வளைகுடா நாடான எமிரேட்டில் ஒரு கம்பீரமான அடுக்குமாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் 201-வது பிளாட்டில் ஸ்ரீலங்கன் லேடி சந்திரிகா அன்று காலை முதல் பதட்டத்துடனேயே இருந்தாள். அவள் வயது 32.
நல்ல திடகாத்திரமான அழகி. சிங்கள ஜீன். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர் ஹோஸ்டஸ் பர்சனாலிட்டி. பெரிய ஆஸ்பத்திரியில் நர்சிங் சூப்பரெண்ட் வேலை. அவள் கணவன், மகள் இலங்கை வாசம்.
‘இங்கிருந்து போகிறோமே’ என்ற (மெலன்கலி) உணர்வுடன் வீட்டை சுற்றும் பார்த்தாள். அன்றிரவு, தான் பல வருடங்கள் வாழ்ந்த நாட்டைவிட்டு நிரந்தரமாக போகப் போகிறாள்.
இலங்கையில் அவள் குடும்பத்துடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கப் போகிறாள். ஆனால் பயணப்படுவதற்கு முன் அவள் ஒரு வேலையை கட்டாயம் முடிக்க வேண்டும்.
இன்னும் சிறிது நேரத்தில் டெஸ்மாண்ட் இங்கே வந்து விடுவார். டெஸ்மாண்ட் வயது 40; மனைவியை இழந்தவர்; ‘கோல்ட் சூக்’கில் ‘லங்கன் ஜூவல்லர்ஸ்’ என்று மிகப்பெரிய ஜூவல்லரி அங்காடியின் முதலாளி; கோடீஸ்வரர்.
இலங்கையில் உள்நாட்டுப்போரால் வணிகத்தில் நலிந்த சந்திரிகாவின் கணவர் மகேஸ்வரனுக்கு சந்திரிகா மூலமாக பல லட்சம் உதவிகள் செய்து வந்தார்.
டெஸ்மாண்ட்டும் இலங்கைதான். துபாயில் பணம் திருப்பித் தராவிட்டாலும், இலங்கையில் அவளிடமிருந்து திரும்ப பெற்று விடலாம் என்ற தைரியத்தில் அவ்வப்போது ஏராளமாக கொடுத்து வந்தார்.
சந்திரிகாவின் அழகு, தனிமை, கம்பீரம் மற்றும் சுயேச்சை வாழ்க்கையை பயன்படுத்திக் கொள்ள அவர் விரும்பினார். அவள் அவர் தூண்டிலில் சிக்காது அவரை நேர்த்தியுடன் நடத்தி வந்தது அவரை மேலும் வெறி கொள்ள வைத்தது.
அரபு நாடுகளில் முறை தவறிய தாம்பத்திய உறவு கடும் தண்டனையை வரவழைக்கும் என்று உணர்ந்த சந்திரிகா, அவரிடம் ஜாடைமாடையாகச் சொல்லி அவரைச் சமாளித்து வந்தாள்.
ஒரு கட்டத்தில் அவர் எல்லை மீற ஆரம்பித்தார்.
ஒருபக்கம் லட்சக்கணக்கில் அவருக்குத் திருப்பித்தர வேண்டிய கடன், மறுபக்கம் அவர் மோகவலை அவளை கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியது.
‘இங்கு மட்டும் அல்ல, இலங்கை வந்ததும் அவர் நச்சரிப்பார்’ என்று தெளிந்த அவள் இதற்கு ஒரு முடிவு கட்ட விரும்பினாள்.
வேலையை ராஜினாமா செய்து விட்டு, இறுதி செட்டில்மெண்ட் பெற்று, விமான டிக்கெட்டையும் வாங்கி ஒரேடியாக கிளம்பத் தயாரானாள்.
இன்னும் சற்று நேரத்தில் டெஸ்மாண்ட் வருவார் என்பதால் அவருக்கு பிடித்த ப்ளாக் போரெஸ்ட் கேக்கும் ஆரஞ்சு ஜூசும் தயார் செய்து ஹாலில் டீபாய் மீது வைத்துவிட்டு வேலைக்காரியிடம், ‘நம்ம வீட்டுக்கு இப்போ ஒருத்தர் வருவார். அவரை கேக்கும் ஜூசும் சாப்பிடச் சொல். நான் உள்ளே வேலையாக இருக்கேன்னு சொல்லு’ என்று வேலைக்காரிக்கு உத்தரவிட்டு விட்டு உள்ளே வந்து படுக்கையில் அமர்ந்தாள்.
படுக்கையில் இருந்த பாஸ்போர்ட,; விமான டிக்கட், சூட்கேஸ் அவள் பதற்றத்தை சற்று அதிகமாக்கியது.
பொறுமையுடன் காத்திருந்தாள்.
அழைப்பு மணி ஒலித்தது.
உள்ளே வந்தவரை வேலைக்காரி வரவேற்று எஜமானி உத்தரவுப்படி, ‘உங்களை சாப்பிடச் சொன்னாங்க! அம்மா உள்ளே வேலையா இருக்காங்க. இப்போ வந்துருவாங்க!’ என்று சொல்லிவிட்டு கதவைச் சாத்திவிட்டு அவள் வீட்டுக்குப் புறப்பட்டாள்.
பொறுமையாக வெகு நேரம் படுக்கையிலேயே பதட்டத்துடன் சந்திரிகா காத்திருந்தாள். ‘நாளை இந்நேரம் இலங்கையில் இருப்போம்’ என்று ஆசவாசப்படுத்திக் கொண்டாள்.
அரைமணி நேரம் கழித்து, மெல்ல ஹாலுக்கு வந்தாள்.
எப்பொழுதும் ‘டிப்டாப்’பாக கோட்டும் சூட்டும் டையும் அணியும் டெஸ்மாண்ட் நாற்காலியில் உட்கார்ந்த நிலையிலேயே தலை பின்பக்கமாக சாய்ந்து பிணமாக அமர்ந்திருந்தார்.
ஜூஸ் கிளாஸ் கீழே கார்ப்பெட்டில் விழுந்து கிடந்தது. டீபாய் மீது சிதறிய கேக் துண்டுகள்.
‘டெஸ்மாண்ட் மாதிரி இல்லையே’ என்று சற்று உன்னித்து பார்த்த சந்திரிகா சிலையாக உறைந்தாள்.
கேக்கும் ஜூசும் கடுமையான ‘சயனைட்’ விஷம் தடவப்பட்டது என்று தெரியாமல் ஆசை ஆசையாக சாப்பிட்டு விட்டு இறந்து கிடந்தது, நேற்று இதே நேரத்திற்கு வந்து, “நாளை இதே நேரத்திற்கு வா” என்று அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கப்பட்ட, ‘டிப்டாப்’பாகக் கோட்டும் சூட்டும் டையும் அணிந்த பிரிட்டானிகா என்சைக்ளோபீடியா விற்பனை பிரதிநிதி!
ஜெ.ஜெயகுமார்
சென்னை
கைபேசி: 9884251887