஒரு லிட்டர் உவர் நீருல 0.5 முதல் 35 கிராம் உப்புக்கள் இருந்தா, அத உவர் நீருன்னு சொல்லுவாங்க. அதுவே, ஒரு லிட்டர் நீருல 30 கிராமுக்கு மேல, உப்புக்கள் இருந்தா, அத அடர் உவர் நீருன்னு சொல்லுவாங்க. ஆங்கிலத்துல இதுக்கு பேரு Saline.”

“ஒ…ஒ… என்னோட கரைஞ்சிருக்கும் உப்புக்கள் மற்றும் அவற்றோட செறிவ வச்சு, எனக்கு புதுப் புது பேர வச்சிருக்கீங்க.”

“ஆமாம், கடின நீர் மாதிரித்தான்; இந்த உவர் நீரையும் பெரும்பாலான தொழிற்சாலைகளில் பயன்படுத்த முடியாது, ஏன்னா உவர் நீருல இருக்கும் உப்புக்கள், கருவிகளோட செயல் திறனை குறைக்கும்.”

“ஒ…ஒ…”

“அதோட, நாங்களும் உவர் நீர பயன்படுத்த முடியாது.”

“ஆனா, உவர் நீருல சில உயிரினங்கள் இருக்குமே.”

“ஆமா.. சில வகை மீன்களும் செடிகளும் உவர் நீருல வாழும் தன்மைக் கொண்டவை. முதலைகள் கூட வாழும்.”

“சிறப்பு.”

“இப்ப தான் நினைவுக்கு வருது. பண்டைய காலத்துல, கிட்டத்தட்ட ஐம்பது மில்லியன் வருடங்களுக்கு முன்னாடி, ஆர்க்டிக் சுறாக்கள் உவர் நீருல வாழும் தன்மை கொண்டிருந்தாக விஞ்ஞானிகள் கண்டுபிச்சிருக்காங்க. முக்கியமான விஷயம் என்னன்னா, இப்ப இந்த வகை சுறாக்கள் அதிக அளவு உப்புத்தன்மை கொண்ட கடல்நீருல தான் வாழுதுங்களாம்.”

“சரி சார், உவர் நீரால வேற என்ன நன்மைகள் இருக்கு.”

“இருக்கே, முன்னாடி சொன்னபடி, கடல்நீரை விட உவர் நீருல உப்புக்கள் குறைவாகத் தான் இருக்கும். இதனால, உவர் நீர எளிதில குடிநீராக சுத்திகரித்து பயன்படுத்த முடியும்.”

“நல்லது சார்.”

“இம், இன்னொரு முக்கிய பயனும் இருக்கு. அத சொல்லட்டுமா?”

“சொல்லுங்களேன். என்னால எவ்வளவு பயன்கள் இருக்குன்னு தெரிஞ்சிக்கிறேன்.”

“அமெரிக்கா, இஸ்ரேல், இத்தாலி உள்ளிட்ட சுமார் 27 நாடுகள்ல உவர் நீர விவசாயத்துக்கும் பயன்படுத்துறாங்களாம். இதனால நன்னீர் பற்றாக்குறை இருக்கும் இடங்கள்லையும் விவசாயம் செய்வதற்கு வழி ஏற்பட்டிருக்கு.”

“அப்படியா!”

“ஆமாம். ஆனா, குறுகிய கால நீர்ப்பாசனத்துக்கு மட்டும் உவர் நீரை பயன்படுத்துனா தான், பயிர் விளைச்சல் அதிகமாகவும் தரமாகவும் இருக்குமாம். இதுவே, நீண்டகால பாசனத்துக்கு உவர் நீர பயன்படுத்தும் போது, பயிர்களின் வேரில் உப்பு அதிகமா சேருதாம். இதனால, பயிர் விளைச்சல் குறைஞ்சு, நிலத்தின் உப்புத்தன்மையும் அதிகமாகுதாம்.

உதாரணத்துக்கு சொல்லனும்னா, சர்க்கரை வள்ளிக்கிழங்கு செடியின் வேர் அதிக அளவு சோடியம் குளோரைடு உப்பை உறிஞ்சிக்கிறதால, அந்தச் செடியோட இலைகளின் வளர்ச்சி குறையுதாம். அத்தோட, அவற்றின் இலைகள் மற்றும் வேர்களின் எடையும் குறையுதாம்.”

“அடடா” என்று வருத்தப்பட்டது நீர்.

“இன்னொரு செய்தியும் இருக்கு. சுமார் 20 ppm அளவு கரைந்த ஆக்ஸிஜன, உவர் நீரில் செறிவூட்டி, விவசாயத்துக்கு பயன்படுத்தினா, அது விதை முளைத்து வளர்வத குறிப்பிடத்தக்க அளவு ஊக்குவிப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிருக்காங்க.”

“நல்லது சார். எனக்கு ‘உவர் நீருன்னு’ பேரு இருக்குன்னு இன்னிக்கு தெரிஞ்சிக்கிட்டேன். நன்றி” என்றுக் கூறியது நீர்.

எனக்கு மீண்டும் தாகம் அதிகரிக்கவே, குவளையில் மீதமிருந்த நீர் முழுவதையும் குடித்துவிட்டேன். பின்னர் எனது வாசிப்பை தொடர்ந்தேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

இதைப் படித்து விட்டீர்களா?

நீருடன் ஓர் உரையாடல் 8 – கடின நீர்

நீருடன் ஓர் உரையாடல் 10 – வெந்நீர்

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.