எண்ணம் – கவிதை

இதோ இந்த நுழைவாயிலைக் 

கண்டு அஞ்சாமல் இருப்பதற்கும் 

அதனுள்ளே  நுழைவதற்கும் 

எனக்குப் போதுமான தைரியம் இருந்தது 

அதேபோல் என் தலை

வெடித்துச் சிதறாமல் 

இருப்பதற்கும் அதிலிருந்து கசியும் 

எண்ணங்களில் மிதப்பதற்கும் 

என் உடல் உருவத்தை மட்டும் 

காண்பித்து என்னுள் இருப்பதை 

உன்னைச் சுதந்திரமாக உணரச்செய்து 

நாம் நடமாடிக் கொண்டிருக்கிறோம் 

எனக்கும் உனக்குமான 

ஒரு புள்ளியிலிருந்து 

பேச்சைத் தொடங்கி 

அது வெவ்வேறு திசைகளில் 

போவதைக் கண்டு 

பேச்சை நிறுத்திக் கொள்கிறோம் 

நமக்கு இருக்கும் இடைவெளியில் 

மௌனம் காக்கிறோம் 

எனக்கான நீதியை 

கை தவறி கீழே வீழ்ந்து விடாமல் 

கையில் எடுத்துச் செல்கிறேன்

புஷ்பால ஜெயக்குமார்