அன்பு என்பது பண்டமாற்று முறையாய் இப்பொழுது இங்கு மாறிவிட்டது.
இதயம் முழுவதும் நேசம் பொங்க, இதயசிரிப்பில் முகம் மலர, உதட்டோர புன்னகையை தேக்கி ஆழமான நேசப்பார்வை காண்பது அரிதாகிவிட்;டது.
எங்கே தொலைத்தோம் அந்த அன்பு என்ற கண்ணியை.
வறுமையிலும் கொடிய வறுமை அன்பு வறுமை.
நாம் உள்ளுக்குள் துளிர் விடும் அன்பு என்ற செடியை கருக செய்து விட்டோம்.
அன்றைய பொழுதில் நேசம் இதயப்பரப்பில் பரவி கிடந்தது.
இன்று எத்தனையோ வசதிகள் நம் புறத்தேவையை பூர்த்தி செய்ய வந்து விட்டன. புறம் வளர்ந்து விட்டது: ஆனால் அகம் குறுகிவிட்டது.
நான் விஞ்ஞான வளர்ச்சியை குறை சொல்லவில்லை.
எனக்குள்ளே எழுந்த இந்த கேள்வியை உங்கள் முன் கேட்கிறேன்.
எங்கே போனது அந்த உள்ளார்ந்த அன்பு நீருற்று.
நண்பனே, நான் இங்கு தான் இருக்கிறேன். நீ இப்பொழுது திரும்பிப் பார்க்காத இடத்தில் தான் இருக்கிறேன் என்றது அன்பின் குரல்.
ஓ! இது என் இதய வெளி அல்லவா! ஐயகோ நான் உன்னை எப்படி மறந்து போனேன்.
என் இதயம் பேசியது. குழந்தாய் நீ என்னை மறந்து போனாலும் நான் என்றும் உனை மறவேன். நான் தவிப்பு என்ற கருவி மூலம் உன்னை தூண்டிக்கொண்டு தான் இருக்கிறேன்.
வா குழந்தாய் என்னிடம். இங்கு அள்ளக்குறையாத ஆனந்தங்கள் நிறைந்து இருக்கின்றன.
என்னிடம் வருவதால் உன் புறக்காரணிகளுக்கு எந்தவித பங்கமும் வந்து விடாது.
என்னுடைய பாணி உணர்வு பூர்வமானது. எதையும் அறிவு பூர்வமாக பார்க்க கற்றுக் கொண்ட உனக்கு இது சற்று உவர்ப்பாகத்தான் இருக்கும்.
அறிவு உனக்கு தேவைதான். உன் புறத்தேவைகளை நிறைவு செய்து கொள்ள.
ஆனால் வாழ்வின் சாரங்கள் உள்ளார்ந்த நெகிழ்வில் நிறைந்து உள்ளது.
இதயம் நோக்கிய பயணம் என்பது புதிய பயணம் என்று நினைத்து விடாதே.
நீ உன் சொந்த வீட்டை மறந்து விட்டாய்; உனக்கு ஞாபகப்படுத்துகிறேன்.
– சிறுமலை பார்த்திபன்