எங்கெங்கு காணினும் சக்தியடா – தம்பி
ஏழு கடல் அவள் வண்ணமடா! – அங்குத்
தங்கும் வெளியினிற் கோடியண்டம் – அந்த
தாயின் கைப்பந்தென ஓடுமடா – ஒரு
கங்குலில் ஏழு முகிலினமும் – வந்து
கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ? – எனில்
மங்கை நகைத்த ஒலியெனலாம் – அவள்
மந்த நகையங்கு மின்னுதடா!
காளை ஒருவன் கவிச்சுவையைக் – கரை
காண நினைத்த முழு நினைப்பில் – அன்னை
தோளசைத்தங்கு நடம்புரிவாள் – அவன்
தொல்லறிவாளர் திறம் பெறுவான் – ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே – இந்த
வைய முழுவதும் துண்டு செய்வேன் – என
நீள இடையின்றி நீ நினைந்தால் அம்மை
நேர்படுவாள் உன்றன் தோளினிலே!’
– பாவேந்தர் பாரதிதாசன்