எங்கே போகிறோம்? முடிவு செய்யுங்கள்!

எங்கே போகிறோம்? முடிவு செய்யுங்கள்! என்ற இக்கட்டுரை, எங்கே போகிறோம் என்னும் நூலில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் எழுதிய சுதந்திர தினவிழாச் சிந்தனைகள் என்னும் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

அறிவியல், நாட்டுக்கு இன்றி அமையாதது. அறிவியலும், ஆன்மிகமும் முரண்பட்டதல்ல.

ஆன்மிகமும் ஒரு அறிவியல்தான்.

அறிவியல் என்பது வளரும் உலகத்தை, நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை, நம்மைச் சுற்றியிருக்கக்கூடிய சமூகத்தை, நமக்குப் பயன்படுத்திக் கொள்வது, வளர்ப்பது, வாழ்வது, என்பதுதான்.

நம்முடைய பொருளாதாரம் செழிப்பாக இருக்க வேண்டும். கடன் வாங்கிய காசு கையில் புரளலாம். ஆனால் சொந்தமாகாது.

நம்முடைய நாட்டினுடைய சொந்த மூலாதார வளங்கள் பெருகி ஆக வேண்டும். நம்முடைய மூலதனம் பெருகவேண்டும்.

பன்னாட்டு மூலதனங்களைவிட, சொந்த மூலதனம்தான் தேசத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்!

எல்லோரும்தான் பிறக்கிறார்கள், எல்லோருக்கும் ஒரே ஒரு முறைதான் பிறப்பு. ஆதலால் மீண்டும் பிறக்கப் போவது நிச்சயமில்லை.

ஆதலால், இலட்சியத்தை மேற்கொள்ளுங்கள்.

 

அந்த இலட்சியம் எதுவாக இருக்க வேண்டும்? நம்முடைய நாடு, நம்முடைய காலத்தில், நாடா வளத்தனவாக விளங்கவேண்டும்.

தாழ்விலாச் செல்வர் பலர் வாழ வேண்டும். வளர வேண்டும். இந்த நாட்டை இமயம் முதல் குமரி வரையில் ஒரு நாடாக ஆக்குவோம்! கூட்டு வாழ்க்கை வாழ்வோம்! கூடி வாழ்தல் என்பது ஒரு பண்பாடாக இருக்க வேண்டும்.

ஜனநாயக மரபுகளைக் கடைப்பிடிப்போம் என்பது எல்லாம், இந்த நாட்டு வாழ்க்கை நெறியில், முறையில் உயிர்பிக்க வேண்டும்.

அன்பு நெறி இந்த நாட்டு நெறி. உலகத்தின் மிகப்பெரிய சமயமான புத்த மதத்தைக் கொடுத்தது இந்தியா-மறந்து விடாதீர்கள். அதனால்  போர்க்களத்தைவிட்டு விலகினான் அசோகன்.

உயர்ந்த அன்பு நெறியை இந்த நாடு ஒரு காலத்தில் போற்றியது. பாராட்டியது.

இன்று இந்த நாட்டில் எங்கு பார்த்தாலும் வன்முறைகள்! கிளர்ச்சிகள்! தீவிரவாதங்கள்! இவைகளை எதிர்த்துப் போராடி, அன்பும், அமைதியும், சமாதானமும், தழுவிய ஒரு சமூக அமைப்பை நோக்கி நாம் நடைபோட வேண்டும்.

எங்கே போகிறோம்? தெளிவாக முடிவு செய்யுங்கள். எங்கே போக வேண்டும்? தெளிவாக முடிவு செய்யுங்கள்.  நீங்களும் கூடவே வாருங்கள்! கூடவே சிந்தனை செய்யுங்கள்.

என்னுடைய பேச்சில் ஐயங்கள் இருந்தால் எழுதுங்கள்! வினாக்கள் இருந்தால் தொடுங்கள்! விடைகள் வேண்டுமா? தரப்படும்.

 

ஆனாலும் ஒரு நாடு எதைப் பற்றி அதிகமாகப் பேசுகிறதோ, அந்தத் திசையில் அந்த நாடு நகரும் என்பதை மறந்துவிடாதீர்கள்!

 

நாம் அனைவருமாக இந்த நாட்டினுடைய முன்னேற்றத்தைப் பற்றி, இந்த நாட்டினுடைய எதிர்காலத்தைப் பற்றி பேசவேண்டும்! சிந்திக்க வேண்டும்! செல்ல வேண்டும்!

அப்போதுதான் நமது நாட்டை நல்ல திசைக்கு அழைத்துச் செல்லமுடியும். எங்கே போக வேண்டுமோ அங்கே போகமுடியும். அந்தத் தடம் அதோ தெரிகிறது! அந்தத் தடத்தைப் பிடிப்போம்! தடம் மாறாமல் நடந்துபோவோம்! வருக! வருக!

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.