உஷ்!
சப்தமெழுப்பாதீர்
அமைதி காத்திடுவீர்…
ஒன்றல்ல இரண்டல்ல
லட்சக் கணக்கில்
விரல்தொட்ட வாக்குகளை
வயிற்றில் தாங்கும்
இ.வி.எம்.களைத்
தன் வயிற்றில்
சுகமான சுமையென
சுமப்பதே சுகமென
சுமந்து நிற்கும்
சீல் கொண்ட பெட்டிகள்…
சூல் கொண்ட பெண்ணெனப்
பூட்டிய அறைதனில்
துப்பாக்கி ஏந்திய
காவற்படை தரும்
மூன்றடுக்குப் பாதுகாப்பில்
கண்மூடி மௌனமாய்
காத்திருக்கு பிரசவிக்க...
தொந்தரவு செய்யாதீர்
தூங்கட்டும் அவைகள்...
தான் சுமப்பது
நல்ல வோட்டுக்களா
கள்ள வோட்டுக்களா
நோட்டாவா எதுவென்று
அவை ஏதும் அறியாது...
நேரம் வந்துவிட்டால்
பிரசவித்து முடித்துவிட்டு
மூலையில் முடங்கிவிடும்
அதுவரை அவையெலாம்
அமைதியாய் இருக்கட்டும்
ஜுன் நான்கு பிரசவதேதி
அதற்குள் பற்றியெரியுது
கருத்துக் கணிப்புகள்
கருத்து மோதல்கள்
ஆரூடங்கள் சாமியாடல்கள்
கிளி ஜோசியங்கள்
வார்த்தைச் சாடல்கள்
வரம்பற்ற பேச்சுக்கள்!
அடுத்த பிரதமர் யாரென
பார்க்கக் காத்திருக்கு
பாரதம் மட்டுமின்றி
பாரே காத்திருக்கு
நாற்பதில் நமக்கு
எத்தனை வரவிருக்கு
நாம் விரல் நீட்டும் நபர்
நாடாள வழிவகுக்க
வந்திடுமோ வெற்றிதான்
ஜெயித்திடுமோ
நம் தந்திரம்தான்!
வாரிக் கொடுத்தோமே
வாக்களிக்க மக்களுக்கு
சின்னம் பார்த்து வாக்காளன்
சிந்திக்காமல் போட்டிருந்தால்
சிந்தாமல் சிதறாமல்
வாக்கு வாங்கும் நம்கட்சி
மத்தியில் அதிகாரம்
இழுபறியாய் ஆகிவிட்டால்
நம் காட்டில் பெருமழைதான்
ஆட்சியைக் கைப்பற்ற
ஆலாய்ப் பறக்கும் கட்சிகள்!
அது காவியோ... கதரோ...
நமக்கது தூதுவிடும்
நம்மிடம் கெஞ்சும்
பணம் பதவிகள் தேடிவரும்
லஞ்சம் மணற்கொள்ளை
சுரண்டல் கடத்தல்
பணப்பறிமாற்றமென
நீதிமன்ற வழக்குகள்
இல்லாமல் நீர்த்துப் போகும்
நாங்கள் புனிதராவோம்!
சிவகாசி வெடிகளெல்லாம்
காத்திருக்கு வெடிப்பதற்கு
டாஸ்மாக் சரக்கெல்லாம்
பெட்டிகளில் காத்திருக்கு!
ஜூன் நாலாம் தேதி...
வானத்துச் சூரியன்
விபரமாய்ச் சிரித்திருக்க
திருவிழாக் கொண்டாட
காத்திருக்கு கூட்டமொன்று!
வாக்கைச் செலுத்தும் வரை
வாக்காளன் குலசாமி!
விரலில் மைவைத்து
வாக்கைச் செலுத்திவிட்டு
வெளிவரும் வாக்காளன்
குலசாமி யினியில்லை
காற்றில் பறக்கும் காகிதமே!
பெருவாரி வெற்றிதனைப்
பெற்றுவிடும் கட்சியது
அரங்கேற்றும் ஆர்ப்பாட்டம்
சொல்லவே முடியாது
கட்சியின் அல்லக்கைகள்
ஆடும் ஆட்டத்தினை
ஆத்தாடி ஆத்தா
சொல்லி முடிக்க முடியாது
அன்றுபோல் இன்றில்லை...
சத்தியம் சாகாத
ஜனநாயகத் தேர்தலது
ஆனால் இன்றோ
பணத்தால் வெற்றி ஈட்டும்
பணநாயகத் தேர்தலிது!
ஆத்திரம் காட்டாது
அடக்கியே எழுதுகிறேன்
ஆனாலும் வார்த்தைகள்
அடாவடியாய்... சரவெடியாய்...
எவரையும் சாடும்
நோக்கமில்லை எனக்கு
ரௌத்திரம் பழகென
முண்டாசுக் கவிஞன்
சொன்னது
எனக்கும் சேர்த்துத்தான்!
காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்