கேட்காத கடவுளுக்கு படையல் இட்டு
கேட்கும் மனிதனுக்கு சில்லறை தேடுவது
சுயநலத்தின் எதார்த்தம்
நால்வண்ண கொடியும் இரண்டாயிர காகிதமும்
சாலையில் கிடந்தால்
இரண்டாயிரத்தை எடுப்பது
ஆசையின் எதார்த்தம்
பசி மயக்கத்தால் சாலையில்
விழுந்து கிடந்த முதியவரை
போதையில் கிடப்பதாக நினைப்பது
இன்றைய எதார்த்தம்
பொங்கலுக்கு தந்த இரண்டாயிரத்து ஐநூறை
பொங்கல் அன்றே வாங்கிக் கொள்வது
அரசின் எதார்த்தம்
ஓட்டுக்கு பணம் தந்து மக்களை
மடமைகள் ஆக்க நினைப்பது
கட்சிகளின் எதார்த்தம்
தேர்தல் வரும் பொழுது
தொகுதிகள் நினைவுக்கு வருவது
மந்திரிகளின் எதார்த்தம்
கையூட்டை வளர்க்க நினைக்கும்
அசமந்த சோம்பேறிகளின்
அவசரம் எதார்த்தம்
மகள் பந்து கேட்டவுடன்
கையில் பணமில்லாத அப்பா
அந்த நிலவையே வாங்கித் தருவதே
ஏழ்மையின் எதார்த்தம்
பூக்களை சுமக்கும்
காம்பில் இல்லை
சுயநலத்தின் எதார்த்தம்
ஒரே ஒரு செடியை வைத்து விட்டு
அதற்கு தண்ணீர் கூட ஊற்றாமல்
புகைப்படம் எடுப்பது
பெருமையின் எதார்த்தம்
‘அப்பா’ என்று அழைத்த பாசமிகு மகளை
கைம்பெண் ஆக்க நினைப்பது
ஆணவத்தின் எதார்த்தம்
பாலியல் வன்மம் செய்ய நினைத்தால்
அவர்களைக் கொளுத்துவது
தைரியத்தின் யதார்த்தம்
இல்லத்தை ஆட்சி செய்யும் அரசிகள்
சும்மாய் இருப்பதாக நினைக்கும் ஆண்கள்
ஆணாதிக்கத்தின் எதார்த்தம்
எவ்வளவு பெரிய ஜாதி மயிராக இருந்தாலும்
வெட்டி முடித்தபின்பு கூட்டித் தள்ளுவது
சமத்துவத்தின் எதார்த்தம்
ருசியாய் சமையல் செய்து
ஏதும் மிச்சம் இல்லாததால்
பட்டினியாய் கிடக்கும் அம்மா
அன்பின் எதார்த்தம்
அவசரத்தில் ஓடும் இந்த உலகில்
அவரவர் பார்வையில்
அத்தனையும் எதார்த்தம்

8778998348
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!