சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் கதிரேசன் ஊரிலிருக்கும் அவனது அம்மா அப்பாவை அழைத்து வந்து தன்னுடன் வைத்துக் கொள்ள தீர்மானித்தான்.
தங்கியிருந்த வீட்டில் ஏசி, வாட்டர் கீட்டர், டீ.வி. பிரிட்ஜ், வாஷிங்மெஷின், கேஸ் அடுப்பு போன்ற சகல வசதிகளை செய்து வைத்துவிட்டு அவன் அம்மா அப்பாவை அழைத்து வந்தான்.
முதல் நாள் அவன் அம்மா கையால் சமைத்து சாப்பிட்டு விட்டு ‘ஆகா ஓகோ’வென்று பாராட்டினான்.
மறுநாள் வழக்கம்போல வேலைக்குச் சென்று இரவு பதினொன்று மணிக்கு வந்து மறுநாள் காலை ஐந்து மணிக்கு எழுந்து வேலைக்கு போய்விட்டான்.
ஒரு வாரம் ஓடிப் போனது.
“நாங்க ஊருக்குப் போறோம்!” என்று அவன் தந்தையும் தாயும் சொன்னபோது கதிரேசன் அதிர்ந்தான்.
“அப்பா, இங்க என்னப்பா குறையிருக்கு?
சகல வசதிகளோட சந்தோஷமாத் தானே இருக்கீங்க.
அப்பறம் ஏன் ஊருக்கு போறோம்னு சொல்றீங்க?” சற்று மிதமான கோபத்தில் கேட்டான் கதிரேசன்.
“நீ எங்களுக்கு எல்லா வசதிகளையும் செஞ்சு வெச்சது சரிதான்.
ஆனா நாங்க எதிர்பார்க்கிறது இந்த வசதிய இல்ல.
வயசான காலத்துல நீ எங்ககூட தினமும் கொஞ்ச நேரமாவாது சந்தோஷமா பேசி நேரத்த செலவளிக்கற அந்த தருணத்தத் தான். அது உன்கிட்டயிருந்து கிடைக்கல!”
சுருக்கென்று வலித்தது அவரது வார்த்தைகள் கதிரேசனுக்கு.
“என்ன மன்னிச்சிடுங்கப்பா!” என்று அவர்கள் காலில் விழுந்தவன், ஓவர் டைம், இரவு நேர வேலை இல்லாத வேறு வேலை தேடுவது என்ற முடிவோடு எழுந்தான்.
M.மனோஜ் குமார்
சென்னை
கைபேசி: 9789038172