எங்கே போயின மரவட்டைகள் என்ற ஹைக்கூ கவிதை நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பெரணமல்லூர் சேகரன்.
தமிழ்ராசா எனும் வந்தவாசிக் கவிஞர் அவ்வப்போது கவிதைகள் எழுதுபவர். இலக்கிய நிகழ்வுகளில் அவற்றை வாசிப்பவர்.
அத்தகையவர் நீண்ட காலமாக தமது கவிதைகளை நூலாகக் கொண்டு வராமல் அண்மையில்தான் முடிவெடுத்து நூலாகக் கொண்டு வந்துள்ளார்.
அதுவே ‘எங்கே போயின மரவட்டைகள்’ என்னும் நூலாகும். அந்நூலை எழுதத் தூண்டியவர் சிறந்த ஆசிரியையும் எழுத்தாளருமான அவரது மகள் ரஷீனா.
மகள் கொடுத்த உற்சாகம் இல்லையெனில் இந்நூல் வெளி வந்திருக்காது. ‘சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்’ என்று சும்மாவா சொன்னார்கள்?
வெட்கித் தலை குனியும்
நெற்கதிர்கள்
அரை நிர்வாணமாய் உழவன்
எனும் முதல் ஹைக்கூவிலேயே கவிஞர் யாருக்காக எழுதுகிறார் என்பதை அறிய முடிகிறது. இன்னமும் விவசாயி அரை நிர்வாணமாகத்தான் இருக்கிறார் என்பதன் உட்பொருளாய் அவரது வறுமையைப் படம் பிடித்துக் காட்டுகிறார் கவிஞர்.
இயற்கையை அனைவரும்தான் பார்க்கின்றனர். ஆனால் அனைவருக்கும் கற்பனை சிறகடித்துப் மறப்பதில்லை.
அப்படிப் பறந்தாலும் அது எழுத்து வடிவில், அதுவும் கவிதை வடிவில், இன்னும் சொல்லப்போனால் வாமன வடிவில் ஹைக்கூவாக மலர்வதில்லை.
ஆனால் கவிஞர் தமிழ் ராசாவுக்கு இது எளிதாகிறது. அதற்கு அவரது தொடர் வாசிப்பும் முக்கியக் காரணமாகும்.
நீரில் நிலா கண்டு எழுதாத கவிஞர்களே இல்லையெனலாம். இவரது கற்பனையைப் பாருங்கள்
மீன்கள் தின்ன முயன்றும்
முடியவில்லை
நீரில் அப்பள நிலா
தெருவிளக்கின் கீழ் அமர்ந்து படிக்கும் மாணவர்களை மேதைகள் ஆக்கி தெருவிளக்குகள் மரியாதை செய்யும் விதமாக
தலை கவிழ்ந்து நின்றன
தெரு விளக்குகள்
கீழே படிக்கும் மேதைகள்
என்கிறார் தமிழ்ராசா.
வாசலில் ஓவியத்தைத்
தின்று தீர்த்தது
மழையின் பசி
மின்னல் கத்தி
கிழித்தது மேகத்தை
வான்மழையாக
என இயல்பாய் பொழியும் மழையை வைத்து தனது கற்பனை குதிரையைத் தட்டி விட்டுத் தரமான துளிப்பாக்களைப் படைத்துள்ளார் கவிஞர்.
செம்மண் பூமி
படுத்தே கிடக்கும் கருப்புப் பாம்பு
என்றெழுதிய கவிஞர் மூன்றாவது வரியை என்னவாக எழுதியிருப்பார் என எப்படி மூளையைக் கசக்கினாலும் சிக்கவில்லை.
‘தார்ச்சாலை’ என அவர் எழுதியிருப்பதைப் படித்த பிறகுதான் “ஆமாம் இல்லை” எனும் ஆச்சரியம் எழுகிறது.
பள்ளியில் பயிலும் பிள்ளைகள் மீது கரிசனம் கொண்டு பல கவிதைகளை வடித்துள்ளார் தமிழ்ராசா.
அடைத்த கூண்டுகள்
உள்ளே கூவும் குயில்கள்
நர்சரி பிள்ளைகள்
புத்தகப்பை பிடித்த கையில்
தூக்குவாளி ஏறியது
குழந்தைத் தொழிலாளர்
பாழடைந்த பள்ளியின்
கட்டடங்கள் இடிப்பு
சத்துணவுக் கூடத்தில் மாணவன்
சுதந்திர தினம்
மாணவன் மகிழ்ச்சி
பள்ளி விடுமுறை
உள்ளேயே வகுப்பொன்றை நடத்தலாம்
அவ்வளவு குழந்தைகள்
ஆட்டோவில்
பறந்து செல்கிறான்
மாணவன் பள்ளிக்கு
காலைநேர உணவு
புத்தகக் கண்காட்சி
மாணவர்கள் வந்ததும்
படபடத்தன புத்தகங்கள்
படிநெல்லில்
‘அ’ எனக் கோலமிட்டது
விஜயதசமியன்று குழந்தை
பள்ளிவிடும் நேரமாச்சு
பைகளைத் தூக்கிய பிள்ளைகள்
ஐஸ் வண்டிக்காரன் மணி
ஆகிய கவிதைகளை சிலாகிக்கும் வேளையில்
ஆசிரியப் பிரம்புகள்
ஓய்வறைக்குப் போயின
குறைந்தது தேர்ச்சி
எனும் துளிப்பா நெருடுகிறது.
தொலைக்காட்சித் தொடர்களைக் கண்டு சீரழிவது பெரும்பாலும் பெண்களே என்பது கசக்கும் உண்மை. அதனால்தான்
எல்லா வீடுகளுக்குள்ளும்
சண்டை பிடிக்கும் பெண்கள்
தொலைக்காட்சித் தொடர்
என்கிறார் கவிஞர்.
யாரோ மரணம்
உடன் சாகின்றன
சவ ஊர்வலப் பூக்கள்
எனும் தமிழ் ராசாவின் துளிப்பாவைப் படிக்கும்போது,
பறித்த பூக்கள்
தெருவெல்லாம் பூத்தன
இறுதி ஊர்வலம்
என்னும் சுந்தர செல்வனின் துளிப்பா நினைவுக்கு வருகிறது. கவிஞர்களின் கற்பனைகளில் வெவ்வேறு கவிதைகள் பூக்கின்றன.
கோவில் மரத் தூளிகளில்
படுத்துக் கிடக்கின்றன
பிரார்த்தனைகள்
எனும் கவிதையில் பக்தர்களின் கோரிக்கைகள் படுத்துக் கிடக்கும் யதார்த்தத்தைத் தமது கவித் திறத்தால் காட்சிப்படுத்தியுள்ளார் கவிஞர் தமிழ் ராசா.
பிறந்த நாளில் மட்டும்
கூண்டுக்குள்ளிருந்து விடுதலை
தலைவர்களின் சிலைகள்
எனும் துளிப்பாவில் இறந்த நாளையும் சேர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.
கிராமப் புற நூலகங்களில் நூல்கள் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் அவலத்தை அக்கறையோடு இப்படிப் பதிவு செய்துள்ளார் கவிஞர்.
அடுக்கப்பட்ட நூல்கள்
எடுக்கக் கெஞ்சின
கிராமப்புற நூலகம்
கீழ்க்கண்ட கவிதையில் முதல் வரியை மூன்றாம் வரியாக்கியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
மரங்களற்ற நகரம்
கொத்துவதற்குத் தேடியலையும்
மரங்கொத்தியொன்று.
சுதந்திரப் பவளவிழாவையும் கொண்டாடியாகிவிட்டது இந்தியா. ஆனாலும் சுடுகாட்டுப் பாதையில்லா கிராமங்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன என்பதை,
அடர்மழையைச் சபித்தது
சுடுகாட்டுப்பாதை இல்லாத
கிராமத்துச் சாவு வீடு
எனும் துளிப்பாவால் சாடுகிறார் தமிழ் ராசா.
இந்நூலை அகநி வெளியீட்டின் மூலம் அழகிய முறையில் அச்சிட்டு, அணிந்துரை வழங்கியுள்ள கவிஞர் மு.முருகேஷ் கூறியுள்ளதைப் போல, தமது முதல் நூலிலேயே தமிழில் பேசப்படும் வகையிலான பல ஹைக்கூ கவிதைகளை எழுதியுள்ள கவிஞர் தமிழ் ராசாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்நூலை வாங்கிப் படிப்பதும் வீட்டு நூலக அலமாரியில் சேர்ப்பதும் அவசியம்.
நூல்: எங்கே போயின மரவட்டைகள்?
எழுத்தர்: தமிழ் ராசா
பக்கம்: 80
விலை: ₹100
வெளியீடு: அகநி வெளியீடு
3 பாடசாலை வீதி
அம்மையப்பட்டு
வந்தவாசி 604 408
திருவண்ணாமலை மாவட்டம்
கைபேசி: 9444360421
பெரணமல்லூர் சேகரன்
8 ஏ வேளாளர் தெரு
பெரணமல்லூர் – 604503
திருவண்ணாமலை மாவட்டம்
கைபேசி: 9442145256