எங்க போச்சு

குண்டு கண்ணம் வண்டு கண்ணு
குருவிக் கூட்டைப் போல நடை
கொஞ்சி கொஞ்சி பேசும் பேச்சு எங்க போச்சும்மா – நீ
கொண்டு போயி வச்ச இடம் எனக்கு சொல்லம்மா – நான்
கொண்டு வந்து தந்துருவேன் கொஞ்சம் நில்லும்மா

சின்ன மாமா சிரிக்க வேணும்
சில்லு வண்டு கூட்டம் ஒண்ணு ஓடி வந்துச்சாம் – நான்
கொண்டு வந்த பேச்செல்லாம் கொண்டு போயிருச்சாம் – அதை
கிளிக் கூட்டம் திருடிப் போயி தின்னு போயிருச்சாம்
திரும்பி நீயும் கொண்டு வர எங்க போவியாம்

செண்டு பூவு நண்டு நடை
சிகப்பு தோலு கருத்த தலை
சிரிஞ்சு சிரிஞ்சு பேசும் பேச்சு எங்க போச்சும்மா – உன்
சிரிப்பு எங்க போச்சுதுன்னு எனக்கு சொல்லம்மா – நான்
சிந்தாம எடுத்து தாரேன் வாங்கிச் சொல்லம்மா

செல்லமாமா செருக்கு வேணும்
செங்குருவி கூட்டம் ஒண்ணு ஓடி வந்துச்சாம் – என்
சிரிப்பையெல்லாம் குழிதோண்டி போட்டு வச்சிருக்காம் – அதை
கொஞ்சம் போல மாதுளங்காய் தின்று போட்டுறுச்சாம் -அதை
கொண்டு வர வேணுமின்னா எங்க போவியாம்

அன்ன நடை சின்ன இடை
அல்லிப் பூவைப் போல உடை
அசைஞ்சு அசைஞ்சு நடக்கும் நடை எங்க போச்சும்மா – அதை
அடைச்சு வச்ச இடத்தை மட்டும் எனக்கு சொல்லம்மா – நான்
அசைக்காம எடுத்து தாரேன் வாங்கிச் செல்லம்மா

ஆசை மாமா அஞ்ச வேணும்
அயிரை மீனு கூட்டம் ஒண்ணு இங்க வந்துஞ்சாம் – நான்
அடைச்சு வச்ச என் நடையை எடுத்துப் போயிருச்சாம் – அதை
கொஞ்சம் போல மயிலு வந்து கொண்டு போச்சுதாம் – அதை
அசைக்காம கொண்டு வர எங்க போவியாம்

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.