எதனையும் மிகைப்படுத்திக் கூறாதே என்பது ஒரு நல்ல கதை.
நம்மில் பலபேர் எதனையும் மிகைப்படுத்திக் கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு கூறுவதால் நமக்கு எப்போதும் துன்பமே விளையும்.
இதனை எதனையும் மிகைப்படுத்திக் கூறாதே என்ற இந்தக் கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.
முன்னொரு காலத்தில் ஆந்தை ஆனந்தி ஆலமரப் பொந்திலும், கழுகு கண்ணாயிரம் மலை உச்சியின் கூட்டிலும் வாழ்ந்து வந்தன.
ஒருநாள் ஆந்தை ஆனந்தியும், கழுகு கண்ணாயிரமும் உணவு தேடும் போது ஒன்னை ஒன்று சந்தித்துக் கொண்டன. இருவரும் அன்று முதல் நண்பர்களாக இருந்தனர்.
ஆந்தை ஆனந்தி எப்போதும் தன்னையும், தன்னுடைய இருப்பிடத்தையும் பெருமையாகவே பேசும்.
ஒருநாள் ஆந்தை ஆனந்தி கழுகு கண்ணாயிரத்திடம் “என் அருமை நண்பா கழுகு கண்ணாயிரமே, என்னுடைய குழந்தைகளை நீ பார்த்தால் அசந்து போவாய்.
என்னுடைய குழந்தைகளின் கண்களும், இறக்கைகளும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அவற்றைப் பார்த்தால் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும்.
நான் சொன்ன அடையாளங்களை வைத்தே என் குழந்தைகளை நீ அடையாளம் கண்டு கொள்ளலாம்.” என்று பெருமையாக சொன்னது.
அதைக் கேட்ட கழுகும் “அப்படியா?” என்று வியந்தது. பிறகு இரண்டும் தங்களது இருப்பிடத்திற்குச் சென்றன.
பின்னர் ஒருநாள் கழுகு கண்ணாயிரம் ஆந்தை ஆனந்தியைப் பார்ப்பதற்காக ஆலமரத்திற்கு வந்தது. அங்கே ஆந்தை ஆனந்தியைக் காணவில்லை.
மரப்பொந்தில் அகன்ற கண்களுடன் பயங்கரமாக விழித்தபடி ஆந்தைக் குஞ்சுகள் இருந்தன.
அசிங்கமாக இருந்த அக்குஞ்சுகளைப் பார்த்த கழுகு கண்ணாயிரம் “என்னுடைய நண்பனின் குஞ்சுகள் அழகானவர்கள். இவைகள் பார்க்க அசிங்கமாக உள்ளன. இவை நிச்சயமாக என்னுடைய நண்பனின் குழந்தைகளாக இருக்க முடியாது.” என்று எண்ணி அக்குஞ்சுகளை பிடித்து தின்றது.
சிறிது நேரம் கழித்து ஆந்தை ஆனந்தி ஆலமரப் பொந்திற்கு வந்தது. குழந்தைகளைக் காணாது ஆந்தை ஆனந்தி திகைத்தது.
கழுகு கண்ணாயிரத்திடம் “இங்கிருந்த என்னுடைய குழந்தைகள் எங்கே?.” என்று ஆந்தை ஆனந்தி கேட்டது.
“உன்னுடைய குழந்தைகள் மிகவும் அழகானவர்கள் என்று நீ கூறினாய். இப்பொந்தில் முட்டைக் கண்களால் பயங்கரமாக விழித்தபடி குஞ்சுகள் இருந்தன.
அவலட்சணமான அவை உன்னுடைய குழந்தைகளாக இருக்க முடியாது என்று எண்ணி அவற்றை நான் தின்றுவிட்டேன்.” என்று கூறியது.
அதனைக் கேட்டதும் ஆந்தை ஆனந்தி “உண்மையை மறைத்து மிகைப்படுத்திச் சொன்னதால் நான் இன்று என்னுடைய குழந்தைகளை இழந்து விட்டேன்.” என்று கூறி வருந்தியது.
ஆதலால் ஒருபோதும் எதனையும் மிகைப்படுத்தி கூறக்கூடாது என்பதையும் தற்பெருமை கூடாது என்பதையும், எதனையும் மிகைப்படுத்திக் கூறாதே என்ற கதை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!