டிஜிட்டல் டீடாக்ஸ் (எண்மத் தவிர்ப்பு)

டிஜிட்டல் டீடாக்கஸ்

டிஜிட்டல் கருவிகளுக்கு சற்றே ஓய்வு கொடுங்கள். உங்கள் உடல்நலனைக் காத்திடுங்கள்.

டிஜிட்டல் டீடாக்ஸ் (digital detox) என்பது டிஜிட்டல் கருவிகளின் பயன்பாட்டிலிருந்து சில நாட்கள் அல்லது சில மணி நேரங்கள் விடுப்பு எடுத்துக் கொள்வதைக் குறிக்கிறது.

முன்பெல்லாம் நாம் பார்த்த திரைகள் திரைப்படத் திரை, சின்னத் திரை, கம்ப்யூட்டர் திரை மட்டுமே. மாறிய இன்றைய காலக்கட்டத்தில் நமது பணிகள், பொழுதுபோக்கு, கற்பித்தல், கற்றுக் கொள்ளுதல், பகிர்தல், தொடர்பு கொள்ளுதல் அனைத்தும் திரைகள் வாயிலாகவே மேற்கொள்ளப் படுகின்றன.

நீண்ட விடுமுறை நாட்களில் நீண்ட நேரம் டிஜிட்டல் கருவிகள் பயன்படுத்தப் படுகின்றன என்பது வாடிக்கையாக உள்ளதைப் பார்க்கிறோம்.

ஸ்க்ரீன் டைம் எனப்படும் திரை நேரத்தை ஒழுங்காக மேலாண்மை செய்வதால் விழிகள் மற்றும் உடல்நலனும் மனநலனும் பாதுகாக்கப்படும் என்பதையே டிஜிட்டல் டீடாக்ஸ் குறிப்பிடுகிறது.

கைபேசி திரை, கம்ப்யூட்டர் திரை, டேப்லட் திரை என்று பல்வகையான டிஜிட்டல் கருவிகளை குழந்தைகள், பதின் பருவ வயதினர் முதல் அனைத்து வயதினரும் பயன்படுத்துகிறார்கள் .

வகுப்பறைகளிலும் ஸ்மார்ட் திரை பயன்பாட்டில் உள்ளது. அதிக அளவிலான திரை நேரம் பயன்பாடு, பதற்றம், பல்வகை உடல்நலப் பாதிப்பு, சீரற்ற உறக்கம், உறவுகளில் சிக்கல், பணிகளில் கவனச் சிதறல் உள்ளிட்ட்டவற்றை ஏற்படுத்துகின்றன.

‘காமன் சென்ஸ் மீடியா’ என்ற நிறுவனம் மேற்கொண்ட உலக அளவிலான ஆய்வின்படி, 8 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களின் ஸ்க்ரீன் டைம் – நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் என்று குறிப்பிடுகிறது.

அவர்கள் கல்விக்காக மட்டும் அல்லாமல் கேமிங், பொழுதுபோக்குக்காகவும் மொபைல் அல்லது டேப்லட்டையே பயன்படுத்துவதால், உடல் சார்ந்த விளையாட்டு உள்ளிட்ட செயல்கள் எதுவும் இல்லாமல் இருந்து விடுகிறார்கள் என்ற கவலையும் பெரியவர்கள் இடையே உள்ளது.

முரணாக சிறுவர்களைப் பார்த்து கண்டிக்கும் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைத்து வயதினரும் தொழில் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக வரையறை, வரம்பு இல்லாமல் அதிக அளவிலான ஸ்க்ரீன் டைம் பழக்கம் உள்ளவர்களாகவே இருப்பதை நாம் காண்கிறோம்.

டிஜிட்டல் டீடாக்ஸ் கடைப்பிடித்தல் எப்படி?

உங்களுடைய ஸ்க்ரீன் டைம் என்பதைக் கொஞ்சம் கொஞ்சம் ஆக குறைத்துக் கொள்ளும் பழக்கத்தைக் கொண்டு, உற்ற உறவுகள், நண்பர்களுடன் நேரம் செலவிட வேண்டும்.

உடல் பயிற்சி, உடல் உழைப்பு, தூய்மைப் பணி, நீண்ட விறுவிறுப்பான நடை ஆகியவற்றுக்காக நேரத்தை செலவிட வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். இதன் பயனாக உடல் நலன் சிறக்கும்.

அதனால் உங்களுடைய ஆக்கத்திறன், படைப்பாற்றல் மேம்படுவதுடன், மனப்பதற்றம் குறையும். கவனக்குவிப்பு அதிகமாகும். பணியிடத்திலும் குடும்பத்திலும் பழகும் முறைகளும் மேம்படும்.

போன் இல்லாத நாட்களை வகுத்துக் கொள்ள வேண்டும். அதாவது வார இறுதி நாட்களில், விடுமுறை நாட்களில் போன் உள்ளிட்ட டிஜிட்டல் கருவிகளை கட்டாய தேவைக்கு மட்டுமே பயன்படுத்தவும்.

தேவைக்குரிய சில செயலிகளை மட்டுமே பயன்படுத்தவும் உறுதி செய்து கொண்டு, கட்டுப்பாட்டுடன் அதனைப் பின்பற்ற வேண்டும்.

டீடாக்கஸ் கடைப்பிடிக்க ஏதுவாக நீண்ட தொலைவு பயணங்களை மேற்கொள்ளலாம்.

வாசிக்க வேண்டும் என்று வாங்கி வைத்துள்ள நூல்களைப் படிக்கலாம்.

Doodling and Colouring எனப்படும் பெரியவர்களுக்கு என்று உள்ள வரைதல் வண்ணம் தீட்டுதல் நோட்டுப் புத்தகங்களை வாங்கி அதில் வரைந்து வண்ணம் தீட்டி மகிழலாம்.

இப்படியாக டிஜிட்டல் கருவிகளுக்கு சற்றே ஓய்வு கொடுக்கும் டிஜிட்டல் டீடாக்ஸ் பழக்கத்தைக் கைகொள்ளுதல் வாழ்வை மேம்படுத்தும்.

டிஜிட்டல் டீடாக்ஸ் பற்றிய ஆங்கில நூல்களின் ஒன்றின் அறிமுகம்

The Digital Diet – 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நூலை எழுதியவர் – டேன் சீபெர்க் (Dan Sieberg)

இந்த நூலில் வலியுறுத்தப்படும் அம்சங்களாவன

1.digital obesity ‍அளவு கடந்த தொழில்நுட்ப பயன்பாடு, உடல்நலன் மற்றும் மனநலனில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

2.digital detox – கால அடிப்படையில் தொழில்நுட்ப பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளும் வகையிலான பழக்கத்தைப் படிப்படியாக கைக்கொள்ள வேண்டும்.

3.digital nutrition – பயனுள்ள, ஆக்கப்பூர்வமான வகையிலான டிஜிட்டல் கன்டென்ட்டுக்கு மட்டுமே டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்.

எஸ். மதுரகவி
கைபேசி: 9841376382
மின் அஞ்சல்: mkavi62@gmail.com