திங்கட்கிழமை மாலை வேளை.
இந்திரா நகர் காவல் நிலையத்தில் நீள் இருக்கையில் பேரிளம் பெண்மணி ஒருவர் அமர்ந்து இருந்தார்.
அந்தக் காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் ராஜமாணிக்கம் அவர் அருகில் வந்தார். அவரிடம் பேசினார் .
“கமலா அம்மா! நீங்களா இங்கே? ஒங்க ஆசிரமத்துல எத்தனை ஆதரவு இல்லாத குழந்தைளை வளர்த்து காப்பாத்திகிட்டு இருக்கீங்க! இங்க எப்படி?“
பேரிளம் பெண்மணியின் முகத்தில் வெற்றுப் புன்னகை .
“நான் எங்க ஆசிரமத்துல பதின் பருவ சிறுமிகளை தவறான விஷயங்களுக்கு …. “ என்று இழுத்தார் அவர்.
“புரியுது மேடம்! யாரோ கொடுத்த தவறான புகார்னாலே இங்க வந்து இருக்கீங்க! கவலைப்படாதீங்க! ஏதோ கெட்ட நேரம். ஒருபோன் அழைப்பு வரும் பாருங்க. சாரின்னு சொல்லி ஒங்கள அனுப்பிடுவாங்க!” என்றார் ராஜமாணிக்கம் .
“என்ன ஜோசியர் மாதிரி சொல்றீங்க?” என்றார் கமலா அம்மாள்.
சற்று நேரத்தில் அந்தக் காவல் நிலையத்தின் உதவி ஆணையர் இளம்பெண் உஷா நிலையத்தின் உள்ளே வந்தார்.
அவர் நேராக தமது அறையை நோக்கிச் சென்ற போது அவரது கைபேசி ஒலித்தது. பேசி முடித்த அவர் கமலா அம்மாள் அருகே வந்தார் .
“சாரி அம்மா! தவறான பேர்வழி கொடுத்த தவறான புகார்னாலே ஒங்கள இங்கே..
சாரி! ஹோம் செகரட்டரி கீதா மேடம் போன் பண்ணாங்க. அவங்க ஒங்க ஆசிரமத்துல வளர்ந்தவாங்களாமே!
ஒங்கள இங்க கொண்டு வந்துள்ளதுக்கு மன்னிப்பு கேட்க சொன்னாங்க.
அவங்க நாளைக்கு ஒங்கள நேர்ல வந்து பார்க்கறேன்னு சொன்னாங்க!“ என்று கூறினார்.
கமலா அம்மாள் இருக்கையிலிருந்து எழுந்து நின்றார்.
“அம்மா ஒங்கள எங்க வெகிக்கள்ல அனுப்பி வைக்கறேன்ம்மா!” என்றார் உஷா .
“பராவாயில்லை மேம்! நான் ஆட்டோ பிடிச்சு போய்க்கறேன்.தாங்க்ஸ்!” என்று கூறிய கமலா அம்மாள், காவல் நிலையத்தின் வாசலை நோக்கிப் போகும் போது தம்முடைய இருக்கையில் அமர்ந்து இருந்த ராஜமாணிக்கத்தைப் பார்த்துப் புன்னகை பூத்தார்.
மதுரகவி சீனிவாசன்
சென்னை
கைபேசி: 9841376382
மின்னஞ்சல்: mkavi62@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!