ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழியை வயதான பெரியவர் ஒருவர் கூறுவதை வாத்துக் குஞ்சு வானதி கேட்டது. இரையைத் தின்பதை விட்டுவிட்டு பெரியவர் சொல்வதை கூர்ந்து கேட்கலானது.
கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் “இந்தப் பழமொழி ஏதோ தனது சொந்தப் பிள்ளையை கவனிக்காது மற்றவர்களின் பிள்ளைகளை வளர்த்தால் போதும் தனது பிள்ளை தாமாகவே வளரும் என்று கூறுவது போல் உள்ளதல்லவா?” என்றார்.
அதற்கு அப்பெரியவர் “இதன் உண்மையான பொருள் வேறு விதமானது. அதாவது நமது நாட்டில் மாமியார் மருமகளுக்கு இடையே பிரச்சினைகள் காலம் காலமாக இருந்து வருகிறது.
சில இடங்களில் மாமியார் மருமகளைக் கொடுமைப்படுத்தவும் செய்கின்றனர். இந்தப் பழமொழி மருமகள் கொடுமையை நிறுத்த வேண்டும் என்பதற்காக கூறப்பட்ட ஒன்றாகும்.
மாமியார் மருமகள்களுக்கிடையே ஏற்படுகின்றன பிரச்சினைகளை ஒழித்து விட நம் முன்னோர்கள் எண்ணினா. அதற்காக அவர்கள் இந்தப் பழமொழியின் மூலமாக ஒருவிதமான அறிவுரையை வழங்கிச் சென்றுள்ளனர்.
அதாவது இப்பழமொழியில் தன்பிள்ளை என்பது தன் மகனைக் குறிப்பிடுகிறது. ஊரான் பிள்ளை என்பது கைப்பிடித்த மற்றவர் பெற்றெடுத்த மகளை அதாவது மருமகளை குறிக்கிறது.
பிறர் பிள்ளையாகிய மருமகளை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளையாகிய மகன் தானே வளர்வான் என்பதே இந்தப் பழமொழி கூறும் உண்மையான கருத்தாகும்.” என்று கூறினார்.
இதனைக் கேட்ட வாத்துக் குஞ்சு வானதி மிக்க மகிழ்ச்சியுடன் காட்டை நோக்கி சென்றது. வேகமாக காட்டை அடைந்த வாத்துக் குஞ்சு வானதி நேரே காக்கைக் கருங்காலன் கூடு இருக்கும் இடத்திற்கு சென்றது.
காக்கை கருங்காலன் வாத்துக் குஞ்சு வானதியை தூரத்தில் இருந்து வரும்போதே கவனித்தது. வாத்துக் குஞ்சு அருகில் வந்தவுடன் “வா வாத்துக் குஞ்சு வானதி. என்ன விசயம்? இவ்வளவு வேகமாக வருகிறாய்?” என்று கேட்டது.
அதனைக் கேட்ட வாத்துக் குஞ்சு வானதி “தாத்தா இன்றைய கூட்டத்தில் பழமொழி கூறும் வாய்ப்பினை எனக்கு தரவேண்டும்.” என்று கூறியது.
காக்கை கருங்காலனும் “நீ இன்றைக்கு என்ன பழமொழி பற்றிக் கூறப்போகிறாய்?” என்றது.
அதற்கு வாத்துக் குஞ்சு வானதி தான் கேட்ட பழமொழியையும் அதற்கான விளக்கத்தையும் விளக்கியது. அதனைக் கேட்ட காக்கை கருங்காலன் “சபாஷ் உனது பழமொழியும் அதற்கான விளக்கமும் மிக அருமை. நீயே இன்றைக்கான பழமொழியைக் கூறு” என்றது.
பின் காக்கை கருங்காலனும், வாத்துக் குஞ்சு வானதியும் வட்டப்பாறையினை நோக்கி பறந்தன. வட்டப்பாறையில் எல்லோரும் கூடியிருந்தனர்.
காக்கை கருங்காலன் கூட்டத்தினரைப் பார்த்து “என் அருமைக் குழந்தைகளே. இன்றைக்கான பழமொழியை நம் வாத்துக் குஞ்சு வானதி உங்களுக்கு கூறப் போகிறாள்” என்று கூறியது.
வாத்துக் குஞ்சு வானதியும் எழுந்து “எல்லோருக்கும் வணக்கம். நான் இன்றைக்கு “ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழியைப் பற்றிக் கூறப்போகிறேன்” என்று தான் கேட்டறிந்த அனைத்தையும் விளக்கிக் கூறியது.
முயல் முத்தண்ணா “வாத்துக் குஞ்சு வானதி நீ கூறிய பழமொழியும் அதற்கான விளக்கமும் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்” என்றது.
காக்கை கருங்காலன் கூட்டத்தினரைப் பார்த்து “என் அருமைக் குழந்தைகளே. நாளை பழமொழியை கூறாதவர்கள் பழமொழி பற்றிக் கூறுங்கள். இப்போது எல்லோரும் செல்லுங்கள்” என்று கூறி வழியனுப்பியது.
– இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942
மறுமொழி இடவும்