எண்ணமே ஏற்றம் தரும் – ஆசிரியர்: தாழை. இரா.உதயநேசன் – நூல் மதிப்புரை: பாரதிசந்திரன்

எண்ணமே ஏற்றம் தரும் என்ற தாழை. இரா.உதயநேசன் அவர்கள் எழுதிய நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பாரதிசந்திரன்.

பகுப்பின் வீரிய அடர்த்தி என்று ஒரே வரியில் அந்த நூலினை மதிப்பிடுகிறார் அவர்.

எண்ணவோட்டங்கள்

வடிவமும் நிறமும் மணமும் இயல்பும் அற்றவைகளாகத்தான் எண்ணங்களிருக்கின்றன. சீரிய அறிவின் எல்லையில் ஒன்றின் பிரதிபலிப்பே எண்ணமாகிறது.

கற்பனை மற்றும் சிந்தனை என்பவையெலாம் நிகழ்ந்தவைகளின் மற்றும் எதிர்பார்த்தலின் வெளிப்பாடுகளே. சில பல மாற்றங்களுடன் அவை எண்ணங்களாக உருப் பெறுகின்றன.

எண்ணங்கள் ஒவ்வொரு உயிர்களிலும் ஒவ்வொன்றாக இருக்கின்றன. அவை பிரபஞ்சத்தின் பிரமாண்ட இரகசியம்.

அறிவுசார் கோட்பாடுகளை, காலத்தின் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு, தனது எண்ணமாக, மனிதன் காலந்தோறும் புதிது புதிதாய் வெளிக் கொணர்கிறான்.

உலகின் அனைத்திற்கும் அடித்தளமான எண்ணவோட்டங்கள் குறித்த தலைப்போடு, தமிழ்மாமணி. தாழை. இரா.உதயநேசன் அவர்களின் ‘எண்ணமே ஏற்றம் தரும்’ எனும் கவிதை நூல் தற்காலச் சிந்தனைகளின் வடிகாலாகும்.

அது மானிட சமூக ஒழுங்கமைப்பு குறித்தான அறிவுச் சுரங்கமாக, அழகுப் பெட்டமாக வெளிவந்திருக்கிறது.

எளிமையும் ஆழமும் இணைந்த பொக்கிசமாக இந்நூலிலுள்ள கவிதைகளைக் கூறலாம்.

வடிவமும் வெளிப்பாடும் அதன்வழி விரியும் பெருவெளிச் சிந்தனைப் போக்கும் எதிர்காலச் சமூகத்திற்கான அருட்கொடை என்றே கூறலாம்.

உலக மாமேதைகளான சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், மொசார்ட், காரல்மார்க்ஸ், சர்ச்சில், பிளேட்டோ, ரூஸோ மற்றும் அலெக்சாண்டர் ருமாஸ் வரிசையில் இந்தியாவிலும் தமிழகத்திலும் பலநூறு மேதைகள் தோன்றித் தமது எண்ணவோட்டங்களைச் சரிப்படுத்தி, உலகம் மேன்மையடைய தத்துவங்களாகவும் தீர்க்க தரிசன உரைகளாகவும் பொன் மொழிகளாகவும் வெளியிட்டனர்.

தமிழில் அற இலக்கியங்கள் எனும் மாபெரும் பகுப்பில் முழுமையடைந்து கிடக்கிறது அதன் அடர்த்தி.

கண்டுபிடிக்க முடியாத அற்புதமான தீர்வுகளைக் கண்டுபிடித்தும், தீர்க்க முடியாத புலப்பாடுகளைப் பல்வேறு அனுபவக் கட்டங்களின் மூலம் தீர்வைக் கண்டும் உலகம் சமநிலைப்படுவதற்கு எண்ணங்களே காரணமாகின்றன.

இலக்கியம் என்பது எண்ணங்களின் வடிகாலாகும்.

“இலக்கிய உருவாக்கம் சமூக உருவாக்கத்துக்கு இன்றியமையாதது, அதாவது தனக்கென இலக்கியம் இல்லாத ஒரு சமூகம் உண்மையிலேயே நன்கு ஒழுங்கமைப்பட்ட சமூகமாகாது” என்கின்றார் கார்த்திகேசு சிவத்தம்பி.

பழமைக்கும் புதுமைக்கும் இடையில் ஓடும் உணர்வுகளும் அதன் சாயல்களும் தான் வேறுபடுகின்றன. ஒவ்வொரு இடமும் காலமும் சிற்சில வேறுபாடுகளைத் தாங்கியே இருக்கின்றன.

மனிதர்களும் அவ்வாறே இருக்கின்றனர். சிலர் மாறுபாடுகளை உணர்கின்றனர். அதன் இழந்துபோன உணர்வுகளுக்காக ஏங்குகின்றனர். பரிதவிக்கின்றனர். தவிப்புடன் அலை மோதுகின்றனர்.

இது போன்ற ஒருணர்வை தாழை. உதயநேசன் தம் கவிதையில் எழுதும் பொழுது, நமக்கு அதன் வலி ‘சுள்ளெ’னக் குத்தத்தான் செய்கின்றது. அவ்வாறான பாடல்களாக,

இவற்றைக் கூறலாம்.

அப்பா

உணர்வின் உச்சமான இடங்களை மனிதர்கள் தொட்டுத் தடவி அதன் இலயிப்பில் மெய் மறந்து போவதில்லை. பெரும்பாலும் நிகழ்வின் ஓட்டத்தில், அடுத்ததை நினைத்து நினைத்து வாடும் காலமிது.

ஆனால், பாசம், அன்பு, பிணைப்பு, அரவணைப்பு, வழிநடத்தல் மற்றும் உருவாக்கல் போன்ற ஒவ்வொன்றிலும் ‘அப்பா’ எனும் மாபெரும் சிற்பம் இருக்கின்றது.

இதனை உணர்ந்து, விடுபட்ட பொழுதில், இல்லாது போன இழப்பின் பெருவலியைத் தம் பாடலில் தாழையார் விளக்குகிறார். அப்படியே அந்த உணர்வுகள் நமக்குள் மடை மாற்றமாகின்றன. ‘அப்பா’ குறித்த பாடலாக,

இதனைக் கூறலாம்.

மகாகவி பாரதி

அவர் மகாகவியைச் சிம்மாசனம் போட்டுத் தம் பாடல்களில் அமர வைத்து அழகு பார்க்கிறார்; ஆராதிக்கிறார். பாரதியின் கவிதைகளில் தம் மனதைத் தொலைத்ததாகக் கூறும் தாழையார், பாரதியின் எண்ணங்கள் ஈடேறும் எனத் தமது பாடல்களில் எழுதுகிறார்.

‘முண்டாசுக் கவிஞனின் எண்ணங்களே ஏற்றம் தரும்’ எனப் பாரதியின் பாதையிலேயே தமது எண்ணங்களை இன்னும் ஆழமாகத் தமிழ் நெஞ்சங்களில் பதிவிறக்கச் செய்கிறார் அவர்.

இப்பாடலில் நேரடியாக ஒரு பொருளும், மறைபொருளாகப் பலபொருளும் நமக்குப் புலப்படுகின்றன.

‘வீதிகள் தோறும் விளக்கொளி தந்தவன்’ என்கின்றார் தாழையார். வெறும் இருள் போக்கும் ஒளி மட்டுமல்ல. இங்கு பொருள் வீதியிலுள்ள ஒவ்வொரு வீடுகளிலுமுள்ள ஒவ்வொரு இல்லத்தார்களையும், அதாவது தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, தங்கை, அக்கா மற்றும் தம்பி என அனைவரும் சிந்தனையால் எண்ணத்தால் நல்லவை உணர்ந்து இருளற்ற வாழ்க்கை வாழ அனைத்து வகையிலும் ஒளி தந்தவன் பாரதி என்கின்றார் தாழை.உதயநேசன்.

ஒரு வரிதான் இன்னும் ஓராயிரம் பொருள் தரும் அது. வார்த்தைகள் ஏதும் வெற்றாயிராது ஒளிக்கீற்றாய் அனைவரிடத்திலும் பாயும் இலாபகத்தைப் பெற்றுள்ளன கவிஞரின் அனைத்துக் கவிதைகளும்.

சமூக மேம்பாடு

மானுடம் தவறு செய்யும் பொழுது, தற்காலப் புரட்சிக்கவியாக, முண்டாசுக் கட்டிக் கொண்டு கிளம்புகிறார் ஆசிரியர்.

பெண்கள் காலங்காலமாய் அடக்கப்பட்டு, முடக்கப்பட்டு வெளிவர விடாமல் தடுக்கும் ஆணாதிக்க மிக்க பெருக் கொடுங்கோலர்களைப் பார்த்து,

என முகத்திரைக் கிழித்து உண்மை முகம் மாற்றி, சமூக மேம்பாட்டினை உணர்ச்சிகளெனத் தம் எண்ணத்தை இப்பாடலில் கூறியதைப்போல் இன்னும் நிறைய பாடல்கள் மூலம் பதிவு செய்கின்றார் தாழையார்.

மகிழ்வே மண்ணில் இறை

மகிழ்வை நோக்கித்தான் நாம் வாழ்கின்றோம். அதைப் பெறவே நிகழ்வுகள் நடக்கின்றன. அதுதான் உலகின் மாபெரும் ஒரேயொரு இறை. ‘மகிழ்வே இறைவன்’ என்பதை உணர்ந்தால், நீயும் மகிழ்ச்சியாக இருப்பாய் பிறரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பாய்.

அவ்வாறு உலகம் இயங்கியதென்றால், துன்பமும் சோகமும் இவ்வுலகில் ஏது? கேட்கிறார் தாழையார்.

எண்ணங்கள் முழுவதும் எதிர்காலச் சிந்தனையாக அமைந்து, கட்டுப்பாடான ஒரு எல்லையை நோக்கி கவிஞர் தாழையாரின் பாடல்கள் சென்று கொண்டேயிருக்கின்றன.

ஒருவன் தீயவனாக மாறுவதற்குக் காரணம், அவனின் தேவைக்கதிகமான தேடலும் நிகழ்வுகளுமேயாகும். அதனை மாற்றிச் சமூகம் மேலிட வேண்டுமெனின் தாழையாரின் கருத்துகள் இளம் மனதில் ஆழமாய்ப் பதிய வேண்டும்.

சமூகத்தை மாற்றும் எண்ணங்கள்

ஒருவரின் சிந்தனை, சமூகத்தை எவ்வாறு மாற்றும் என்பதை “ஹிசாம் சரபியின் (Hisham Sharabi) ஆய்வு நூல்களில் ‘Neopatriarchy: A theory of destroyed change in Arab society’ எனும் நூல் குறிப்பிடத்தகுந்தது.

‘இந்நூல் வெளிவந்த தருணத்தில் இந்த நூல் மத்தியக் கிழக்கு அரபுலகிலும், மேற்கத்திய அறிவுத்துறை வட்டாரங்களிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்பத்தியது’ எனும் மேற்கோள் காட்டும் செய்தியானது இங்கு எண்ணத்தக்கதாகும்.

மேற்காணும் நூல் அரபுலகம் முழுவதும் மாறுவதற்குக் காரணமாக இருந்தது என்றால், நூலாசிரியரின் எணணங்கள் அத்தகை சிறப்புக்குரியதாகும். அந்தக் கருத்துலக மாற்றத்தைத் தாழையாரின் இந்நூலும் இச்சமூகத்திற்குச் செய்யும் என்பது திண்ணம்.

எண்ணங்கள் ஏற்றம் பெறட்டும். கவிஞர் தாழையாரின் சிந்தனைகளால், வழிகாட்டலால், கற்வனைத் திறத்தால் உலகம் உய்வடையட்டும்.

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com

பாரதிசந்திரன் அவர்களின் படைப்புகள்

4 Replies to “எண்ணமே ஏற்றம் தரும் – ஆசிரியர்: தாழை. இரா.உதயநேசன் – நூல் மதிப்புரை: பாரதிசந்திரன்”

 1. ஊரு விட்டு ஊரு போய் அல்ல; கண்டம் விட்டுக் கண்டம் போய்த் தமிழ் வளர்க்கும் தாழையாரின் தமிழ்ப் படைத் தளபதி சந்திரசேகர் அய்யா அவர்கள் அளித்த நூல் மதிப்புரை எண்ணங்களில் மட்டுமல்ல; எல்லா வண்ணங்களிலும் ஏற்றம் மிகுந்ததாய் இருக்கிறது.

  மகாகவி பாரதி தொடங்கி சமூக மேம்பாடு மற்றும் பெண்ணியம் குறித்த கவிதைகளும் அவை பற்றிய கருத்துகளும் மேலோங்கி நிற்கின்றன.

  எந்த உயரத்திற்குப் போனாலும் தந்தையை மறக்காத தாழையாரின் எண்ணங்களும் அதை எடுத்துக்காட்டி விமர்சித்த விதமும் அருமை.

  தமிழை உலகமயமாக்கும் தாழையாரும் அவர் படைத் தளபதியும் என்றென்றும் சிறந்து விளங்க இந்த எளிய தமிழ் ஆர்வலனின் வாழ்த்துக்களும்! நன்றிகளும்!!

 2. ஒவ்வொரு தலைப்பிலும் ஆசிரியர் எழுதிய கவிதைகளை மேற்கோள்காட்டி விளக்கிய விதம் மிகவும் சிறப்பு. மொத்தத்தில் அவர் படைத்த நூல் சிறப்பென்றால் அதற்கான தங்கள் மதிப்புரை அற்புதம் ஐயா! வாழ்த்துக்கள்👍👍.

 3. சமூக மேம்பாடு பெண்ணுரிமை போற்றும் விதமாக இருக்க வேண்டும் என்ற கருத்து நதிதீர நாகரிகம் தொடங்கிய காலத்திலிருந்து வழிவழியாக விழிப்புணர்வு ஊட்டப்பட்டு வந்து கொண்டிருகின்றது. தற்பொழுதும் பெண்கள் சம உரிமை பெற்றுள்ளனர் என்று தைரியமாகக் கூற இயலவில்லை. இதற்கு அரசியல், பொருளாதாரம், சூழலியல் மற்றும் ஆதிக்க மனப்பான்மை போன்ற பல காரணங்களைக் கூறலாம். இக்களைகளை அகற்ற காலம் கனிந்து கொண்டிருக்கின்றது. பொறுத்து இருப்போம்.

 4. எண்ணமே ஏற்றம் தரும்

  எனும் தலைப்பில் அமைந்த இந்த நூலை மிகச் சரியான முறையில் ஆராய்ச்சி செய்ததாக உணர்கிறேன்.

  உங்களுடைய இந்த ஆய்வை உற்று நோக்கும்பொழுது புத்தர் சொன்ன மூன்று பேருண்மைகள் தான் நினைவுக்கு வருகிறது.

  1.அனித்தியம் – Impermance
  2.அனத்த – Non- Self
  3.துக்கம் – Unsatisfectiriness

  இந்த உண்மைகளை உணர்ந்து கொண்டால் போதும் வாழ்க்கையில் வேறு யாவரும் வேறு எதுவும் தொந்தரவு செய்யாது.

  இவ்வுலகை விட்டு நாம் செல்லும் பொழுது நம்முடைய நல்ல எண்ணங்களை மட்டும் விட்டுச் செல்கிறோம். நம் எண்ணங்கள் வெளிப்பாடு தான் இது போன்ற நூல்கள். இந்த நூல்கள் சமூகத்திற்கு நாம் ஆற்ற வேண்டிய கடமையை நிலை நிறுத்துகிறது.

  காலம் அறிந்து பயிற்சி என்பதை போல…

  எண்ணமே ஏற்றம் தரும் – தாழை. இரா.உதயநேசன் – அவர்களின் நூலை மதிப்புரை மதிப்புரை செய்ததை எண்ணிப்பார்க்கிறேன்.

  இதில் வரும் ஒவ்வொரு சொல்லும் அத்தனை பொருள் குறித்ததாக உணர்கிறேன்.

  நூல் ஆராய்ச்சி என்பதை கடத்தும் நூலாசிரியரின் உள்ள கிடக்கை வெளிக்கொணந்ததாக உணர முடிகிறது.

  இது போன்ற ஆராய்ச்சிகள் தமிழ் சமூகத்திற்கு இன்னும் நிறைய நிறைய வேண்டும். நீங்களும் நிறைய ஆய்வு கட்டுரைகளையும் ஆராய்ச்சி நூல்களையும் எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள்.

  மகிழ்ச்சி ஐயா!

  தொடரட்டும் உங்கள் இலக்கியப் பணி!!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.