ஊசியிலைக் காடுகள் தைகா நில வாழிடத்தில் முக்கிய பிரிவினைச் சார்ந்தது. இது எப்போதும் பசுமையாக இருக்கும். தைகா என்ற சொல்லுக்கு ரஷ்ய மொழியில் சதுப்பு ஈரக் காடுகள் என்பது பொருளாகும்.
தைகாவில் காணப்படும் மரங்கள் பொதுவாக ஊசிபோன்ற இலையைப் பெற்றிருக்கின்றன. எனவே இவை ஊசியிலைக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இவ்வாழிடத்தில் உள்ள மரங்களானது சிறிய ஊசியான இலைகளைக் கொண்டு குச்சி போன்று இருப்பதால் இது சிறுகுச்சிகளின் நிலம் என்றும் அழைக்கப்படுகிறது.
இவ்வாழிடமானது புவியின் நிலப்பரப்பில் 17 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இவ்விடம் குளிராகவும், உயர்ந்த மலைப்பகுதிகளையும் கொண்டுள்ளது.
இங்கு நீண்ட மிகவும் குளிரான குளிர்காலமும், குறுகிய குளிர்ந்த கோடை காலமும் நிலவுகின்றன. உலகில் அன்டார்டிக்காவை அடுத்து அதிகமான குளிர் இவ்வாழிடத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.
தைகாவின் அமைவிடம்
தைகாவானது புவியின் வடஅரைக்கோளத்தில் தூந்திராவிற்கும், மிதவெப்பமண்டல இலையுதிர் காடுகள் மற்றும் புல்வெளிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.
வடஅமெரிக்காவில் அலகாஸ்கா, கனடா நாடுகளிலும், ஐரோப்பாவில் பின்லாந்து, நார்வே, ஸ்வீடன் நாடுகளிலும், ஆசியாவில் ரஷ்யா, சைபீரியா, வடகிழக்கு சீனா மற்றும் மங்கோலியா பகுதிகளில் டைகா காணப்படுகிறது.
தைகாவின் காலநிலை
தைகாவில் காலநிலையானது நீண்ட மிகவும் குளிரான குளிர்காலத்தையும், குறுகிய குளிர்ந்த கோடைகாலத்தையும் கொண்டுள்ளது.
இங்கு குளிர்காலத்தில் வெப்பநிலை (ஆறு மாதங்களுக்கு) உறைநிலைக்கு கீழே இருக்கிறது. கோடைகாலத்தில் 50-100 நாட்கள் மட்டுமே வெப்பநிலை உறைநிலைக்கு மேலே இருக்கிறது.
குளிர்காலத்தில் பகல்பொழுது குறைவாகவும், கோடைகாலத்தில் பகல்பொழுது நீண்டும் இருக்கும்.
இங்கு மழைப்பொழிவு குளிர்காலத்தில் பனியாகவும், கோடையில் மழையாகவும் இருக்கும். இவ்வாழிடத்தில் மழைப்பொழிவானது 25-75 செமீ வரை இருக்கிறது.
இவ்வாழிடத்தில் வெப்பநிலையானது -5 டிகிரி முதல் +5 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இங்கு கோடையில் பனியானது உருகி தரையானது மிகவும் ஈரப்பதத்துடன் காணப்படும்.
தைகாவின் புவியியல் கூறுகள்
இவ்வாழிடத்தில் சில பகுதிகளில் உறைமண் காணப்படுகிறது. உறைமண் என்பது மேற்புறமண்ணிற்கு கீழே சில அடி ஆழம் வரை மண்ணானது ஆண்டு முழுவதும் உறைந்த நிலையிலேயே இருப்பதைக் குறிக்கும்.
சில இடங்களில் தரைப்பகுதியானது பாறைகளைக் கொண்டிருக்கும். இங்கு உறைமண் மற்றும் பாறைகள் இல்லாத இடங்களில் காணப்படும் மண்ணானது அமிலத்தன்மை கொண்டு இருக்கிறது.
தைகாவின் உயிரினங்கள்
இங்கு நிலவும் காலநிலைக்கு ஏற்ப வாழும் தகவமைப்புகளை உயிரினங்கள் பெற்றுள்ளன. தாவரங்கள் ஊசியிலைகளைப் பெற்றும், விலங்குகள் அடர்ந்த ரோமங்களுடன் கூடிய தோலினைக் கொண்டும் இருக்கின்றன.
தைகாவின் தாவரங்கள்
தைகாவில் பசுமை மாறா ஊசியிலைக் காடுகள் காணப்படுகின்றன. இம்மரங்கள் எப்பொழும் இலைகளை உதிர்ப்பதில்லை.
குறைந்த சூரியஒளியை உடைய இவ்வாழிடத்தில் இலைகள் அதிகசூரிய ஒளியை உட்கவர்ந்து தங்களுக்குத் தேவையான உணவினை தயார் செய்து கொள்ள அடர்ந்த பச்சைநிற இலைகளை கொண்டிருக்கின்றன.
இவ்வாழிடத்தில் நிலவும் பனிப்பொழிவு மற்றும் காற்று ஆகியவற்றால் கிளைகளுக்கு சேதம் ஏற்பாடமல் இருக்க இங்குள்ள மரங்கள் முக்கோண வடிவ உருவமைப்பைக் கொண்டுள்ளன.
நீராவிப்போக்கினைக் குறைக்கவும், ஆற்றலை சேமிக்கவும் இங்கு காணப்படும் தாவரங்களில் இலைகள் குறுகியும், நீண்டும், மெழுகுபூச்சு மேற்பரப்பினையும் கொண்டுள்ளன.
பைன், பிர், ஸ்ப்ரூஸ், சிடார், லார்ச் போன்ற மரங்கள் தைகாவில் அதிகளவு காணப்படுகின்றன. உறைமண்ணும், பாறைகளும் உள்ள இடங்களில் மோஸ், லிச்சென்ஸ், ஆல்காக்கள், பூஞ்சைகள் உள்ளிட்டவைகள் காணப்படுகின்றன.
தைகாவின் விலங்குகள்
இங்குள்ள விலங்குகளில் சில குளிர்காலத்தில் வேறு இடங்களுக்கு சென்றுவிடுகின்றன. ஒரு சில நீண்ட உறக்கத்தினை மேற்கொள்கின்றன. வேறு சில மேல்தோலின் நிறத்தினை மாற்றி வாழ்க்கையைத் தொடர்கின்றன.
இங்குள்ள விலங்குகள் இவ்விடத்தில் நிலவும் குளிரினைத் தாங்கும் பொருட்டு அடர்ந்த ரோமங்கள் நிறைந்த தோலினையும், இறகுகளையும் கொண்டுள்ளன.
சில விலங்குகள் மரத்தில் பிடித்து ஏறுவதற்கு வசதியாக கூரிய நகங்களைக் கொண்டுள்ளன. சில விலங்குகள் பனிகளில் வழுக்காமல் நடக்கும் பொருட்டு அகன்ற பாதங்களைக் கொண்டுள்ளன.
கொறிக்கும் அணில்கள், கடமான், ஆந்தைகள், கழுகுகள், கரடிகள், லின்க்ஸ், சைபீரிய புலி, காட்டு பன்றிகள், நரிகள், மிங்ஸ், ரெயின்டீர், சாம்பல் ஓநாய்கள், எல்க் மான்கள், வெளவ்வால்கள், மரங்கொத்திகள், பனிமுயல்கள் ஆகியவை தைகாவில் காணப்படுகின்றன.
தைகாவிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள்
தைகாவின் வாழ்க்கைச் சூழலானது காலநிலை மாற்றம் மற்றும் மனிதனின் செயல்பாடுகளால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள விலங்குகள் அவற்றின் அடர்ந்த ரோமங்களுடன் கூடிய தோலுக்காக வேட்டையாடப்படுகின்றன.
தைகாவில் உள்ள மரங்கள் பேப்பர், கார்போட்டு உள்ளிட்டவைகளின் தயாரிப்பிற்காக அதிகளவு அழிக்கப்படுகின்றன.
சில இடங்களில் மரங்கள் நீர்மின்சாரம் தயாரிக்க, எரிஎண்ணெய் எடுக்க என மனிதனின் தேவைகளுக்காக முற்றிலும் அழிக்கப்படுகின்றன.
இவ்வாழிடத்தில் நிலவும் காலநிலை மற்றும் மண்ணின் தன்மை காரணமாக இங்கு மீண்டும் மரத்தினை வளர்ப்பது என்பது பெரும் சவாலாகவே உள்ளது.
மரங்கள் அழிக்கப்படுவதால் மண்வளம் பாதிக்கப்படுகிறது. மேலும் அவ்விடத்தில் வாழும் உயிரினங்களின் வாழ்வாதாரமும் பாதிப்படைகிறது.
எரிஎண்ணெய் எடுப்பதற்கான மனிதனின் செயல்பாடுகளினால் இங்கு காற்று மாசடைந்து அமில மழை பெய்து தைகாவினை பாதிப்படையச் செய்கிறது.
இவ்விடத்தினை தாயகமாக கொண்டு இல்லாத சில உயிரினங்கள் இவ்விடத்தினை ஆக்கிரமித்து இவ்விடத்தின் உயிரினங்களை பாழ்படுத்துகின்றன.
எடுத்துக்காட்டாக பட்டை வண்டு தைகாவில் உள்ள ஸ்ப்ரூஸ் மரப்பட்டையில் முட்டையிட்டு அம்மரத்தினை பாதிப்படையச் செய்து ஸ்ப்ரூஸ் மரவகையினை முற்றிலும் அழித்து விடுகின்றன. இவ்வாறாக பல்லாயிர ஏக்கர் தைகா காடுகள் அழிக்கப்பட்டு உள்ளன.
தைகாவைப் பாதுகாக்க நாம் செய்யவேண்டியவை
எங்கோ இருக்கும் தைகாவினை இங்கு இருக்கும் நாம் எவ்வாறு பாதுகாக்க முடியும் என்ற கேள்வி வருகிறதா?.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேப்பர், கார்போர்டு அட்டைகள் போன்றவற்றை தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.
பேப்பர், கார்போர்டு அட்டைகள் உள்ளிட்டவைகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.
நம் சுற்றத்தில் உள்ளோருக்கும், குழந்தைகளுக்கும் பேப்பர், கார்போர்டுஅட்டைகள் உள்ளிட்டவைகள் தைகாவில் இருந்து பெறப்படுகின்றன என்றும், ஆதலால் நாம் அவற்றை சரியானஅளவில் பயன்படுத்தவேண்டும் என்பதை உணர்த்தவேண்டும்.
இயற்கைவளம் மிகுந்த இப்பூமியை காப்பது நமது கடமை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து நம் அன்றாடச் செயல்பாடுகளைச் செய்து இயற்கையை நம்மால் இயன்றவரை காப்பாற்றுவோம்.