எது அழகு? – சிறுகதை

எது அழகு என்ற இக்கதை எதார்த்தத்தை எடுத்துக்கூறி உண்மையை விளக்குகிறது. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

வர்ஷா நிறம் கருப்புதான் என்றாலும் அழகுச் சிலைதான். அது அவளுக்கே தெரியாது.

ஏனெனில் சிறுவயதிலிருந்தே அவளின் நிறத்தைக் கொண்டு அவளுக்குள்ளேயே நாம் அழகில்லை என்ற ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக் கொண்டாள்.

அதனால் கல்லூரியில் சேர்ந்து ஒரு மாதமாகியும் யாருடனும் சரியாக பேசவுமில்லை பழகவுமில்லை. ஆனால் படிப்பில் அவள்தான் முதல் இடம்.

கல்லூரிக்கு நேரமானது. வேகமாகச் சென்று கொண்டிருந்தாள் வர்ஷா. அவள் வருவதைக் கண்ட சகவகுப்பு தோழி மோனி வர்ஷாவை அழைத்தாள்.

மோனிக்கு வர்ஷாவை மிகவும் பிடிக்கும். அதனால் அவளே வலியச் சென்று பேசினால்கூட வர்ஷா ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேசுவதில்லை.

‘வர்ஷா ஏன் இப்படி இருக்கிறாள்?’ என்று அவளிடம் கேட்க வேண்டுமென்று பேச அழைத்தாள்.

‘மோனி, என்னை எதுக்கு கூப்பிட்ட?’

‘நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். மதியம் என்னோட வர்ரியா?’

வர்ஷா அவளையே பார்த்துவிட்டு ‘சரி’ என்றாள்.

‘இவள் என்னுடன் என்ன பேசப்போகிறாள்?’ என்று யோசித்துக் கொண்டே இருக்கும்போது இருவரும் வகுப்பிற்குச் சென்றனர்.

மதியம் சாப்பிட்டு முடித்த பின் இருவரும் ஒருமரத்தடியில் அமர்ந்திருந்தனர்.

எது அழகு?

‘வர்ஷா, இந்த கண்கள் இரண்டும் எப்படி இருக்குதுன்னு சொல்லு?’ என்று ஒருபுகைப்படத்தைக் காட்டினாள்.

‘மானின் கண்கள் போல் எவ்வளவு அழகா இருக்குது. பார்த்தவங்கள மறுபடியும் பார்க்கச் சொல்வது போல இருக்குது. எதுக்கு கேட்கிற மோனி?’

‘இது யாரோட கண்கள்ன்னு சொல்லு?’

‘உன்னோட கண்கள் மாதிரி இல்ல. ஆனால் யாருடையவைன்னு தெரியலை.’

‘உன்னோட கண்கள்தான் வர்ஷா. உன்னோட கண்களையே உனக்கே தெரியலை. நீ கண்ணாடியில உன்னோட முகத்தைப் பாக்குறியா இல்லையா?’

வர்ஷாவினால் நம்ப முடியவில்லை. ‘என்னுடைய கண்களா இவை’ என்று எண்ணியபடி மோனியையே பார்த்தாள்.

‘இவ எப்ப என்னை போட்டோ எடுத்தாள்?’ என்று எண்ணினாள் வர்ஷா.

“இரண்டு நாளைக்கு முன்னால உன்னோட பையிலிருந்து கணக்கு நோட்ட எடுத்திட்டுப் போனேனா. அப்போ தவறுதலா உன் டைரியையும் எடுத்திட்டுப் போய்டேன்.

அதுல நீ எழுதுன எல்லாதையும் படிச்சேன். உனக்குள்ளே ஏன் இப்படி ஒரு எண்ணம். உன் மேல உனக்கே நம்பிக்கையில்லையா?.

அழகுன்னா என்னன்னு நினைச்ச? இப்பத்தானே நீ உன் கண்களை பத்திச் சொன்ன.

கடவுளால் உருவாக்கப்பட்ட நாம் ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதத்தில் அழகுதான் வர்ஷா.

நான் நல்ல நிறம் என்பதால் அழகு கிடையாது. நீ நிறம் குறையா இருக்குறதால அழகா இல்லைன்னு அர்த்தமில்லை.

நாம பிறந்த போது இருந்த அதே அழகோடவா இருக்கோம். நமக்கு இப்ப இருபது வயசு. இன்னும் முப்பது வருசம் கழிச்சு நாம இதே அழகோடவா இருக்கப் போறம்.

கொஞ்சம் யோசிச்சு பார். இன்னும் பலவருசம் கழிச்சு ஆறடி மண்ணுக்குள்ள எலும்புக்கூடா இருப்போம்.

நமக்கு எதுவும் நிரந்தரமில்லை. எல்லாம் ஒருநாள் நம்மைவிட்டு அழிஞ்சு போயிடும்.

அப்படிப்பட்ட அழகுக்காக நாம இருக்கிற நாட்களை ஏன் வீணடிக்கணும்? மகிழ்ச்சியா இருக்கலாமே!

உன்னோட கண்கள் எவ்வளவு அழகுன்னு நீயேதான் சொன்ன. அந்த கண்கள்ல மகிழ்ச்சி இருந்தா இன்னும் எவ்வளவு அழகா இருக்கும்?”

மோனி பேசுவதையே கேட்ட வர்ஷா ஒன்றும் சொல்லாமல் யோசித்துக் கொண்டே சென்றாள்.

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த மோனி ‘கண்டிப்பா நாளை மாற்றத்துடன் வருவாள்’ என நினைத்துக் கொண்டாள்.

மறுநாள் மோனி நினைத்தது போலவே அழகுச் சிலையாக மாறி வந்தாள் வர்ஷா.

அவள் கண்களில் இருந்த மகிழ்ச்சி அவளை இன்னும் அழகாகவே காட்டியது. அனைவரும் வர்ஷாவின் மாற்றம் கண்டு அதிசயித்தனர்.

‘உன்னோட மகிழ்வான மானின் கண்களால்ல இன்னைக்கு எல்லோரையும் திரும்பி பார்க்க வைச்சுட்டாயே வர்ஷா’

‘அந்த கலையை சொல்லிக் கொடுத்ததே நீதானே, ரொம்ப நன்றி மோனி’

‘உனக்கு பேசக்கூடத் தெரியுமா?’ என்றாள் மோனி கிண்டலாக. இருவரும் சிரித்துக் கொண்டே கல்லூரிக்குள் சென்றனர்.

I.R.கரோலின்

மகிழ்ச்சியே உண்மையான அழகினை வெளிப்படுத்தும். ஆகையால் மகிழ்வுடன் வாழுங்கள் என்பதை எது அழகு என்ற இக்கதை விளக்குகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.