எது தேவையோ அதுவே தர்மம் குறும்படம், எது தர்மம் என உங்களை யோசிக்க வைக்கும்.
“எல்லாத்தையும் கடவுள் பார்த்துக்குவாருன்னா
நீயும் நானும் எதுக்கு”
என ஒவ்வொருவனும், அவனின் தேவைக்கேற்ப வாழ்க்கையை நெளித்து, சுழித்து, நிமிர்த்தி வாழ்ந்துட்டுப் போயிடறான்.
இதுல நீதிக்கு என்ன வேலை?
தர்மம் எது? இன்றையத் தேவைக்கு எது முக்கியமோ அதுவே தர்மம். அது அநீதியாக இருந்தாலும், அதுவே இங்கு தர்மம்.
இப்படித்தான் பயணிக்கப் போகிறது இப்படம் எனப் பார்த்துக் கொண்டே போகிறோம்.
ஆனால் எது சரியான தர்மமோ, அப்படியே வாழ்ந்து விடுவோம் என்ற கருத்தைச் சொல்லிப் படம் முடிகிறது.
ஊடாடும் உணர்வுகள்
போராட்டமான வாழ்வில் தர்மம் தளைக்க ஊடாடுவது உணர்வு மட்டுமே.
உணர்வின் தெறிப்பைத் தொட்டுச் சுகம் கண்டவன், அது என்ன கூறுகிறதோ, அதையே கேட்டு அதற்கே அடிமையாகி விடுகிறான்.
நல்ல இலக்கியத்தின் மையப்புள்ளியில், மானிட இனத்தின் உணர்வுகளே மிதமிஞ்சிப் பேசப்பட்டிருக்கின்றன. அங்கு அவைகள் அங்குலம் அங்குலமாக வருடிப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
உணர்வுகளை வெளிப்படுத்தாத எந்த இலக்கியமும், உலக இலக்கியத்தில், மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கவில்லை என்பர்.
இக்குறும்படம், உணர்வுகளை அள்ளித் தெளித்திருக்கிறது. எங்கு எந்த இடத்தில் தொட்டாலும், கதையில் உணர்வுகள் தான் மெல்லியதாகவும் உரக்கவும் பேசப்பட்டிருக்கின்றன.
தாய், தந்தை, மகன் இவர்களுக்குள் நடக்கும் உணர்ப்புப் போராட்டங்கள். அதுவும் தந்தையின் மனதில் எழும் பாச உணர்வுகள் படத்தை எங்கோ கொண்டு போய் நிறுத்தி இருக்கிறன.
வேறு பள்ளியில் சேர ஆசைப்படும் குழந்தையின் உணர்வு,
எப்பாடுபட்டாவது வேறு பள்ளியில் சேர்த்து விட ஆசைப்படும் தந்தையின் உணர்வு,
கணவன் தவறு செய்யக் கூடாதென வேண்டும் தாயின் உணர்வு,
மாணவர்கள் மேல் பாசம் காட்டும் ஆசிரியரின் உணர்வு,
படிக்க உதவும் மனம் கொண்ட அடியாட்களின் தலைவனின் உணர்வு
என்று ஒவ்வொரு கதாபாத்திரமும் தன் உணர்வுகளைக் காட்டுமாறு கதை அமைக்கப்பட்டுள்ளது.
எது தேவையோ அதுவே தர்மம் கதை
ஏழை அப்பா, கொலைகள் செய்யும் ரௌடி; முரட்டுக் குணம் உடையவன். ஆனால் தன் குடும்பம் என்கிறபொழுது அப்படியே மிருதுவாகிறான். கார்ப்ரேசன் பள்ளியில் படிக்கும் அவன் பையன் கான்வென்ட்டில் படிக்க ஆசைப்படுகிறான்.
“கார்ப்பரேசன் ஸ்கூல்ல படிச்சா நானும் உன்னை மாதிரி ஆயிடுவேனா அப்பா?” எனக் கேள்விகளால் துளைக்கிறான்.
பையனின் பேச்சுக்கள் சாட்டையடியாய் உள்ளுக்குள் தைக்கிறது. எப்படியாவது பணம் சம்பாதித்து பையனைக் கான்வெண்ட் பள்ளியில் சேர்ப்பது என முடிவு செய்து, ஒருவரைக் கொலை செய்ய முன்பணம் வாங்குகிறான். தன் மச்சானோடு சேர்த்து திட்டமிடுகிறான்.
திட்டமிட்டபடிக் கொலை செய்யப் போகும்போது, கொலை செய்யப்பட உள்ளவனின் கண் தெரியாத குழந்தையின் பேச்சு மனதை மாற்றுகிறது; கொலை செய்யாமல் வீடு திரும்புகிறான்; மனைவி மகிழ்கிறாள்.
பையன் புதுவாத்தியார் குறித்துப் பெருமையோடு கூறுகிறான். கான்வெண்ட் வேண்டாம்; கார்ப்ரேசன் ஸ்கூலே போதும், நான் இங்கேயே படிக்கின்றேன் எனக் கூறி, புது வாத்தியார் சொல்லித் தந்த ஆங்கிலத்தில் பேசிக் காட்டுகிறான்.
புதுவாத்தியாரோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தைக் காட்டுகிறான். அதில் கொலை செய்ய முயன்ற, கண் தெரியாத குழந்தையின் அப்பா புது வாத்தியாராக அமர்ந்திருக்கிறார்.
ஒரு குழந்தை தன் அப்பாவிடம் காட்டும் உணர்வுகளைத்தான், எல்லா வீடுகளிலும் எல்லாக் குழந்தைகளும், எல்லா அப்பாக்களிடமும் காட்டுகின்றனர்.
இக்குறும் படத்திலும் அப்படித்தான். ஆனால், ஒரு குழந்தையின் வார்த்தைகள், இன்னொரு அப்பாவின் உயிரைக் காப்பாற்றுகிறது. இதற்குக் காரணம் குழந்தைகளின் அதே வார்த்தைகள்.
உருக வைக்கும் காட்சிகள், நெளிய வைக்கும் காட்சிகள் திணறடிக்கும் காட்சிகள், கதற வைக்கும் காட்சிகள் என இதுபோல் ஒவ்வொரு காட்சியிலும் உயிரோவியத்தை வரைந்து வைத்திருக்கிறார் இயக்குநர்.
இயல்பை இயல்பாய் உலவ விட்டுப் படத்திற்குள் நிசமாக்கி இருக்கின்றார். ஏழை வீடு, ரௌடி வீடு, மழை, தெருக்கள், மோட்டார் வண்டி, வீட்டின் கதவுகள், படுக்கை, கான்வெண்ட் பள்ளி, புகைப்படம், சமையல் பாத்திரங்கள் என ஒவ்வொரு ப்ரேமிலும் இவை எல்லாவும் நடித்திருக்கின்றன இயல்பாய். நெருடலே இல்லாத காட்சி அமைப்புகள்.
இசையின் மொழி, பார்ப்பவரின் உள்ளத்தை தூக்கிக் கொண்டு போய் வலியின் துயரை அனுபவிக்க வைத்து விடுகிறது. அடடா என்ன இசை? படம் முடியும் போது சோகத்தைக் கவ்வித் துப்புகிறது.
சமூகச் சாடல்கள்
கான்வெண்ட் பள்ளிகள் மாணவர்களைச் சேர்க்கச் செய்யும் அட்டுழியங்களைத் தோலுரித்துக் காட்டுகின்றன காட்சிகள்.
மோசடித் தொழிலாகிப் போன கல்வி நிலையங்களின் மேல் மோகம், மக்களிடம் இன்னும் இருக்கிறது என்பதையும், கடைசியில் கார்ப்பரேசன் பள்ளியே சிறந்தது என்பதையும் விளக்கியுள்ளது.
கொலை செய்ய அடியாட்கள் ஏற்பாடு செய்வது, சமூகத்தில் இன்று புரையோடி இருக்கிறது. அடியாட்களின் ஏழ்மைத்துவம் இவ்வேலையைச் செய்ய வைக்கிறது என்பதை வெளிப்படுத்தி உள்ளது இப்படம்.
இரண்டு கோடிப் பார்வையாளர்கள்
33 நிமிடங்கள் ஓடும் இக்குறும்படம், முழுநீளப் படத்திற்கான அத்தனை அம்சங்களையும் உடையது.
யூ-ட்யூபில்-2020-ல் வெளியிடப் பெற்று, இதுவரை 2,635 விமர்சனங்களைப் பெற்றுக் கிட்டத்தட்ட இரண்டு கோடிப் பார்வையாளர்கள் இக்குறும்படத்தைப் பார்த்திருப்பது சிறப்பாகும்.
விமர்சகர்கள் யாரும், எது தேவையோ அதுவே தர்மம் கதை குறும்படம் பற்றி சிறிது கூடக் குறை கூறவில்லை என்பது மற்றொரு சிறப்பு.
15-க்கும் மேற்பட்ட குறும்படப் போட்டிகளில் விருதுகளைப் பெற்ற படம்.
நடிகர்களாக, சீனி அப்பாவாகவும், திரௌபதி திரைப்பட நடிகை ஷீலா ராஜ்குமார் அம்மாவாகவும், மாஸ்டர் லிங்கேஷ் இவர்களின் பையனாகவும் நடித்துள்ளனர்.
யாரும் சோடை போகவில்லை. இதை விட யாரும் நடித்து விட முடியாது. நடிப்பின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார்கள். வசனங்கள் ஆழமானவை, அழுத்தமானவை.
இசை: தீசன்
படத்தொகுப்பு: தமிழ் குமரன்
கலை: சூர்யா
இயக்கம்: து.ப.சரவணன்
யூ-ட்யூப்-ல் வாசகரின் கடிதமொன்றில்
மல்லிகா செந்தில் 11 மாதங்களுக்கு முன் இவ்வாறு கூறுகிறார்.
”ஒரு மிகப் பெரிய வெற்றிப் படத்திற்கான கதை. அருமையான இயக்கம் வாழ்த்துக்கள்!
நானும் தமிழ் வழிக்கல்வியில் வந்தவள்தான். பள்ளி முக்கியம் தான். ஆனால் பள்ளி மட்டுமே முக்கியமல்ல. நமக்கு கிடைக்கும் ஆசிரியர்கள் மிக முக்கியம். படிப்பவன் எங்கு இருந்தாலும் படிப்பான். நல்ல இயக்கம், வசனங்கள் மிக அருமை, நடிப்பு அருமை. நீங்கள் எல்லோரும் வெள்ளி திரையில் ஜொலிக்க என் வாழ்த்துக்கள்.
தேவைகள் தர்மம் ஆகவில்லை.
தர்மங்கள் தேவையாகின்றன.
குறும்படத்தைக் காண கீழே உள்ள காணொளியை சொடுக்கவும்.
(குறும்படம் விரியும்)
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com
திரைக்கதை போல் ஒரு விமர்சனம்.
படித்தவுடன் படத்தை பார்க்க வேண்டும் என்று ஆவல் அதிகரித்தது.
படம் பார்த்தபின் அய்யாவின் விமர்சனம் படிக்க வில்லை என்றால் இந்த படத்தை பார்க்க முடியாமல் போயிருக்கும் என்று தோன்றியது.
குறும் படம் பெரும் தாக்கம்…
லாவகமாக சொல்ல பட்ட விமர்சனம்…
மெருகு ஏறிய வார்த்தைகள்…
படத்தை பாராட்டுவதா?
விமர்சனத்தை பாராட்டுவதா?
விமர்சனம் சிறப்பு வாழ்த்துகள் ஐயா தொடர்ந்து எழுதுங்கள்….
சிறந்த விமர்சனம் தோழர்..