சோலை வனம் என்ற ஒரு அழகிய கிராமம் இருந்தது. அது தன் பெயருக்கு ஏற்றபடி நிறைய மரங்கள், வயல்வெளிகளைக் கொண்டு செழிப்பாக இருந்தது.
அந்த கிராமத்தின் கோடியில் ஒரு பழுதடைந்த குடிசை ஒன்று இருந்தது. யாரோ வசித்துவிட்டுப் போன குடிசை அது. அக்குடிசையில் பார்வை அற்றவர் ஒருவரும், கால்களை இழந்து முடமான ஒருவரும் வசித்தனர்.
அவ்விருவரும் பிழைப்பதற்காக பார்வையற்றவர் தோளில் கால்களை இழந்தவர் அமர்ந்து வழிகூற கடைத்தெரு மூடும்போது கடைவீதிக்கு செல்வர்.
மிஞ்சிய காய், கனி, உணவுப்பொருட்களை மக்கள் அவர்களுக்குத் தருவர். அதனை உணவாக்கி அவர்கள் வாழ்ந்து வந்தனர்.
ஒரு சமயம் அவ்வூரில் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் எல்லோரும் உணவுக்காக அலைந்து திரிந்தனர். பஞ்சம் வந்தபிறகு கடைத்தெரு பெரும்பாலும் அடைத்தே கிடந்தது.
எப்போதாவது கடைகள் திறந்திருந்தாலும் முடவருக்கும், பார்வையற்றவருக்கும் எதுவும் கிடைப்பதில்லை. இருவரும் பெரும்பாலான நாட்களில் பட்டினி கிடந்தனர்.
தொடர்ந்து ஐந்து நாட்கள் பட்டினியில் இருந்த நிலையில் அவர்கள் இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர். உயிரைக் காப்பாற்ற எதையும் செய்யத் துணிந்தனர்.
அந்த ஊரின் கடைசியில் ஊர்த்தலைவரின் தோட்டம் இருந்தது. அத்தோட்டத்திற்கென்று தனிப்பட்ட பம்செட் வசதியினால் தோட்டம் பஞ்சத்திலும் செழித்திருந்தது.
ஊருக்குள் யாரும் அத்தோட்டத்தை நெருங்கப் பயந்தனர். தோட்டத்தில் அனுமதியின்றி நுழைந்தால் அடிஉதை நிச்சயம். இதனை தெரிந்திருந்தும் பார்வையற்றவரும், முடமானவரும் அத்தோட்டத்தை அடைய திட்டமிட்டனர்.
பார்வையற்றவரின் தோளில் முடமானவர் அமர்ந்து வழிகாட்ட இருவரும் ஊர்தலைவரின் தோட்டத்தை அடைந்தனர். தோட்டத்தில் காய்களும், பழங்களும் குவிந்து கிடந்தன.
முடமானவரை தோட்டத்திற்கு வெளியே இறக்கிவிட்டு பார்வையற்றவர் மட்டும் தட்டுத் தடுமாறி தோட்டத்திற்குப் போய் இரண்டு மூன்று நாட்களுக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு வந்தார். பார்வையற்றவர் முடமானவரை சுமந்து கொண்டு குடிசைக்குத் திரும்பினார்.
நெடுநாளைக்குப் பிறகு அன்றுதான் அவர்கள் வயிறார உண்டு உறங்கினர். காலையில் எழும்போதே பெரும்கூச்சல் கேட்டது.
ஊர் முச்சந்தியில் நின்று ஊர் தலைவர் “யாரடா என் தோட்டத்தில் இறங்கி திருடியவன்?” என்று கத்திக் கொண்டு இருந்தார். ஊர் மக்கள் எல்லோரும் ‘என்ன நடக்குமோ?’ என கைகட்டி பயந்து நடுங்கினர்.
யாரும் திருட்டை ஒப்புக் கொள்ள முன்வராததால் ஊர்தலைவர் நீதிதேவதையின் கோவிலுக்குப்போய் மண்டியிட்டு வேண்டி நீதி தேவதையிடம் திருடனை பிடித்து தண்டிக்குமாறு வேண்டினார்.
ஒவ்வொருவரும் நீதிதேவதையின் முன்வந்து உண்மையைச் சொல்ல வேண்டும். திருடியவரை நீதிதேவதை கண்டுபிடித்துவிடும். பொய் சொன்னாலும் கண்டுபிடித்துவிடும். தவறு செய்தவரின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிடும்.
ஊர் மக்கள் ஒவ்வொருவராக வந்து தான் திருடவில்லை என்று வாக்குமூலம் அளித்தனர். யாரையும் நீதிதேவதை கொல்லவில்லை.
மீதியிருப்பது பார்வையற்றவரும் முடமானவரும் தான். யாருக்கும் அவர்கள் நினைவு வரவில்லை. ஊர்தலைவர் சட்டென நினைவு வந்தவராக “அந்த இரண்டு பயல்களையும் இழுத்துட்டு வாங்கடா” என்று கத்தினார்.
இருவரும் தடுமாறி வந்தனர். ஊர் மக்களுக்கு கண்கள் கலங்கின. நீதிதேவதையின் முன் முதலில் பார்வையற்றவர் “தேவதையே நான் பிறவிக்குருடன். என்னால் எதையும் பார்க்க முடியாது. தலைவர் தோட்டத்தை நான் பார்த்ததில்லை” என்றார். தேவதை அவரை எதுவும் செய்யவில்லை.
அடுத்து முடமானவர் “அம்மா நான் பிறவியிலேயே முடவன். நடக்க முடியாதவன். தலைவர் தோட்டத்தில் என் கால் படவேயில்லை” என்றார். கால் இழந்தவரையும் தேவதை எதுவும் செய்யவில்லை.
‘அப்படியானால் திருடியது யார்? நீதிதேவதை கோவிலை விட்டு வெளியே வந்தபின் குற்றவாளியை தண்டிக்காமல் போகுமா?’ என ஊர் மக்களுக்கு ஒரே வியப்பு.
அப்போது எதிர்பாராத நிகழ்வு ஒன்று நடந்தது. கண்ணுக்குத் தெரியாத இரு கைகள் ஊர் தலைவரின் கழுத்தை நெரித்தன. ஊர்த்தலைவர் சுருண்டு விழுந்து இறந்தார்.
அப்படியானால் ஊர்தலைவர்தான் திருடரா? இதென்ன ஆச்சர்யம் என்று எண்ணினர். ஆனாலும் உள்ளுக்குள் இரக்கமில்லா தீயவன் ஒழித்தான் என்று மனதுக்குள் மகிழ்ந்தனர்.
ஊர்மக்கள் நீதிதேவதையிடம் “ஊர் தலைவரைக் கொன்றது ஏன்?” என்று கேட்டனர்.
“சிறிய உண்மையைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. உண்மைகளிலேயே பெரிய உண்மையைத்தான் நான் தேடுவேன். ”
“திருடர்களைவிட திருடத் தூண்டியவர்களையே நான் தண்டிப்பேன். ஊர்மக்கள் உணவிற்காக அலையும்போது மொத்த உணவுப்பொருளையும் குவித்து வைத்திருப்பவனே பெரிய திருடன். ஆகவே குற்றவாளியைத் தண்டித்தேன்” என்று நீதிதேவதையின் குரல் உறுதியாக ஒலித்தது.
“ஆமாம் அதுவும் சரிதான்” என்றது மக்கள் கூட்டம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!